Primary tabs
-
6.2 தற்கால இலக்கணப் பகுப்புமுறை
மொழியில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு ஏற்றபடி அந்த மொழியில் காணும் சொற்களின் வகைப்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டே தீரும். இந்த உண்மையை நன்கு உணர்ந்து இருந்ததால்தான் நன்னூலார்,
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே
(நன்னூல், 462)என்றார்.
நீங்கள், மொழியியல் அடிப்படையில் பாடத்தினைப் படிக்க இருப்பதால் இலக்கணக்கூறுகளைப் பற்றிய ஒரு சில செய்திகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
மொழி ஆராய்ச்சியில் தொடரியல் (syntax) ஆராய்ச்சிக்கு எப்போதும் முதன்மையான இடம் உண்டு. அவ்வாறு தொடரியியலைப் பற்றி ஆராயும்போது அதன்பால் அமைந்துள்ள சொல்வகைப்பாட்டினைப் பிரிக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு சொற்களைப் பிரிப்பதால் அவற்றை இலக்கணக்கூறு (grammatical category) எனலாம்.
இலக்கணக்கூறுகளைப் பற்றி நாம் மேலும் நுட்பமாகத் தெரிந்து கொள்வதற்கு முன் இலக்கணத் தொழிற்பாடுகளையும் (grammatical functions) தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு சொற்றொடரில் பெயர்ச்சொல் அது வரும் இடத்திற்கு ஏற்ப எழுவாயாகவும் பயனிலையாகவும் செயல்படுகின்றது.
சான்று :
மரம் விழுந்தது
என்ற சொற்றொடரில் மரம் என்பது எழுவாய் ஆகும்.
இது ஒரு மரம்
என்ற சொற்றொடரில் மரம் என்பது பயனிலை ஆகும்.
மரம் என்ற பெயர்ச்சொல் ஒரு தொடரில் எழுவாயாகவும் இன்னொரு தொடரில் பயனிலையாகவும் அமைகிறது. இச்சொற்றொடர்களில் வரும் மரம் என்பது பெயர்ச்சொல். இப்பெயர்ச்சொல்லை இலக்கணக்கூறு என்றும் எழுவாய், பயனிலை என்பனவற்றை இலக்கணத் தொழிற்பாடு என்றும் தற்காலத்தில் மொழியியலார் பிரிக்கின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களில் வழங்கி வரும் சொற்களை நான்கு வகையான (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்) பாகுபாட்டிற்குள்ளே அடக்கிவிடலாம் என்று முன்பே சில பாடங்களில் படித்துள்ளோம். அவ்வாறு நான்கு வகைப்பாட்டில் வைத்துத் தற்காலத்தமிழை அடக்கமுடியாமல் இருந்ததாலும் மேல்நாட்டு அறிஞர்கள் ஆங்கில மொழியை எட்டு வகைப்பாட்டில் அடக்கியதாலும் மேல்நாட்டுத் தமிழ் அறிஞர்கள் அதனைப் போன்றே தமிழ்மொழியையும் எட்டு வகையாகப் பிரிக்கலானார்கள்.
(1) பெயர்ச்சொல் - noun
(2) வினைச்சொல் - verb
(3) சொல்லுருபு - postposition
(4) பெயரடை - adjective
(5) வினையடை - adverb
(6) அளவையடை - quantifier
(7) அடைகொளி அடை - determiner
(8) இணைப்புக்கிளவி - conjunction
இவற்றின் அடிப்படையில் தமிழ்மொழியினை ஆராயலானார்கள். இவ்வாறாகப் பெயரடை, வினையடை என்ற இரு இலக்கணக் கூறுகள் தொடரியல் அடிப்படையில் தமிழ்மொழியை ஆராய்வதற்காகப் பயன்படலாயிற்று. பல காரணங்களால் புதிய புதிய இலக்கணக்கூறுகள் தோன்றலாயின. அவ்வாறு தோன்றும் இலக்கணக்கூறுகள் நாளடைவில் பெருகி வருவதையும் காணமுடிகிறது.