தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-செவ்விலக்கியங்களும் திறனாய்வும்

  • 5.2 செவ்விலக்கியங்களும் திறனாய்வும்

        செவ்விலக்கியங்களான சங்க     இலக்கியங்கள், திருக்குறள், காப்பியங்கள் ஆகியன திறனாய்வாளர்களுக்கு ஆய்வுக் களமாக ஆனதில் வியப்பில்லை. பல வகைக் கோணங்களில் இவற்றை ஆய்ந்து ரசனைமுறை, சமூக உணர்வு, அறவுணர்வு என்ற பல இலக்கிய அணுகுணர்வுகளை வாசகர்களிடையே உருவாக்கினார்கள்.

    5.2.1 திருக்குறளும் திறனாய்வும்

        இதுபோல் திருக்குறள் பற்றிய ஆராய்ச்சியும் தமிழில் கணிசமாக உண்டு. திருக்குறளைத் தமிழர்தம் வேதமாகக் காண்பது; தமிழர்களின் பெருமிதமாகக் காண்பது; உலக இலக்கியங்களில்     தலையாயதாகக்     காண்பது;     பல சமயங்களுக்கும் பொதுவாகவும், பல சமயங்களின் கருத்துகள் அதில் இருப்பதாகவும் காண்பது; திருக்குறளின் அழகினையும் கட்டமைப்பையும் காண்பது என்று பல கோணங்களில் திருக்குறள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்கள் மட்டுமன்றிப் பல மேலை நாட்டவர்களும் திருக்குறள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.

    5.2.2 சங்க இலக்கியமும் திறனாய்வும்

        சங்க இலக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சிகள், தமிழில் கணிசமாகவே உண்டு. இவ்வாராய்ச்சிகளில் தமிழர் பண்பாடு, தமிழ்ப் பெருமித உணர்வு முதலியவை     அதிகம் காணப்படுகின்றன. தமிழக வரலாற்றைக் கண்டறியச் சங்க இலக்கிய ஆராய்ச்சி இன்றியமையாதது என்பதை அறிஞர்கள் அறிவர். தொடக்க கால ஆய்வாளர்களும் சரி, பின்னர் வந்த ஆய்வாளர்களும் சரி, இதில் பெரிதும் ஈடுபாடு காட்டியுள்ளனர். முக்கியமாகக் கல்வியாளர்கள் சங்க இலக்கியம் பற்றி நிறையவே எழுதியுள்ளனர்.

    5.2.3 காப்பியங்களும் திறனாய்வாளர்களும்

        தமிழில்,     பழைய     இலக்கியங்களுள், ஆராய்ச்சியாளர்களை அவர்களுள்ளும்     முக்கியமாகக் கல்வியாளர்களை அதிகம் கவர்ந்தவை, காப்பியங்களே. அவற்றுள்ளும் கம்பராமாயணமே அதிகமான அறிஞர்களைக் கவர்ந்துள்ளது. திறனாய்வாளர்களையும் ஆய்வாளர்களையும், காப்பியங்கள் ஏன் சிறப்பாகக் கவருகின்றன?

        அ) இலக்கிய ரசனை : சொல்நயம், பொருட்சிறப்பு,      சந்தம், வருணனை, காதல் முதலிய அம்சங்களில்      ஏற்பட்ட ரசனை முக்கிய காரணம். இதிலும்      கம்பனைப்     பற்றி     எழுதுபவர்களிடமும்      பேசுபவர்களிடமும் இந்த ரசனை உணர்வு      பிரதானமாகக் காணப்படுகிறது. வ.வே.சு. ஐயர்,      டி.கே.சி. முதலியவர்களிடம் இந்தப் போக்கினைக்      காணலாம்.

        ஆ) கதைச்சுவை : காப்பியங்கள் கூறும் கதைகளும்      கிளைக்கதைகளும் ஏற்கெனவே     தமிழர்கள்      மத்தியில் நன்றாகப் பரவியிருக்கின்றன. எனவே      அவற்றைப் பற்றி எழுதுவதும் பேசுவதும் பலருக்கு      வசதியாகவும் எளிதாகவும் இருக்கிறது. முக்கியமாக      மேடைச்     சொற்பொழிவாளர்களுக்கு, இதன்      காரணமாகக் கம்பனையும் இளங்கோவையும் பற்றிப்      பேசுவது வசதியாக இருக்கிறது.

