தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உரைநடையின் தனித்தன்மைகள்

  • 6.4 உரைநடையின் தனித்தன்மைகள்

    உரைநடையில் தங்கள் படைப்புகளை வழங்குவோர் ஒவ்வொருவருக்கும் தனித் தன்மைகள் உள்ளன. அவையே அந்தந்த ஆசிரியர்களை அடையாளம் காட்டுவன எனலாம். கோவி.மணிசேகரனுக்கும் உரைநடையில் தனித்தன்மைகள் பல அமைந்துள்ளன. அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காணலாம். 

    (1)
    வருணனை நடை
    (2)
    இழையோடும் நகைச்சுவை
    (3)
    மொழிக் கலப்பு
    (4)
    தற்குறிப்பேற்றம்
    (5)
    சொல்லாக்கம்
    (6)
    விறுவிறுப்பு

    கதை புனைவதற்குக் கற்பனை தேவை. கற்பனையில் தோன்றும் காட்சியை விளக்கி எழுதுவதற்கு ஏற்ற நடை வருணனை நடை. கற்பனைக் காட்சிக்கு மட்டும் அல்லாமல் கண்ணிலே கண்ட காட்சியையும் விரிவாக எடுத்துரைப்பதற்கு வருணனை நடையே பொருத்தம் ஆகும்.

    பல சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதிக் குவித்திருக்கும் கோவி.மணிசேகரனின் வருணனை நடை அவருடைய உரைநடையின் தனித்தன்மைகளுள் ஒன்றாகும்.

    இரவின் வருகையை கோவி.மணிசேகரன் எவ்வாறு வருணனை செய்துள்ளார் என்பதைப் பின்வரும் எடுத்துக்காட்டில் பாருங்கள்.

    “மாலை மறைந்து மஞ்சள் இழந்து - இருளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த இரவு மலர்ந்தது. வீடுகள் தோறும் - வீதிகள் தோறும் விளக்கொளிகள் மண்ணை விண்ணாக்கிக் கொண்டிருந்தன. மாலை மறந்து மணாளனை இழந்து - மங்கியதோர் இன்பத்துக்காக மயங்கி மறுவாழ்வுக்காக ஏங்கிக் கொண்டிருந்த மஞ்சுளாவின் முகம் மலர்வதும், கூம்புவதுமாக இருந்தது. இரவில் தோய்ந்த வீட்டை மின்சாரம் பகலாக்கிக் கொண்டிருந்தது.”

    வருணனை நடையில் கோவி.மணிசேகரனின் தனித்தன்மை அதனைக் காவிய நடையாகக் கனியச் செய்திருக்கின்றது எனலாம். இதற்கு இரு எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.

    ஒரு பெண் ஆடவன் ஒருவனுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் என்பதைக் கோவி.மணிசேகரன்,

    அடுத்து அவனது கன்னத்தில் சோதியின் வலக்கரத்து விரல்கள் ஓசை எழுப்பியிருந்தன’ என்று எழுதுகிறார்.

    மேலும், முன்னெச்சரிக்கையாக இருக்க முயன்றாள் என்பதை அவர்,

    ‘அவள் முன் எச்சரிக்கைக்குத் தோள் கொடுக்கத் தயாரானாள்’ என்று எழுதுகிறார் இவையெல்லாம் கோவி.மணிசேகரனின் காப்பிய நடைக்குச் சான்றுகள் ஆகும். 

    அனைத்துச் சுவைகளையும் உரைநடையில் வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவரையே, வெற்றி பெறும் படைப்பாளர் என்கிறோம். கோவி.மணிசேகரனின் உரைநடை அவர் உணர்த்தக் கருதும் உணர்ச்சிகளைப் படிப்பவர் மனத்தில் பதித்து விடுகின்றது என்பது உண்மை. உணர்ச்சிகள் பலவற்றிலும் ஓர் எள்ளல் மேல் உருவாகும் மெல்லிய நகைச்சுவை அவரது உரைநடை யெங்கும் பரவலாகக் காணப்படுகின்றது.

    கோவி.மணிசேகரனின் நகைச்சுவைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

    “நினைத்த நேரத்தில் வரக் கூடிய அலாவுதீன் பூதமா என்ன, மதராஸ் பஸ்கள்?”

    என்றும்,

    “ஆண்டவன் பெண்களைப் படைத்துத்தான் குற்றவாளியானான் என்றால், உடன் வாயையும் படைத்துப் பாவியாகி விட்டான்”

    என்றும் வரும் தொடர்களில் எள்ளல் கலந்த நகைச்சுவை இழையோடுகிறது அல்லவா? 

    கோவி.மணிசேகரன் ‘நான் மு.வ.வின் அரவணைப்பாலும் உருவானேன்’ என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் மு.வ. பின்பற்றிய பிறமொழிச் சொற்கள் பெரிதும் கலவாத உரைநடையை இவர் பின்பற்றவில்லை எனலாம்.

