தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    தமிழ் நாட்டில் தமிழில் எழுதுவோரும் பேசுவோரும் வடமொழிச் சொற்களை அதிக அளவில் கலந்து எழுதியும். பேசியும் வந்தனர். இதன் காரணமாகத் தமிழில் வடசொற் கலப்பு மிகுதியானது. தமிழில் வடமொழிச் சொற்கள் நிறையக் கலந்திருப்பது கண்டு ஒருசிலர் ‘வடமொழியின் துணையின்றி - வடமொழிச் சொற்கலப்பின்றித் தமிழ் தனித்தியங்க இயலாது’ என்ற ஒரு தவறான கருத்தை ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கினர். ஆயின் பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர் பெருமக்கள் ‘தமிழ் வடமொழிச் சொற்கலப்பின்றித் தனித்தியங்க வல்லது; எந்த ஒரு கருத்தையும் வடமொழிச் சொற்களின் துணையின்றித் தனித்தமிழ்ச் சொற்களைக் கொண்டே விளக்கிக் கூற முடியும்’ என்று கூறி, அத்தவறான கருத்தைப் போக்க முனைந்தனர்; பாடுபட்டனர். மறைமலையடிகள் இந்த அரிய பணிக்காகத் தனித்தமிழ் இயக்கம் என்ற ஓர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அந்த இயக்கத்தில் தனியிடம் வகித்த பெருமையுடையவர் பாவாணர் ஆவார். 

    மறைமலை அடிகள்

    தேவநேயப் பாவாணர்

    பாவாணர் தமிழ்மொழியில் எழுதும்போது பிற மொழிச் சொற்களின் கலப்பின்றி எழுத முடியும் என்பதைத் தன் உரைநடையின் வழியே நிறுவிக் காட்டினார். இவ்வகையில் பாவாணரின் உரைநடைத் தனித்தன்மை உடைய தனித்தமிழ் நடையாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-07-2018 18:11:48(இந்திய நேரம்)