        இ) காப்பியக் கட்டமைப்பு : சிலப்பதிகாரத்தின்      கட்டுக்கோப்பு, பாத்திரப் படைப்பு, அழகியல்      இவற்றையொட்டிப் பலர் விளக்கம் தந்துள்ளனர்.      காப்பியங்களின்     பொதுப்பண்புகளையும்      வரலாறுகளையும்,     அவற்றுள் குறிப்பாகக்      கம்பராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவற்றையும்      பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் காவிய      காலம் விரிவாகவும் முறையாகவும் விளக்கிப்      பேசுகிறது.     பேராசிரியர், தொ.பொ.மீனாட்சி      சுந்தரனாரின் குடிமக்கள் காப்பியம், கானல்வரி      ஆகிய நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.      மார்க்கபந்து சர்மா, சிலம்பு பற்றிப் பல நூல்களை      எழுதியுள்ளார். சிலப்பதிகார ரசனை அவற்றுள்      குறிப்பிடத்தகுந்தது.

        ஈ) தமிழ்     மேம்பாட்டுணர்வு : சிலப்பதிகார      ஆராய்ச்சியில் இது, பிரதானமாகக் காணப்படுகிறது.      ம.பொ.சிவஞானம், சிலப்பதிகாரத்தைப் புரட்சிக்      காப்பியம் என்று வருணிக்கிறார். தமிழ்த் தேசியம்,      சிலம்பின்     மூலமாகக் கட்டமைக்கப்படுகிறது.      ம.பொ.சிவஞானம்,     சிலம்புச் செல்வர் என்று      அழைக்கப்படுகிறார். பழைய     இலக்கியத்தை      இன்றைய சூழலுக்கேற்பப் பொருத்திக் காணுகிற      முயற்சி பலரால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.      கம்பனுடைய காப்பியத்தை இன்றைய சமுதாயத்தின்      தேவைக்கேற்ப விளக்கம்     கொடுத்தவர்களில்      முக்கியமானவர் ப.ஜீவானந்தம்.

        உ) சமூக வரலாறு : காப்பியங்களைக் கொண்டு, தமிழக      அரசியல் - சமூக - பண்பாட்டு வரலாறுகளைக்      காணுகிற முயற்சியும் பல ஆராய்ச்சியாளர்களால்      மேற்கொள்ளப்பட்டு         வந்துள்ளன.      தொ.மு.சி.ரகுநாதனின் “இளங்கோவடிகள் யார்”      எனும் நூல் இத்தகையது.

        ஊ) ஒப்பிலக்கியம்/ இலக்கிய ஒப்பீடு : கம்பராமாயணம்      இவற்றிற்குரிய முக்கியமான தளமாக இருந்து      வந்துள்ளது. வ.வே.சு. ஐயர், ஏ.சி.பால் நாடார்,      எஸ்.ராமகிருஷ்ணன்     முதலியோர்     இதிலே      முக்கியமானவர்கள். கம்பனை மறுத்தும் எதிர்த்தும்      பகுத்தறிவு இயக்கம் சார்ந்தவர்கள் விளக்கம்      தந்துள்ளனர். சி.என்.அண்ணாத்துரையின் தீ      பரவட்டும், கம்பரசம் ஆகிய     நூல்கள்      இத்தகையன.

       தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    இன்றைய திறனாய்வின் பணி அல்லது பண்பு எவ்வாறு இருக்கவேண்டும்?
    2.
    இராமலிங்கரின் அருட்பாவை மருட்பா என்று ஆறுமுக நாவலர் அழைப்பதற்குக் காரணமாக இருந்தது, எவ்வகையான கருத்தியல்?
    3.
    பழைய இலக்கியங்களுள், ஆராய்ச்சியாளர்களை மிகவும் கவர்ந்தவை எவை?
    4.
    சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?
    5.
    குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர் யார்?
    6.
    கம்பனுடைய காப்பியத்தை, இன்றைய சமுதாயத்தின் தேவைக்கேற்ப விளக்கம்     கொடுத்தவர்களில் முக்கியமானவர் யார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 18-07-2018 17:54:03(இந்திய நேரம்)