தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-வினையடையின் வளர்ச்சி வரலாறு

  • 6.5 வினையடையின் வளர்ச்சி வரலாறு

        பண்பு அடிச்சொல்லோடு வினையடை விகுதிகளாகிய அ, உ என்பன சேர்ந்து வினையடைகள் தமிழில் உருவாகின்றன. இவை வினைச்சொற்களுக்கு முன்னர் வந்து, அவ்வினைச்சொற்கள் உணர்த்தும் வினையைச் (செயலை) சிறப்பிக்கின்றன.

        சான்று :

        மெல்ல வந்தான்

        இத்தொடரில் மெல்ல என்பது வந்தான் என்ற வினைக்கு முன் வந்து, அவ்வினை உணர்த்தும் செயல் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விளக்குகிறது. எனவே மெல்ல என்பது வினையடை ஆகும். மெல்ல வந்தான் என்பதை ஆங்கிலத்தில் He came slowly என்று கூறுவர். எனவே ஆங்கிலத்தில் Slowly  என்பது வினையடை (Adverb) எனப்படும்.

        இத்தகைய வினையடைகள் சங்க காலம் முதல் தற்காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய நூல்களில் வழங்கி வருகின்றன.

    6.5.1 சங்க காலத்தில் வினையடைகள்

        சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் வினையடைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. மெல், நல், பெரு, சிறு போன்ற பண்பு அடிச்சொற்கள் அ, உ என்னும் வினையடை விகுதிகளுடன் சேர்ந்து மெல்ல, நன்கு, பெரிது, சிறிது என்ற அடைகளாகி, வினைச்சொற்களுக்கு முன்னர் வந்து அச்சொற்களின் பொருளைச் சிறப்பிக்கின்றன.

  • மெல்ல
  •     மெல் (மென்மை) என்ற பண்பு அடிச்சொல்லோடு என்னும் வினையடை விகுதி சேர்ந்து இவ்வினையடை உருவாகிறது.

        மெல்ல வந்துஎன் நல்லடி பொருந்தி
                 (புறநானூறு, 73
    : 1)

        (மெல்ல வந்து - மெதுவாக வந்து)

  • நன்கு
  •      நல் என்ற பண்பு அடிச்சொல்லோடு என்னும் வினையடை விகுதி சேர்ந்து இவ்வினையடை உருவாகின்றது.

        தவறு நன்கு அறியாயாயின் (நற்றிணை, 315 : 10)

    (தவறும் வாராதபடி நன்றாக அறிந்துகொள்வாய் எனில்)

  • பெரிது
  • ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே
             (புறநானூறு, 278
    : 9)

        (போர்க்களத்தில் தன் மகன் விழுப்புண்பட்டு இறந்து கிடப்பதைக் கண்ட தாய், அவனை ஈன்ற பொழுதைக் காட்டிலும் பெரிதும் மகிழ்ந்தாள்)

  • சிறிது
  • அன்னையும் சிறிது தணிந்து (நற்றிணை, 115 : 3)

    (அன்னையும் நம்மீது கொண்ட கோபம் சிறிது தணிந்து)

  • இனிது
  • . . . . . . . . . . . . மாஅ யோெளாடு
    புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல்லூர்
             (நற்றிணை, 139
    : 7-8)

    (தலைவியோடு கூடி, அவளது அழகினை இனிதாக நுகர்ந்து யான் உறைகின்ற ஊர்)

        பண்பை உணர்த்தும் அடிச்சொற்களோடு அ, உ என்னும் விகுதிகளைச் சேர்த்து வினையடைகள் உருவாக்கப்படுவதே பெரும்பான்மை. ஆனால் சங்க இலக்கியத்தில் வினையை உணர்த்தும் அடிச்சொற்களாகிய நிறை, மிகு, ஆர் என்பனவற்றோடு, என்னும் விகுதி சேர்ந்து, ிறைய, மிக, ஆர என்று அமைந்த வினையடைகளும் சிறுபான்மை காணப்படுகின்றன. ஆனால் இவ்வினையடைகள் காலம் காட்டுவது இல்லை.

