தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உருவவியலும் பிற அணுகுமுறைகளும்

      • 4.2 உருவவியலும் பிற அணுகுமுறைகளும்

            உருவவியலுக்கும் பிற அணுகுமுறைகளுக்கும் உள்ள தொடர்புகளை இனிப் பார்ப்போம்.

        • புதுத் திறனாய்வும் உருவவியலும்

            ஐரோப்பாவில் உருவவியல் தோன்றி வளர்ந்த காலத்தில் அமெரிக்காவில் புதுத் திறனாய்வு (New Criticism) என்பது 1920இல் தோன்றியது. இதுவும் உருவம் பற்றிப் பேசுவதுதான். இலக்கியத்தின் பனுவலை அதற்கு வெளியே போகாமல் “நெருங்கி நோக்குதல்” (Close-reading) வேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. இலக்கியத்தின் ஒவ்வோர் உறுப்பிலும், பகுதியிலும், அழகும், பொருளும் செய்தியும் இருக்கின்றன என்று கூறி அவற்றை நெருக்கமாக இருந்து காண வேண்டும். அதன் மூலம் விளக்கமான பொருள் தெரியவரும் என்று இது கூறுகிறது.

        • மார்க்சியமும் உருவவியலும்

            ருசியாவில் மார்க்சியம் அரசியல் அதிகாரத்துக்கு வருகிற சூழ்நிலையில்தான் இந்த உருவவியலும் பிறக்கிறது. ஆனால் மார்க்சியம் எந்தப் பொருளையும் தன்னளவில் மட்டுமே இயங்குவது என்றோ முழுமையானது என்றோ கருதுவதில்லை. மேலும் உள்ளடக்கத்தில் முக்கியத்துவத்தையும் அதன் தீர்மானிப்புத் திறனையும் மார்க்சியம் வலியுறுத்துகிறது. வரலாற்று-சமுதாய நிலைமைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் மார்க்சியம் வலியுறுத்துகின்றது. ஆனால் உருவவியல் இந்த நிலைப்பாடுகளுக்கு மாறானதும் முரணானதும் ஆகும். எனவே மார்க்சியவாதிகளுள் ஒரு சிலர், உருவவியலின் சில ஏற்புடைய தன்மைகளை முக்கியமாக இலக்கியத்தை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும் என்பது போன்ற சில விதிகளை ஒத்துக் கொண்டாலும் மிகப் பலரால் அது மறுதலிக்கப்படுகிறது.
         

        4.2.1 கதைக்கூறு

            இலக்கியத் திறனாய்வுக்கு உருவவியல் தந்த ஒரு முக்கியமான பங்களிப்பு- கதைக்கூறு, இழை பொருள்,     கதைப்பின்னல் ஆகிய கருத்து நிலைகளைத் தந்தது ஆகும்.
         

            கதைக்கூறு (fabula) என்பது இலக்கியமாவதற்கு முந்திய ஒரு மூலாதாரப் பொருளேயாகும். மேலும், தமக்குள் பரஸ்பரமாகவும், உள்ளார்ந்தும் தொடர்பு கொண்டிருக்கிற பல நிகழ்ச்சிகளின் கூட்டு வடிவம் இது எனலாம். இது இலக்கியமாகிற நிகழ்வுக்கு முந்தியதாகவும் அதே நேரத்தில் அதற்கு உட்படுகிறதாகவும் என்று இருநிலைக்குட்பட்டது.     இது எழுத்தாளன் உருவாக்கிக் கொண்டதல்ல. ஏற்கனவே இருப்பது ; அவன் தனது படைப்பில் பயன்படுத்திக் கொள்வதற்காக இருப்பது ஆகும். வாழ்க்கை அனுபவங்களில், ஒத்த பல கதைக் கூறுகளைக் காணுகிற எழுத்தாளன் அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கலை வடிவமாக ஆக்கிக் கதைப்பின்னல் என்ற அமைப்பாக ஆக்குகிறான்.
         

        4.2.2 இழைபொருள்

             இழைபொருள் (Motif) என்பது புனைகதையிலக்கியத்தின் அல்லது வண்ணனையின் (Narrative) மிகச் சிறிய பகுதியாகும். மையக் கதையோடு தொடர்பு கொண்டதாகவோ, தொடர்பு அற்றதாகவோ விளங்குகின்ற தனித்தனிக் காட்சிகள் செயல்நிலைகள் முதலியன யாவும் இழைபொருட்களேயாகும். கதைப்பின்னலுக்குள் அதனுடைய உருவ நேர்த்திக்கும் பிற தேவைகளுக்கும் பொருந்துகின்ற விதத்தில் இழையோடுகிற இழைபொருட்கள் உருவவியலின் ஆதாரமான அழகியல் கூறுகள் ஆகும்.

