தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pudhinum I-3.6-மொழி பெயர்ப்பும் தழுவலும்

  • 3.6 மொழி பெயர்ப்பும் தழுவலும்

    பிறமொழிப் புதினங்களை அப்படியே மொழிபெயர்ப்பு செய்வதை மொழி பெயர்ப்புப் புதினங்கள் என்று வழங்குவர். மொழிப் புதினங்களை உள்ளவாறே மொழி பெயர்ப்பதால் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவும், வாசகர்களுக்கு எளிமையும் இனிமையும் தரவும் பிறமொழிக் கதைகளுக்குத் தமிழ்நாட்டுச் சூழலும், தமிழ்ப் பெயர்களும் தந்து எழுதப்படும் புதினங்களைத் தழுவல் புதினங்கள் என்பர்.

    3.6.1 மொழி பெயர்ப்புப் புதினங்கள்

    காண்டேகரின் மராத்தி நாவல்களை கா.ஸ்ரீ.ஸ்ரீ. சிறப்புற மொழி பெயர்த்து அளித்துள்ளார். எரி நட்சத்திரம், கிரௌஞ்ச வதம், சுகம் எங்கே? முதலியன இவரது சிறந்த மொழி பெயர்ப்புகளாகும். த.நா.குமாரசாமியும், த.நா.சேனாதிபதியும் தாகூர் படைத்த வங்காள நாவல்களை மொழிபெயர்த்துள்ளனர். துளசி ஜெயராமன், சரசுவதி ராம்நாத் இருவரும் வங்காளம், இந்தி, குஜராத்திப் புதினங்களையும், வீழிநாதன் - இந்திப் புதினங்களையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். ஒரியா மொழிக் கதையைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகத் தமிழ்நாடன் சாகித்திய அக்காதமி விருது பெற்றுள்ளார். சரஸ்வதி ராம்நாத்தும் மொழி பெயர்ப்புக்காகச் சாகித்திய அக்காதமி விருது பெற்றவர். கன்னட மொழியில் புகழ்பெற்ற படைப்பாளியான சிவராம கரந்த் எழுதிய மண்ணும் மனிதரும், அழிந்த பிறகு, பாட்டியின் கனவுகள் ஆகிய நாவல்களை டி.பி.சித்தலிங்கய்யா மொழி பெயர்த்திருக்கிறார். பாட்டியின் கனவுகள் ஞானபீட விருது பெற்ற படைப்பாகும். கன்னட மொழியில் சாரா அபுபக்கர் எழுதிய சந்திரகிரி ஆற்றின் கரையில் என்ற புதினத்தைத் தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்திய அக்காதமி விருதைத் தி.சு.சதாசிவம் பெற்றுள்ளார். இப்புதினம் தமிழில் திரைப்படமாகவும் வந்தது.

    புகழ் பெற்ற மொழி பெயர்ப்புப் புதினங்கள்

    மாக்ஸிம் கார்க்கியின் தாய், டால்ஸ்டாயின் போரும் அமைதியும், ஹெமிங்வேயின் கடலும் கிழவனும், வால்டர் ஸ்காட்டின் ஐவன் ஹோ முதலியன சிறந்த மொழி பெயர்ப்புப் புதினங்களாகும். தாகூர், பங்கிம் சந்திரர், சரத்சந்திரர் ஆகியோரின் வங்க நாவல்களும், தகழி சிவசங்கர பிள்ளையின் செம்மீன் என்ற மலையாள நாவலும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

    3.6.2 தழுவல் புதினங்கள்

    இவ்வகையில் முதன் முதலில் ஆரணி குப்புசாமி முதலியார் முயற்சியால் ரெயினால்ட்ஸ் (Reynolds) எழுதிய புதினங்கள் தமிழ் உருவம் கொண்டன. இவரைத் தொடர்ந்து வடுவூர் துரைசாமி ஐயங்காரும் மேனகா, திகம்பர சாமியார் அல்லது கும்பகோணம் வக்கீல் ஆகிய இரண்டு புதினங்களைப் படைத்தார். இவை பின்னர் திரைப்படங்கள் ஆக்கப்பட்டும் புகழ் பெற்றன.

    டால்ஸ்டாயின் அன்னாகரினீனாவைத் தழுவி, நாரண துரைக்கண்ணன் சீமாட்டி கார்த்தியாயினி என்ற நாவலை உருவாக்கினார். டிக்கன்ஸின் ஆலிவர் டுவிஸ்டைத் தழுவி எஸ். மாரிசாமி அனாதை ஆனந்தன் என்ற புதினத்தை உருவாக்கினார். ரெயினால்ட்ஸ் புதினத்தைத் தழுவி மறைமலை அடிகளார் குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி என்ற புதினத்தை எழுதினார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:18:21(இந்திய நேரம்)