Primary tabs
5.2 இலக்கியம் தரும் இன்பம்
கலைகள் பல வகைப்பட்டவை. கட்டிடக் கலை முதல் சிற்பம், ஓவியம், இசை, இலக்கியம் என்று பல திறத்தில் கலைகள் இருக்கின்றன. எல்லாக் கலைகளும் ஒரே மாதிரியானவையல்ல. இவற்றின் நோக்கமும் ஒரு மாதிரியானதல்ல.
சித்தன்னவாசல் ஓவியம்
தஞ்சைக் கோயில்சித்தன்னவாசல் ஓவியத்தைப் பார்க்கிறோம். தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரத்தைப் பார்க்கிறோம். காருகுறிச்சி அருணாசலத்தின் நாதசுர இசை கேட்கிறோம். பால சரசுவதி அல்லது பத்மாசுப்பிரமணியத்தின் பரத நாட்டியத்தைப் பார்க்கிறோம். நமக்கு என்ன கிடைக்கிறது? முதலில், ஒரு பிரமிப்பு; ஒரு வியப்பு. பின்னர் அவற்றோடு ஒரு லயிப்பு. பிறகு- ஒரு மகிழ்ச்சி; ஓர் இன்பம்; கவலைகளையும், சுற்றுப்புறங்களையும் மறந்த ஒரு இதமான உணர்வு, இவை ஏற்படுகின்றன. இலக்கியம் படிக்கிற போதும் அதே வகையான மகிழ்ச்சியும் இன்பமும் கிடைக்கிறது என்பது உண்மை ; ஆனால், முன்னர் சொன்ன கலைகளில் எதிர்பார்ப்பது மாதிரி, அதே வகையான இன்பத்தோடு, இலக்கியம் முடிந்து விடுகிறதா?
இலக்கியம், மொழியால் ஆனது. மொழி, வெறுமனே ஒலிகளால் அமைந்தது அல்ல; பொருள்களால் ஆனது. இந்தப் பொருள்கள் வாழ்க்கையிலிருந்தும் வாழ்க்கையுணர்வு அனுபவங்களிலிருந்தும் அறிவிலிருந்தும் வருகின்றன. அத்தகைய மொழியால் ஆன இலக்கியக் கலையில் இன்பமும் மகிழ்ச்சியும் மற்றும் அதற்குக் காரணமான அழகும் நேர்த்தியும் மட்டும் இல்லை, வாழ்க்கையும் அது பற்றிய ஒரு தேடுதலும் இருக்கிறது. எனவே எல்லாக் கலைகளும் ஒரே மாதியான நோக்கம் கொண்டன அல்ல. கலை, கலைக்காகவே என்ற கொள்கை, பிற கலைகளுக்குச் சிறிது பொருந்தி வரக்கூடும்; ஆனால் இலக்கியத்திற்குப் பொருந்தி வராது.
5.2.1 கலைஞனும் வாசகனும்
கலையைப் படைக்கும் கவிஞன், அந்தக் கலைக்காகவே மட்டுமே படைக்கின்றானா? கலையுள்ளம், கற்பனைத்திறன், உந்துணர்வு எனும் இவை மட்டும் தான் கலையை உருவாக்கக் காரணங்களா? இல்லை. படைப்பதைப் பிறருக்குக் கொண்டு போக வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புகின்றனர். நாலுபேர் பாராட்ட வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். தன்னுடைய எழுத்து, சிந்தனை, பிறருடைய மனதில் ஏதாவதொரு சலனத்தை, அசைவை ஏற்படுத்த வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். சார்த்தர் (Jean. Paul. Sartre) எனும் புகழ்பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர், ‘நான் ஏன் எழுதுகிறேன்’ எனும் கட்டுரையில், எழுத்தாளன், வாசகனிடத்தில் இத்தகையதொரு எழுச்சியை (appeal) உண்டு பண்ணுகிறான் என்று சொல்லுகிறார். கடினமான அல்லது இறுக்கமான உணர்வுடைய வாசகன் கூட, குறிப்பிட்ட இலக்கியத்தில், அது கூறும் வாழ்க்கைச் சித்திரத்தோடு ஒன்றிவிடுகிறபோது, மனம் கசிந்து விடுகிறான்; நெக்குருகி விடுகிறான் என்கிறார். கலைக்கு அத்தகையதொரு சக்தி இருக்கிறது.
பிக்காசோவின் ஓவியம்பிக்காசோவின் (Piccaso), போர் அவலங்குறித்த நவீன ஓவியங்களைக் கண்டவர்கள், பலர் போரையும் கொடூரங்களையும் வெறுக்கின்ற மனப்பக்குவத்தை அடைந்ததாகக் கலை வரலாறுகள் கூறுகின்றன. இதற்கு மாறாக, மோசமான திரைப்படங்களைப் பார்த்து, அவற்றில் சித்திரிக்கப் படுவது போல் திட்டமிட்டுக் கொள்ளைகள் அடித்ததாகவும், பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டதாகவும், கொலைகள் செய்ததாகவும் பல குற்றவாளிகள் வாக்குமூலம் தந்திருப்பதை அவ்வப்போது செய்திகள் மூலம் அறிகிறோம்.
நல்ல கலைகள் நல்லன செய்யமுடியும்; கெட்டவை, கெட்டது செய்ய முடியும். கேட்போரையும் பார்ப்போரையும் கலைகள் யாதானும் ஒருவகையில் ‘பாதிப்பு’ செய்கின்றன என்பது சார்த்தர் முதலிய பல அறிஞர்களின் கருத்து.