தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.5 தொகுப்புரை

    ஐம்பதாண்டுகளுக்கு மேலாகத் தமிழில் புத்திலக்கியங்களைப் படைத்து வரும் கோவி.மணிசேகரனின் படைப்புகளை நாடகங்கள், சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், கவிதைத் தொகுதிகள் என்று வகைப்படுத்திக் காணலாம். இவரது இலக்கியப் படைப்புகளுள் புதினங்கள் சிறந்து விளங்குவதால் இவரைப் புதினப் பேரரசு என்று போற்றுகின்றனர்.

    கோவி.மணிசேகரன் தன் உரைநடைக்கு ஊற்றுக் கண்ணாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா என்றும் டாக்டர் மு.வ.வின் அரவணைப்பால் தான் உருவானதாகவும் குறிப்பிடுகிறார். அண்ணாவின் அடுக்கு மொழிகளும் அழகுத் தமிழும் இவரின் உரைநடையிலும் காணப்படுகின்றன.

    கோவி.மணிசேகரனின் உரைநடை பலவகைகளில் அமைகின்றது. அவற்றுள் செந்தமிழ் நடை, இலக்கிய நடை, உடையாடல் நடை, மணிப்பிரவாள நடை, பேச்சுமொழி நடை, வட்டார வழக்கு நடை, உணர்ச்சி நடை ஆகியவை குறிப்பிடத் தக்கவை. கோவி.மணிசேகரனின் உரைநடையில் இலக்கியக் கூறுகள் அமைந்திருக்கும் திறன் எடுத்துக் காட்டப்பட்டது. அவற்றுள் எதுகையும் மோனையும், உவமை நயம், உருவகம், அடுக்கு மொழிகள், பழமொழிகள் முதலியவற்றிற்குத் தனித்தனியே எடுத்துக் காட்டுகள் காட்டப்பட்டன.

    கோவி.மணிசேகரனின் உரைநடையில் அமைந்திருக்கும் தனித் தன்மைகளை விளக்குவதற்கு, கோவி.மணிசேகரனின் உரைநடையில் அமைந்திருக்கும் வருணனை நடை, அதில் இழையோடும் நகைச்சுவை, மொழிக் கலப்பு, தற்குறிப்பேற்றம், சொல்லாக்கம் ஆகியவற்றுடன் இவரின் உரைநடையில் காணப்படும் விறுவிறுப்பு நடையும் எடுத்துக் காட்டப்பட்டது. கோவி.மணிசேகரன் தன் படைப்புகளாலும் பைந்தமிழ் நடையினாலும் இருபதாம் நூற்றாண்டுப் புத்திலக்கிய உலகில் தனியிடம் வகித்து நிற்பவர் என்பதும் விளக்கப்பட்டது.



    1.
    கோவி.மணிசேகரனின் உரைநடையில் காணப்படும் இலக்கியக் கூறுகளுள் உம் பாடப்பகுதியில் எத்தனை எடுத்துக் காட்டப் பட்டுள்ளன?
    2.
    கோவி.மணிசேகரனின் உரைநடையில் காணப்படும் இலக்கியக் கூறுகள் இரண்டிற்கு எடுத்துக் காட்டுத் தருக.
    3.
    கோவி.மணிசேகரனின் உரைநடையின் தனித்தன்மைகளில் இரண்டினை விளக்குக.
    4.
    உரைநடையாசிரியர்களை அடையாளம் காட்டுவன எவை?
    5.
    ‘ரஸமாகக் கதையை நகர்த்திச் செல்லும் தந்திரங்களைத் திரு.கோவி.மணிசேரகன் அவர்கள் நன்றாகத் தெரிந்தவர்’ என்று உரைத்தவர் யார்? ஏன்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-08-2017 16:59:18(இந்திய நேரம்)