    கோவி.மணிசேகரன் வரலாற்றுப் புராண நாடகங்களைப் படைக்கும் போது வடமொழிச் சொற்களைப் பெய்துள்ளார். சமூகப் புதினம், சிறுகதைகளை எழுதும் போது அக் கதைமாந்தர்களின் உரையாடல்களில் ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதுகிறார். தமிழோடு வடமொழிச் சொற்களும் ஆங்கிலச் சொற்களும் கலந்து நிற்கும் மொழிக் கலப்பு இவரது உரைநடையின் தனித்தன்மைகளுள் ஒன்றெனக் கூறலாம். தனித்தமிழ் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இருப்பினும் இவர் படைத்த புதினங்களும் நாடகங்களும் இவரை மொழிக் கலப்பை மேற்கொள்ளச் செய்து விட்டனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

    காவியம் படைப்போர் கதிரவனின் தோற்றத்தையும் கலைமதியின் தோற்றத்தையும் பாட வேண்டும். காவியச் சுவைக்கு இயற்கையின் எழிலை எடுத்து இயம்புவது இன்றியமையாதது. அவ்வாறு இயற்கையைப் பாடும் போது இயற்கையில் தோன்றும் காட்சிகளுக்கு அல்லது இயற்கையாக நிகழும் நிகழ்ச்சிகளுக்கான காரணத்தை அக்கவிஞர்கள் தமது கற்பனையேற்றிக் கூறுவர். அது அணிவகைகளில் தற்குறிப்பேற்றம் எனப்படும். இம்மரபு நாவல் படைக்கும் உரைநடை ஆசிரியர்களிடத்தும் காணப்படுகின்றது.

    “காலத்தின் கட்டியக்காரன் பன்னிரண்டு முறை அலறினான். சிறிய முள்ளும் பெரிய முள்ளும் ஒருங்கே இணைந்து அந்த வீட்டில் ஏற்பட்ட புதிய திருப்பத்தைக் கண்டு வணக்கம் போடுவதைப் போலத் தெரிந்தன.”

    இந்தப் பத்தி சமூகச் சிறுகதையொன்றில் இடம்பெறும் தற்குறிப்பேற்றம் ஆகும். 

    உரைநடையாசிரியர்களுக்குப் புதுச் சொற்களைப் படைத்து உலவ விடும் ஆற்றல் உண்டு. அத்தகைய ஆற்றலை அந்த உரைநடையாசிரியரின் தனித்தன்மைகளுள் ஒன்றாகவும் கருதலாம்.

    “அந்தச் சிரிப்பில் வெற்றிப் பெருமிதம் மட்டும்தானா எதிரொலித்தது? வேதனைச் சிறுமிதமும் எதிரொலிக்கத்தான் செய்தது.”

    இதில் வரும் சிறுமிதம் என்ற சொல் புதியதாகப் படைக்கப்பட்டது எனினும் அதன் பொருள் எளிதில் விளங்குகின்றதல்லவா? 

    கோவி.மணிசேகரனின் கதைகளில் விறுவிறுப்பு மிகுதி. படிக்கத் தொடங்கும் எவருக்கும் அக்கதை சோர்வைத் தருவதில்லை. எழுத்தாளர் சாண்டில்யன் அவர்கள்,

    “ரஸமாகக் கதையை நகர்த்திச் செல்லும் தந்திரங்களைத் திரு.கோவி.மணிசேகரன் அவர்கள் நன்றாகத் தெரிந்தவர்; பயன்படுத்தி வெற்றி கண்டவர். ஆகவே அவருடைய கதைகளை அலுப்பில்லாமலேயே படித்து முடிக்கலாம்” என்று குறிப்பிடுவதை நாம் இங்கு எடுத்துக் காட்டலாம். நடையில் விறுவிறுப்பான ஓட்டம் அமைவது, வாசகர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மொழித் திறனும் கைத்திறனும் ஆகும். இத்தகு திறன் கோவி.மணிசேகரனின் கதைகள் தோறும் காணப்படுகின்றது.

    ‘இவருடைய நடையை யாரும் பின்பற்ற முடியாது. வேகமும், எழிலும், வர்ணனைத் திறனும் கலந்த வண்ண நடை இவருக்கே சொந்தம்’ என்ற பாராட்டு மொழிகளும் கோவி.மணிசேகரனுக்கே உரித்தானவை.

    எனவே மாணவர்களே! இருபதாம் நூற்றாண்டுப் புத்திலக்கிய உலகில் கோவி.மணிசேகரன் சிறுகதை, புதினம், நாடகம் எனப் பல்வேறு வகை படைப்புகளில் தம் உரைநடைத் திறனால் தனித்தன்மையோடு விளங்குகிறார் என்பதை இதுகாறும் அறிந்து கொண்டீர்கள் அல்லவா?

புதுப்பிக்கபட்ட நாள் : 31-07-2018 12:22:10(இந்திய நேரம்)