தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மொழியியல் அணுகுமுறை

    • 6.2 மொழியியல் அணுகுமுறை

           பாரதிதாசன்     கண்ணதாசன்

          திறனாய்வு அணுகுமுறைகளில், உருவத்தை முக்கியமெனக் கருதுவனவற்றுள் இதுவும் ஒன்று. அதேநேரத்தில், இலக்கியத்தின் உணர்வு, அழகு, முதலியவற்றில் இது கவனம் செலுத்துகிறது. உணர்வுகள், மொழியின் வாயிலாக வெளிப்படுகின்றன; இலக்கியம், ஒருகலைப் பொருளாக அழகு பெற்றிருப்பதற்கு மொழியே சிறந்த வாயிலாக இருக்கிறது என்ற கருதுகோள்களைக் கொண்டது இந்த அணுகுமுறை. சிறந்த கவிஞர்கள் என்போர், மொழியைக் கையாளுவதில் சிறந்தவர்களாக இருப்பவர்கள் என்பது ஓர் உண்மை. பாரதியையும், பாரதிதாசனையும் பின்னர், கண்ணதாசனையும் இந்த வகையான மொழித்திறன் உடையவர்களாகக் காணமுடியும்.

      6.2.1 மொழியியல் அணுகுமுறை - விளக்கம்

           ரோமன்    யகோப்சன்

          மொழி என்பது வேண்டுகிற செய்தியைச் சொல்லுவதற்குரிய சாதனம்; அழகாகவும் பிறர் மனங்கொள்ளுமாறும் சொல்லுவதற்குரிய சாதனம். இலக்கியம் என்பது ஒரு கலை. ஆனால், ஓவியம், இசை, சிற்பம், நடனம் முதலிய பிற கலைகளிலிருந்து அது வேறுபடுகிறது. எவ்வழி? முக்கியமாக, மொழியின்வழி. பிற கலைகள், மொழியைச் சார்ந்திருப்பவையல்ல; ஆனால், இலக்கியமோ, மொழியைச் சார்ந்தது. மொழியின் வழியாகவே அது தன்னை வெளிப்படுத்துகிறது. எனவே, அதனை மொழிசார் கலை (Verbal Art) என்பர். இலக்கியத்தின் மொழியமைப்பானது, அதாவது அதனுடைய செயல்பாடுகள், அந்த இலக்கியத்தின் பண்புகளுக்குக் காரணியாகவும் அடையாளமாகவும் விளங்குகின்றன. இலக்கியத்திற்கு அதனுடைய இலக்கியத் தன்மையே (Literariness) காரணம் என்றும் அதனைத் தருவது, மொழியமைப்பே என்றும் ரோமன் யகோப்சன் (Roman Jakobson) கூறுவார். இதனடிப்படையிலேயே இந்த அணுகுமுறை அமைந்துள்ளது. இலக்கியத்தில் முக்கியமாகக் கவிதையில் மொழி சில தனிச்சிறப்பான பண்புகளுடன் இயங்குகிறது என்று இந்த அணுகுமுறையை முன்னிறுத்திய ஹேரி லெவின் (Herry Levin), செய்மோர் சேட்மன் (Seymore Chatman) ரீஃபாத்தே (Riffattere) முதலிய அறிஞர்கள் விளக்குகின்றனர்.

           சேட்மன்     ரீஃபாத்தே

      6.2.2 இயல்பு வழக்கும் இலக்கிய வழக்கும்
          நடைமுறைப் பேச்சு வழக்கை இயல்பு வழக்கு (Casual Language) என்று சொல்வோமானால், இலக்கியத்தில் சிறப்பாக வழங்குகிற மொழிவழக்கை இலக்கிய வழக்கு (Literary usage) என்கிறோம். இதனைச்     செய்யுள்     வழக்கு     என்பார் தொல்காப்பியர். வித்தியாசப்படுதல் (difference) என்பது இதன் பண்பு அல்லது நோக்கம். உதாரணமாகத் தேன் என்பது ஒரு திரவப் பொருள். இது, காதுக்குள் போகுமா? போனால் என்ன ஆகும்? அதுவும் தேன்; அது இனிப்பானதாகத்தான் இருக்கட்டுமே - செவிக்குள் பாய்ந்து செல்லுமா? சாத்தியமா? நடைமுறையில் முடியாது. ஆனால் கவிதையில், குறிப்பிட்ட உணர்ச்சியை விதந்தும் அழகாகவும் சொல்ல வேண்டுமானால், அது சாத்தியம்; அது முடியும். பாரதியார் சொல்லுகிறார்.
      செந்தமிழ் நாடனெும் போதினிலே - இன்பத்
      தேன்வந்து பாயுது காதினிலே
      தேன், காதிலே வந்து பாய்வதாகச் சொல்வது, மற்றைச் சூழ்நிலைகளில் தர்க்கமற்ற (illogical) ஒரு வழக்கு; கவிதையில் உணர்வூட்டச் சொல்லுவது ஒருவகையான தருக்கம் - கலையியல் தருக்கம் - உடைய    வழக்காகும்.     இந்த நிலையை, மொழியியல் அணுகுமுறை விளக்குகிறது. இதேபோன்று, இன்னொரு உதாரணம். பொதுவாக, இலக்கண வழக்கில், தமிழில் - எழுவாய் - செயப்படுபொருள் - பயனிலை என்ற வகையில் வாக்கியம் அமைவதே மரபு. எடுத்துக்காட்டு “நான் அவளைக் கண்டேன்” என்பது. ஆனால், எழுவாய் (வெளிப்படையாக) இல்லாமல், பயனிலையை வாக்கியத்தின் முதலில் அமைத்தால், இலக்கணப்படி தவறு போல் தோன்றும். ஆனால், இலக்கியத்தில் அது வழுவமைதியாகக் கருதப்படுகிறது. கம்பன் படைத்துக்காட்டும் சொல்லின் செல்வன் அனுமன், இராமனின் ஆணைப்படி சீதையைத் தேடிச் செல்லுகின்றான். சீதையைக் கண்டு மீள்கிறான். ஆவலோடு இருக்கும் இராமனிடம் அதுபற்றிச் சொல்லுகிறான்.

