தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 3.5 தொகுப்புரை

    பாவாணர் தனித்தமிழ் இயக்கத்திற்காக வாழ்ந்த தமிழறிஞர். இவர் திருநெல்வேலி மாவட்டத்துச் சங்கரன் கோவிலில் பிறந்தவர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் தமிழ் கற்று வித்துவான் முதலிய பட்டங்களைப் பெற்று மொழி ஞாயிறு என்று போற்றும் வண்ணம் தண்டமிழ் மொழியின் தலைமைப் பாவலராக விளங்கியவர். தன்னுடைய தனித்தமிழ்ப் பற்றின் காரணமாகப் பெற்றோர் இட்ட தேவநேசன் என்னும் பெயரைத் தேவநேயன் என்று அமைத்துக் கொண்டார். பாவாணர் தம் வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்து கண்ட உண்மைகளை யெல்லாம் எழுத்து வடிவில் வெளியிடுவதற்கு அரசு அமைத்துத் தந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் என்னும் நிறுவனத்தின் இயக்குநராக அமர்ந்து பணியாற்றினார். பாவாணர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாவாணரின் படைப்புகளின் உட்பொருள்கள் தமிழின் பெருமையை எடுத்துரைப்பதும் தமிழரின் தொன்மையை நிறுவுவதுமாக அமைந்தன. பாவாணரின் உரைநடை தனித்தமிழ் நடையில் அமைந்தது. பெரும்பான்மை நீண்ட தொடர்களைக் கொண்டது. ஒருதொடரே ஒரு பத்தியாக அமையும் தன்மை கொண்டது. பாவாணரின் பொழிவுகளில் அமையும் நடை குறுந்தொடர்களில் அமைந்துள்ளது. பாவாணரின் உரைநடையில் வினா-விடை அமைப்பையும் காணலாம். எதுகையும் மோனையும் இவரது உரைநடையில் காணப்படுகின்றன. உவமை நயமும் பாவாணரின் உரைநடையில் ஊடாடக் காண்கிறோம். உரைநடையிலும் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றி எழுதுவது இவரது தனித்தன்மையாகும். பாவாணரின் உரைநடையில் புதிய சொல்லாக்கங்கள் காணப்படுகின்றன. வடசொற்களுக்கும் ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்களைப் பாவாணர் உருவாக்கியமைக்கு அவரது உரைநடை சான்றாக அமைகின்றது. பாவாணரின் உரைநடைக் கொடை, தமிழில் எழுதும் போதும், பேசும் போதும் பிறமொழிச் சொற்களைக் கலவாமல் எழுத முடியும் என்பதை நிறுவியுள்ளது. பாவாணரின் உரைநடையின் உயிராகக் கலந்திருப்பது தமிழ் உணர்வாகும்.



    1.
    சொல்லாக்கம் என்றால் என்ன?
    2.
    பாவாணர் சொல்லாக்கத்தில் ஈடுபடக் காரணங்களைக் கூறுக.
    3.
    பாவாணர் உருவாக்கியுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் இரண்டைக் கூறுக.
    4.
    வடசொற்களுக்கு இணையான பாவாணரின் தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு ஐந்து எடுத்துக்காட்டுகள் தருக.
    5.
    பாவாணர் உரைநடையின் உயிர்க்கருத்து யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-08-2017 13:49:07(இந்திய நேரம்)