        4.2.3 கதைப்பின்னல்

            கதைப்பின்னல் (Plot) என்பது, கதைக்குரிய மூலாதாரமான நிகழ்ச்சிகளைத் தமக்குள் ஒன்றிணைகிற முறையில் கலையியல் நேர்த்தியுடன் கட்டமைப்பது ஆகும். தொடர்புபட்ட பல இழை பொருட்களைத் தன்னுள் கொண்டு, புனைகதை முழுவதும் பரவிப் பிணைந்து உருவநிலையிலான உருவாக்கத் திறனைப் பெற்றிருப்பது இக்கதைப் பின்னல்.

            மேலும், உள்ளடக்கம் என்ற சொல்லே தேவையில்லை என்று ஷக்லோவஸ்கி கூறுவார். அவர் கூறுகையில் ‘என்ன’ என்பதற்குக் கதைக்கூறு விடை தரும் என்றால், Ôஎப்படிÕ என்பதற்குக் கதைப் பின்னல் விடை தருகிறது என்று கூறுவார். கதைப்பின்னல் கலையியல் பண்பு கொண்டது ; இலக்கியத்திற்கு இலக்கியத்தன்மை தருவது ; ஆனால் இந்தக் கதைப் பின்னல் புனைகதைகளுக்கும், வர்ணனைக்     கவிதைகளுக்கும்தான்     (Narrative Poems) பொருந்துமே தவிர, எல்லா இலக்கிய வகைகளுக்கும் உரியதல்ல என்பது கவனித்தல் கொள்ளப்பட வேண்டும். நாட்டுப்புறக் கதைப் பாடல்களை ஆராயவும் கதைப்பின்னல் பற்றிய பார்வை துணை செய்யும்.

            உதாரணமாக சு.சமுத்திரத்தின் பாலைப்புறா என்ற (எய்ட்ஸ் பற்றிய முதல் தமிழ் நாவல்) நாவலை எடுத்துக் கொள்வோம். இதில் எய்ட்ஸ் நோயாளிகளைப் பற்றிய பல செய்திகள், நிகழ்ச்சிகள் வருகின்றன. மனோகர்க்கு அந்த நோய் கண்டது ; அதனால் அவனுக்கு வருகிற துயரமான வாழ்க்கை; அவன் மணந்து கொண்ட கலைவாணியை அந்த நோய் தொற்றிக் கொள்வது; அவளுடைய சிறிய சிறிய அனுபவங்கள், போராட்டங்கள் என்று பற்பல செய்திகள் வருகின்றன. இவை, நுண்இழைகளாக - இழைபொருளாக அமைகின்றன. இவை தொகுதிகளாகப் பெரிய அளவில் கதைக்குரிய தளத்தை அமைப்பதாகவும் பொருத்தமாகவும் அமையும் போது, கதைப்பின்னல் அமைகிறது. எய்ட்ஸ் நோயாளிகளைப் பற்றிய விவரங்களும், அந்நோய் பற்றிய கொடூரங்களும், மனித வாழ்க்கை மதிப்பீடுகளும், கதைப் பின்னலுக்கு ஆதாரமான - கதைக்கூறுகளாக உள்ளன. இவ்வாறு உருவவியல் அணுகுமுறையைப் பயன்படுத்தி இலக்கியத்தைப் பார்க்கலாம்.

        தன் மதிப்பீடு : வினாக்கள் - I
        1)
        கலை ஓர் உத்தியே என்று சொன்னவர் யார்?
        2)
        உருவவியல், ருசியாவில் ஒரு கொள்கையாகக் காலூன்றிய ஆண்டு யாது?
        3)
        தொல்காப்பியம், செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எனக் கூறுவன எத்தனை?
        4)
        கதைப் பின்னலுக்கு உட்பட்டது இழை பொருளா? அல்லது இழைபொருளுக்கு     உட்பட்டது கதைப்பின்னலா?
        5)
        கதைப் பின்னல் என்பதன் விளக்கம் (Definition) கூறுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 10:03:07(இந்திய நேரம்)