தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    தமிழக வரலாற்றில் பொற்காலம் என அழைக்கப்படும் சங்க காலத்தில், தமிழகம் கலைகளின் தாயகமாக விளங்கியது. கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், இசை, கூத்து எனப் பல்வேறு கலைகள் சிறந்து விளங்கின.

    சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும், சிற்பக் கலையும் ஓவியக் கலையும் சிறந்து விளங்கின. இவற்றின் மாட்சியை இன்று நாம் இலக்கியச் சான்றுகளைக் கொண்டு மட்டுமே அறிய இயலுகிறது. அக்காலத்தில் சிற்பங்கள் சுதையாலும் (சுண்ணாம்புக் காரை), மரத்தாலும் செய்யப்பட்டதால் கால வெள்ளத்தில் அழிந்து விட்டன.

    தமிழகத்தில் முதன் முதலாகக் கோயில் கட்டுவதற்குக் கற்கள் பயன்படுத்தப் பட்டமையைப் பல்லவர் காலம் முதலே அறிய இயலுகிறது. ஆயினும் பல்லவர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழகத்தில் நடுகல் வழிபாடு இருந்து வந்துள்ளது என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது.

  • நடுகற்கள்
  • தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே நடுகற்கள் கிடைத்துள்ளன. இவை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலம் முதல் விசயநகர - நாயக்கர் காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றினைக் கொண்டுள்ளன.

    நடுகல் என்பது போரில் இறந்துபட்ட அல்லது பொதுமக்களது நல்வாழ்விற்காக உயிர் துறந்த வீரனது நினைவாக அமைக்கப்படுவதாகும். இது வீரக்கல் (Hero Stone) அல்லது நினைவுக்கல் (Memorial Stone) என வழங்கப்படும்.

    வீரக்கல் (Hero Stone)

    இறந்துபட்ட வீரனின் உருவத்தை அவன் செய்த வீரதீரச் செயலைக் காட்டும் சிற்பமாகச் செதுக்கி அவனது பெயரையும், சிறப்பையும் கல்லெழுத்துகளில் பொறித்து வைப்பர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள இருளப்பட்டி என்ற இடத்தில் இரு நடுகற்கள் கிடைத்துள்ளன. இந்நடுகல் சிற்பங்களில் வீரர்கள் வாளும் கேடயமும் ஏந்தியுள்ளனர். இவற்றில் வட்டெழுத்தால் ஆகிய கல்வெட்டும் உள்ளது. இத்தகைய நடுகற்களே தமிழகத்தில் கிடைக்கும் கற்களால் ஆன முதல் சிற்ப வகையாகும்.

    அதன் பின்னர்ப் பல்லவர்களே முதன்முதலாகக் கற்களைக் கோயில் கட்டவும், இறையுருவைச் செய்யவும் பயன்படுத்தியவர் ஆவர்.

    பல்லவ மன்னன் மகேந்திர வர்மன், சாளுக்கியரோடு அரசியல் தொடர்பு கொண்டிருந்தான். அதன் காரணமாக வாதாபியில் இருந்த குடைவரை மரபினைப் பின்பற்றித் தொண்டை மண்டலத்தில் குடைவரைகளை அமைத்தான். குடைவரைகளுக்கு அடுத்து, மகேந்திரனின் மகன் நரசிம்ம பல்லவனின் ஒற்றைக்கல் இரதங்களும், இராச சிம்மனது கட்டுமானக் கோயில்களும் சிறப்பிடம் பெறுகின்றன.

    மகேந்திர வர்மனது காலம் தொடங்கிக் கோயிற் சிற்பங்கள் அடைந்த வளர்ச்சி நிலைகளை இப்பகுதியில் காணலாம்.

    பல்லவர்களும் பாண்டியர்களும் குடைவரைகளையும் கட்டட வகைக் கோயில்களையும் கட்டினர். குடைவரைக் கோயில்கள் அமைக்கும் மரபு மறையும் காலத்தில் சோழர்கள் கட்டுமானக் கோயில்களைக் கட்டத் தொடங்கினர். சோழர்களது பெரும்பாலான கோயில்கள் காவிரியாற்றின் இருகரைகளிலுமே அமைந்துள்ளன. இவர்களது கோயிற் கட்டடக் கலையும் சிற்பக் கலையும் பல்லவ பாண்டியர் கலைகளில் இருந்து வளர்ச்சி அடைந்தவை ஆகும். சோழர்கள் மிக உயர்ந்த விமானங்களைக் கட்டினர். கோபுரங்களைச் சிறியதாக அமைத்தனர். பரிவார தேவதைகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். பெரும்பான்மையும் கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் கல்லினால் கட்டினர்.

    சோழர்கள் கட்டடத்திற்கும் சிற்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்தனர். இந்தப் பாடத்தில் சோழர், பல்லவர், காலச் சிற்பங்கள் பற்றிக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2017 13:31:43(இந்திய நேரம்)