  • நிறைய
  • பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
             (புறநானூறு, 115
    : 2)

    (பாணர் கையில் ஏந்திய மண்டை போன்ற வடிவினை உடைய பாத்திரத்தில் மதுவினை நிறையுமாறு பெய்வார்கள்)

  • மிக
  • உலகுமிக வருந்தி அயாவுறு காலைச்
    சென்றனர் ஆயினும் (நற்றிணை, 164
    : 3-4)

    (கதிரவன் வெப்பத்தால் உலகம் மிக வருந்தித் துன்புற்ற காலத்துத் தலைவர் நம்மைப் பிரிந்து சென்றாராயினும்)

  • ஆர்
  •     ஆர் என்ற வினை அடிச்சொல்லுக்கு நிறைதல் என்று பொருள். இதனோடு என்னும் ஒட்டுச் சேர்ந்து, ஆர என்னும் வினையடை உருவாகிறது. இதற்கு நிறைய என்று பொருள்.

        மான்மறி, சுரைபொழி தீம்பால் ஆர மாந்தி
             (குறுந்தொகை, 187
    : 1-2)

    (மான் குட்டி தன் தாயின் மடியினின்று சுரக்கின்ற இனிய பாலை வயிறு நிறைய உண்டு)

        தற்காலத்தமிழில் ‘வயிறார உண்டான்’ என்று வழங்குவதில் ஆர என்பது நிறைய என்ற பொருளில் வருவது இங்கே கருதத்தக்கது.

    6.5.2 இடைக்காலத்தில் வினையடைகள்

        சங்க காலத்தைப் போலவே பண்பு அடிச்சொற்களினின்று உருவாக்கப்பட்ட மெல்ல, நன்கு, சிறிது, பெரிது போன்ற வினையடைகளும் வினை அடிச்சொற்களினின்று உருவாக்கப்பட்ட மிக, நிறைய போன்ற வினையடைகளும் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் காணப்படுகின்றன.

  • மெல்ல
  • விழித்து வெய்து உயிர்த்து மெல்ல நடுங்கி
             (சீவகசிந்தாமணி, 715
    : 2)

    (திகைத்துப் பெருமூச்செறிந்து மெல்ல நடுங்கி)

  • நன்கு
  • நயனம் நன்கு இமையார்
             (கம்பராமாயணம், 4571
    : 1)

    (கண்களை நன்றாக இமைக்கமாட்டார்கள். நயனம் - கண்)

  • சிறிது
  • ஆசையால் உழலும் கூற்றும்
    சுவைசிறிது அறிந்தது அன்றே.
             (கம்பராமாயணம், 417
    : 4)

    (உண்ணும் ஆசையால் மனம் சுழலும் எமனும் அன்றைய போரில் ஊன் சுவையைச் சிறிதாக அறிந்தான்)

  • பெரிது
  • ஆசையோ பெரிது கொள்க
    அலைகடல் வண்ணன்பால்
         (நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 2487
    : 4)

    (பாற்கடலில் பள்ளிகொண்ட மணிவண்ணனிடம் ஆசை மிகவும் கொள்க)

  • மிக
  • மிக விரும்பும் பிரான் என்றும்
         (நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 2930
    : 2)

    (மிகவும் விரும்பும் கடவுள் என்றும்)

  • நிறைய
  • . . . . . . . . அம் பொற்கலம்
    நிறைய ஆக்கிய நெய்பயில் இன்னமுது
             (சீவகசிந்தாமணி, 131 : 2-3)

    (அழகிய பொற்கலத்திலே நிறையச் சமைத்த நெய் கலந்த சோறு)

    6.5.3 தற்காலத்தில் வினையடைகள்

        தற்காலத்தமிழில்     பெயரடைகளைப் போலவே வினையடைகளின் எண்ணிக்கையும் ஆட்சியும் அதிகமாக உள்ளன. தமிழ்ச்சொல் பாகுபாட்டில் பெயரடையைப் போலவே வினையடையும் தனி ஒரு பிரிவாகத் தற்கால மொழியியலாரால் கொள்ளப்படுகின்றது.

