Primary tabs
- 3.2 சொற்களின் வேர்ப்பொருளும் மாற்றமும்
தமிழில் வழங்கும் பல சொற்களுக்கு அடிப்படையான பொருளை, அண்மை, சேய்மை, கீழ், மேல் என்ற இந்த நால்வகை இடைச் சார்புகளுள் ஒன்றனைக்கொண்டு புரிந்து கொள்ளலாம். மக்களுக்கு இருக்கின்ற ஐம்பொறிகளுக்கு ஏற்ப, அவர்கள் பொருட்களுக்குப் பெயரிட்டு வழங்கினர். அவர்தம் எண்ணங்கள் உருவாகி, பின்பு விரியும் தன்மை அடைந்த போது அவ்வைம் பொறிகளுள் சிறந்த கண்ணைக்கொண்டு பொருளின் அவாய் நிலையினை உணர்ந்தனர். (அவாய்நிலை = ஒரு சொல் தன்னோடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொரு சொல்லை வேண்டி நிற்கும் நிலை)
எடுத்துக்காட்டாக, கண்ணால் கண்ட பொருளை அருகில் உள்ளது, தொலைவில் உள்ளது, கீழே உள்ளது, மேலே உள்ளது என்னும் இடைச் சார்பைத் துணையாகக் கொண்டு சொல்லுக்குரிய பொருளை முடிவு செய்தனர்.
இவ் இடச் சார்பைக் கொண்டே அகலம், நீளம், தாழ்வு, உயர்வு என்னும் நால்வகை அளவில் தம் உணர்வை உள்ளத்தில் செலுத்தி, சொல்லுக்குப் பொருளை ஏற்படுத்தினர். மென்மை, கடுமை, இரக்கம், இறுக்கம் என்பனவும் அளவே என்றாலும் இவற்றை நுண்ணறிவால் மட்டுமே உணர முடியும் என்பதையும் மக்கள் உணரத்தொடங்கினர். இவ்விடச் சார்பு பற்றிய பொருளே முதன்மையாக நிற்க, சொல்லுக்குரிய பிற பொருள்கள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டன எனலாம்.
இவ் ஆய்வு முறைப்படி செய்யப்படவில்லை. எனவே, அகராதிகளில் சொல்லுக்குரிய பொருட்கள், படிநிலைகளாக அமையாமல் தனித்தனியே நிற்கின்றன. மேலைநாட்டு அகராதிகள் பல, முதலாவதாகச் சொல்லினது அடிப்பொருளையும், பிறகு அவ் அடிப்பொருளோடு தொடர்புடைய விரிந்த பிற பொருட்களையும் செம்மையாக அளித்திருத்தலைக் காணலாம்.
தமிழ் மொழியிலும் சொற்பிறப்பாய்வு, முறையாகச் செய்யப்பட்டு, ஒரு வரன்முறைக்குள்ளே அமைந்தால், சொல்லுக்குரிய படிநிலை சிறப்பாக அமையும் எனலாம்.
சான்றாக, சென்னைப்பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதியிலிருந்து ஒரு சொல்லை எடுத்துக்காட்டலாம்.
(எ.கா.) எழில்
(1) Beauty, comeliness, gracefulness;
அழகு. எழுதெழி லம்பலம் (பரி.பா.18:28)(2) இளமை ; youth, (சூடா.)
(3) தோற்றப்பொலிவு ; Imposing appearance
நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம் (குறள். 407)(4) உயர்ச்சி ; Height, Loftiness, elevation
பகட்டெழின் மார்பின் (புறநா.13)(5) பருமை ; Bigness, bulkiness எழிற்கலை புலிப்பாற்
பட்டென (புறநா.23)(6) வலி ; Strength (பிங்.)
(7) வர்ணம் ; Colour, colouring, paint (w.)
(8) சந்தேகிக்கக்கூடிய நிலைமை ; Suspicious
Circumstance (J)(9) குறிப்பு, எழிலறியாதவன் ; Hint (w.)
(10) சாதுரிய வார்த்தை ; Witticism, eprigram
மேற்கூறிய எடுத்துக்காட்டிலிருந்து, ஒரு சொல்லின் பொருள் அடைந்து வரும் பல்வேறு பொருள் மாற்றங்களை நன்கு உணர முடிகிறது.