தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வாழ்வும் பணிகளும்

  • 3.1 வாழ்வும் பணிகளும்

    பாவாணர் தம் வாழ்நாள் முழுவதும் தனித்தமிழ் இயக்கத்திற்காக வாழ்ந்தவர் ஆவார். ஆதலின் அவரது வாழ்வையும் அவர் ஆற்றிய பணிகளையும் அறிந்து கொள்வது இங்குப் பொருத்தமாக இருக்கும் அல்லவா? 

    பாவாணர் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் 7.2.1902 இல் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ஞானமுத்து, தாயார் பரிபூரணம் அம்மையார் ஆவார். இவர் தந்தையார் ஞானமுத்து ஆசிரியராக இருந்தவர். பெற்றோர் பாவாணருக்கு இட்டபெயர் தேவநேசன் என்பதாகும்.

    பாவாணர் தமிழகத்தின் பல இடங்களிலும் சென்று கல்வி கற்றார். பல தமிழ்த் தேர்வுகளில் வெற்றி பெற்றார். தமிழில் வித்துவான், முதுகலை ஆகிய பட்டங்களைப் பெற்றார். 

    பாவாணரின் பாட்டெழுதும் ஆற்றலைக் கண்டு அவர் ஆசிரியர் மாசிலாமணி என்பவர், தேவநேசக் கவிவாணர் என்று பட்டம் வழங்கினார். அப்பட்டத்தைப் பாவாணர் தனித் தமிழில் தேவநேயப் பாவாணர் என்று மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    பாவாணர் தம் வாழ்க்கையைப் பள்ளிகளில் தமிழாசிரியராகத் தொடங்கினார். நிறைவாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திராவிடமொழி ஆராய்ச்சித் துறையில் இணைப் பேராசிரியராகப் (Reader) பணியாற்றினார். அவர் வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து கண்ட உண்மைகளை வெளியிடுவதற்கு ஏதுவாக 8.5.1974ஆம் நாள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டத்திற்கு இயக்குநராகப் பொறுப்பேற்றார். இந்த அமைப்பில் அமர்ந்து பாவாணர் ஆற்றிய ஆய்வுப் பணிகள் நூல்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 30-07-2018 18:13:05(இந்திய நேரம்)