Primary tabs
5.3 கலை, கலைக்காகவே என்பது பற்றிய கருத்துகள்
கலை, கலைக்காகவே என்ற கொள்கை, மேலைநாடுகளில் தான் பரிணமித்தது; மேலும், அங்கேதான் பலராலும் திரும்பத் திரும்பப் பேசப் பட்டது. முக்கியமாகக் கவிதைக்கு முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் கொடுக்கிறவர்களாலும், உருவவியலில் அக்கறை கொண்டோர்களாலும் இக்கொள்கை வலியுறுத்தப்பட்டது.
5.3.1 மேனாட்டார் கருத்து
கவிதையாராய்ச்சியில் ஈடுபாடு கொண்டவரும் ஷேக்ஸ்பியரின் அவல நாடகங்கள் பற்றி ஆராய்ந்தவருமான ஏ.சி.பிராட்லி (A.C. Bradley), இந்த கொள்கையைப் பிரபலப்படுத்தினார். அவர் சொல்கிறார் கலை ஒரு தனி உலகம். அதனை அனுபவிக்கத் தொடங்குகிறபோது, புறவுலகு நினைவே சிறிதும் வரலாகாது. கற்பனையின் துணையுடன் கவிதை, சில அனுபவங்களை வெளியிடுகின்றது. அவற்றை நாமும் அப்படியே பகிர்ந்து கொள்ளலாமே தவிர, வேறு பயன் தேடக் கூடாது. அவ்வாறு தேடினால், கவிஞன் என்ன கருதி அதனை ஆக்கினானோ, அதனை நாம் இழந்து விடுவோம். இன்ப அனுபவம் தவிர, வேறு பிற எல்லாம் இரண்டாம் நிலையானவை ; முக்கியமானவையல்ல.” இவ்வாறு அவர், ‘கலையைக் கலைக்குள்ளிருந்து பார்; கலையாகப் பார்; வேறொன்றையும் பார்க்காதே’ என்கிறார். ஜான் ஸ்டூவர்ட் மில்(J.S. Mill) எனும் அறிஞர், “கவிதை என்பது ஓர் உணர்வு ; தனிமையாக இருக்கும் நேரங்களில், அது தனக்குள் தானே பேசிக் கொள்கிறது. கவிஞனின் வாசகன், சாராம்சத்தில் ஒரே ஆளாகச் சுருங்கி விடுகிறான். அத்தகைய ஒரே வாசகன், அந்தக் கவிஞன் தான்” என்கிறார். (“The Poet’s audience is reduced to a single member, consisting of the poet himself”) இம்மானுவேல் காண்ட் என்ற அறிஞரும் கலையின் உயர்வு குறித்து, இத்தகைய கொள்கையுடையவரே.
ஆனால், ‘கலை, கலைக்காகவே’ எனும் கொள்கை, பல அறிஞர்களால் மறுக்கப்படுகிறது. உதாரணமாகக் கவிஞரும் திறனாய்வாளருமாகிய மாத்யூ அர்னால்டு, ‘கவிதையென்பது, அடிப்படையில் வாழ்க்கை பற்றிய திறனாய்வேயாகும்’ என்றும், ‘ஒழுக்கநெறிகளைப் புறக்கணிக்கும் கவிதை, வாழ்க்கையையே புறக்கணிப்பதாகும்’ என்றும் கூறுகிறார். ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் எனும் புகழ் பெற்ற திறனாய்வாளர், ‘இலக்கியம் என்பது, மனித சமுதாயத்தின் மனச்சான்று’ என்று வருணிக்கிறார். ‘கலை, மனித சமுதாயத்தின் மகிழ்ச்சிக்கு உதவுமானால், ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை பெறச் செய்ய உதவுமானால், அது சிறந்த கலையாகும்” என்றும் கூறுகிறார். எனவே, கலை, கலைக்காகவே என்ற கொள்கை சரியன்று என்பது தான் பலருடைய கருத்தும் ஆகும்.
5.3.2 தமிழ் மரபு
கலையை வாழ்க்கைக்குரிய ஒன்றாக, அதன் நலனுக்குரியதாகவும் அதனைச் சித்திரிப்பதாகவும் கொள்வதே தமிழ் மரபாகும். தொல்காப்பியத்திலே பல இடங்களில் இத்தகைய குறிப்பு உண்டு. கவிதை, மக்கள் வாழ்க்கையைச் சித்திரிக்க வேண்டும் என்பதற்காகவே ‘உரிப்பொருள்’ என்பதைக் கூறி, அது, திணை ஒழுக்கத்தைச் சொல்லுவதாக அந்நூல் வருணிக்கிறது. மேலும், “அறனும் பொருளும் இன்பமும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை” என்றும் அது வலியுறுத்துகிறது. சங்க இலக்கியம், எவ்வாறெல்லாம் வாழ்க்கைப் பற்றிப் பேசுகிறது என்பது தெரியுமல்லவா? ‘செவியறிவுறூஉ’ என்ற ஒரு துறை அல்லது பாடல் வகை உண்டு. மன்னவர்க்குச் செவியில் விழும்படியாகப் புத்திமதி கூறுவது, அந்த வகையான பாடல்.
இளங்கோவடிகள்சிலப்பதிகாரம் எனும் காவியம் ஏன் எழுந்தது? அதற்குக் காரணம், இளங்கோவடிகளே சொல்லுகிறார்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்எனும் மூன்று உண்மைகளை நிலைநாட்டுவதற்காக ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’ என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார்.
மகாகவி பாரதியார், ‘பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேணும்’ என்று சொல்லியிருப்பருது தெரியுமல்லவா? மேலும், “சொல்லடி சிவசக்தி- எனைச் சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயே இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என்று அவர் சொல்லியிருப்பதும், அதற்கேற்ப அவருடைய கவிதைகள் அழகும் இனிமையும் கொண்ட தேசியப் பாடல்களாகப் பரிணமித்தன என்பதும் யாவரும் அறிந்ததல்லவா? அழகையும் சுவையையும் மட்டுமே பார்க்கவேண்டும் என்று சொல்லுகிற மனப்போக்கு தமிழில் இன்றைத் திறனாய்வாளர்கள் சிலரிடம் உண்டு எனினும், அது பரவலாகப் பலராலும் நிராகரிக்கப்படுகிறது. இலக்கியத்தை வாழ்க்கையோடு ஒட்டியதாகப் பார்க்க வேண்டும் என்பதே தமிழ் மரபில் ஆழமாக வேரூன்றியுள்ளது.