தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-பத்திரிகைகளும் திறனாய்வும்

  • 5.4 பத்திரிகைகளும் திறனாய்வும்

     

         தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, இதழ்கள் பல தோன்றத் தொடங்கி விட்டன. செய்திகளை முன்னிட்டும், வணிகம், தொழில் முதலிய அமைப்புகளை முன்னிட்டும் சாதி, சமயம் ஆகிய நிலைப்பாடுகளை முன்னிட்டும், இதழ்கள் தோன்றின. மேலும் ஆராய்ச்சி, வரலாறு முதலியவற்றை மையமாகக் கொண்டும் இதழ்கள் வந்தன. ஞானபோதினி, சித்தாந்த தீபிகை, செந்தமிழ்,     தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி Tamilian Antiquary, Tamil Culture முதலிய இதழ்கள் ஆராய்ச்சிகளை மையமிட்டவை. பின்னர் ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்கள், வணிக நோக்கத்தை மையமிட்டு வந்தன. இலக்கியத்தை ஒரு தீவிர மனப்பான்மையோடு கொண்டுவர அதற்கெனத் தனியே இதழ்கள் தேவைப்பட்டன. 1940-களின் காலப்பகுதியில் வெளிவந்த மணிக்கொடி இதில் முதன்மையிடம் பெறுகிறது. புதுமை, தரமான இலக்கியம் என்ற முறையில் பல எழுத்தாளர்கள் வளர இது இடம் தந்தது. இலக்கியத் திறனாய்வின் வளர்ச்சிக்குரிய நல்ல சூழலையும் இது உருவாக்கியது. அதன்பிறகு கிராம ஊழியன், கலாமோகினி ஆகிய இலக்கிய இதழ்கள் வெளிவந்தன. விமரிசனத்துக்காக என்று     சொல்லி,     சி.சு.செல்லப்பா     என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது எழுத்து. க.நா.சு.வின் இலக்கிய வெளிவட்டம்,     விஜயபாஸ்கரனின்      சரஸ்வதி, எஸ்.ஏ.முருகானந்தத்தின் சாந்தி, ஜீவாவின் தாமரை முதலிய பத்திரிகைகள் படைப்பிலக்கியத்தையும் விமரிசனத்தையும் பல பரிமாணங்கள் உடையனவாய் வளர்த்தன. இவற்றிலிருந்து பல திறனாய்வாளர்கள் உருவாயினர். 1970-களுக்குப் பிறகு ஆராய்ச்சி, கசடதபற, அஃ, பரிமாணம், படிகள், வானம்பாடி, யாத்ரா, மனஓசை, நிகழ், செம்மலர், காலச்சுவடு முதலிய இலக்கிய இதழ்கள் தோன்றின. 1990- களுக்குப் பிறகும் புதிய பல இலக்கிய இதழ்கள் தோன்றியுள்ளன. பொதுவாக இவை, சில தனியாட்களால் அல்லது குழுக்களால்     வணிக-லாப     நோக்கமின்றி நடத்தப்படுவன. அதே சமயம்,இலக்கிய வளர்ச்சியில் ஒரு தீவிர மனப்போக்கையும், நவீனத்துவத்தையும் புதிதாகத் தோன்றிவரும் பெண்ணியம், தலித்தியம் முதலியவற்றையும் இவை முன்னிறுத்துகின்றன. இதன் காரணமாக இலக்கியத் திறனாய்வும், புதிய புதிய கோலங்களையும் முனைப்புகளையும் பெற்று வளர்கின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:43:55(இந்திய நேரம்)