      அனுமன்

      கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்

      (கம்ப. சுந்தர: திருவடி தொழுதபடலம் 56;1)

      தகவலின் உடனடித் தேவையாகிய உணர்வுநிலை, மனநிலை ஆகியவற்றைச் சார்ந்து இந்த வாக்கியம் அமைகிறது. “நான் சீதையைக் கண்டேன்” என்றோ “நான் கற்பினுக்கு அணியாகிய சீதையைக் கண்களால் கண்டேன்” என்றோ சொல்லுவதைவிட, அனுமனின் சொல்திறன், சிறப்பாகவும் அழகாகவும் இருக்கிறதல்லவா?
      6.2.3 நடையியல் கூறுகள்
          மேற்கூறியவற்றை இலக்கியத்தின் மொழியியல் திறனாய்வில், நடையியல் கூறுகள் (Stylistic Features) என்பர். ஒலியமைப்பு, (Sound texture), சொல் அமைப்பு (Lexical, diction), தொடரமைப்பு (Syntactic) ஆகிய நிலைகளில்,இத்தகைய நடையியல் சிறப்புக் கூறுகள் காணப்படுகின்றன. சொல்லுவோன் உணர்ச்சிக்கும், அவனுடைய மொழியில் வெளிப்படுகிற குரல் அல்லது ஒலியின் ஏற்ற இறக்கம் அல்லது அமைப்புக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது என்ற அடிப்படையில் கவிதை மொழியின் ஒலியமைப்பு அல்லது ஒலிப்பின்னல் அமைகிறது. அதுபோலவே சொற்களும், அவை திரும்பத் திரும்ப வருதலாகிய பண்பும் அமைகின்றன. குழைவு, கனிவு, காதல் போன்ற சூழல்களில், ஒலிகளும் சொற்களும் அமைவதற்கும், கோபம், எரிச்சல் முதலிய சூழல்களில் அவை அமைவதற்கும் வேறுபாடுகள் உண்டு. எடுத்துக்காட்டாக, இராமன் மேல் விருப்பம் கொண்டு, சூர்ப்பனகை மாயவேடம் பூண்டு அழகிய வஞ்சி மகளென, அவன்முன் தோன்றுவதாகச் சொல்லும்போதும், குகன், பரதன் மேல் எதிரியெனச் சந்தேகங்கொண்டு அவனைக் கோபத்தோடு பேசுவதாகச் சொல்லும் போதும் கம்பன் கையாளுகிற ஒலித்திறனையும் சொற்றிறனையும் கண்டு கொள்க. இவ்வாறு, நடையியல் கூறுகள், மொழியியல் அணுகுமுறையின் மூலமாக அறியப்படுகின்றன. மொழியைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பேசுகிற மொழியியல், இலக்கியத்தின் திறனறிய இவ்வாறு பயன்பட்டு வருகிறது.
      தன் மதிப்பீடு : வினாக்கள் - I
      1)
      ஒப்பியல்     அணுகுமுறையின்     அடிப்படைக் கருதுகோள்கள் இரண்டனைக் கூறுக.
      2)
      ஒப்பிலக்கியத்திற்கு அடிப்படை விதிமுறைகளைத் தந்தவர் யார்?
      3)
      இலக்கியங்களுக்கிடையேயுள்ள     தாக்கங்களை அறியத் துணை நிற்கும் துறை யாது?
      4)
      இலக்கியம் என்பதற்கு அதன் இலக்கியத் தன்மையே (Literatures) முக்கியக் காரணம் என்றும் அதனைத் தருவது மொழியமைப்பே என்றும் சொன்னவர் யார்?
      5)
      சீதையைக் கண்டு வந்த அனுமன், அந்தத் தகவலை இராமன் உளங்கொள்ளுமாறு எவ்வாறு கூறுகிறான்?
      6)
      மொழியில் இயல்பு வழக்கு என்று சொல்லப்படுவது, எது?
புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 16:18:34(இந்திய நேரம்)