        மொழியியலார் தற்காலத்தமிழில் வழங்கும் வினையடைகளை, பெயரடைகளைப் போலவே தனிவினையடை (Simple adverb) எனவும் ஆக்க வினையடை (Derived adverb) எனவும் இருவகையாகப் பிரித்து விளக்குகிறார்கள்.

    • தனி வினையடை

        பண்பு அடிச்சொல்லோடு உ, அ என்னும் வினையடை விகுதிகள் சேர்ந்துவரும் நன்கு, சிறிது, பெரிது, மெல்ல, பைய, நிரம்ப, நிறைய போன்றவை தனி வினையடைகளாகத் தற்காலத் தமிழில் வழங்குகின்றன.

        சான்று :

        நன்கு பேசினான்

        சிறிது தந்தான்

        பெரிது உவந்தான்

        மெல்லச் சிரித்தாள்

        பையப் போனான்

        உரக்கக் கத்தினான்

        நிரம்ப உண்டான்

        நிறையக் கற்றான்

        அடிக்கடி, இனிமேல், இன்னும், மறுபடியும், மீண்டும், திரும்பவும் போன்ற சொற்கள் தற்காலத்தமிழில் வினையடைகளாக வருகின்றன.     இச்சொற்களைப்     பார்க்கும்போது அவை வினையடைகளா அல்லது சொல்லுருபுகளா என்று கூறமுடியாத அளவில் உள்ளன.

        சான்று :

        என் வீட்டிற்கு அடிக்கடி வந்தான்

        என் வீட்டிற்கு இனிமேல் வராதே

        என் வீட்டிற்கு மறுபடியும் வந்தான்

        என் வீட்டிற்கு மீண்டும் வந்தான்

        என் வீட்டிற்குத் திரும்பவும் வந்தான்

  • ஆக்க வினையடை
  •     பண்பைக் குறிக்கும் பெயர்ச்சொற்களோடு ஆக அல்லது ஆய் என்னும் ஆக்கச்சொல்லை விகுதியாகச் சேர்ப்பதால் அமைகின்ற வினையடைகள் ஆக்க வினையடைகள் எனப்படும்.

         வேகம், ஆத்திரம், கோபம், வெறுப்பு, கூச்சல், வளர்த்தி, செம்மை, பசுமை, நேர் முதலான சொற்களுடன் ஆக அல்லது ஆய் சேர்ந்து ஆக்க வினையடைகள் உருவாகி அமைவதைத் தற்காலத்தமிழில் நிரம்பக் காணலாம்.

        சான்று :

        அவன் வேகமாய் ஓடினான்

        அவன் ஆத்திரமாகப் பேசினான்

        அவன் கோபமாய்ப் பார்த்தான்

        வரவர வாழ்க்கையே வெறுப்பாய்ப் போய்விட்டது

        வகுப்பறையில் கூச்சலாய் இருக்கிறது

        அவன் நல்ல வளர்த்தியாக உள்ளான்

        அவன் வேலையைச் செம்மையாகச் செய்தான்

        வயல்வெளி பார்ப்பதற்குப் பசுமையாக இருந்தது

        அவன் நேராக நடந்தான்

        மேலும் ஒரு பொருளை அல்லது தொழிலைக் குறிக்கின்ற பெயர்ச்சொற்கள், காலத்தைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள், எண்ணுப் பெயர்கள் சிலவற்றோடு ஆக அல்லது ஆய் சேர்ந்து ஆக்க வினையடைகள் உருவாகி அமைவதையும் தற்காலத்தமிழில் காணலாம்.

        சான்று :

        அவன் பெட்டிப்பாம்பாக அடங்கினான்

        அவன் ஒரு வேலையாகச் சென்னைக்கு வந்தான்

        அவன் பத்து மாதமாக வேலை செய்து வருகிறான்

        கரும்பை இரண்டாக வெட்டு

        இவைபோன்ற     பலவகைகளில் தற்காலத்     தமிழில் வினையடைகள் அமைந்து வருகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 10-08-2017 12:20:54(இந்திய நேரம்)