தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விக்கிரம சோழன் உலா

  • மூவருலாவில் முதற்கண் நிற்பது விக்கிரமசோழன் உலா. இவ்வுலாவில் உள்ள கண்ணிகள் 342 ஆகும். முதல் 23 கண்ணிகள் சோழர் குலம் தோன்றிய காலம் தொட்டு வழிவழியாக ஆண்ட மன்னர்களில் சிறந்தோர்களை எடுத்துக்கூறுகின்றன. 24 முதல் 27 வரை உள்ள கண்ணிகள் முதற்குலோத்துங்கன் சிறப்பும், செயலும் கூறுகின்றன. 28 முதல் 35 வரை உள்ள கண்ணிகளில் விக்கிரம சோழன் பிறப்பும், சிறப்பும், ஆட்சி புரியும் ஆண்மையும் பிறவும் கூறப்படுகின்றன. பின்னர், பள்ளியெழுச்சி, நீராடல், தெய்வ வணக்கம், கொடை, அணி புனைதல், உலாவிற்குப் புறப்படல் ஆகியன 52 கண்ணிகள் வரை கூறப்படுகின்றன. பின் 64 கண்ணிகள் வரை பட்டத்து யானையின் சிறப்புப் பலவாறாகப் பேசப்படுகிறது. யானை மீதமர்ந்து பவனி வருவதும் உடன் வருவோர் தொகையும் 90 கண்ணிகள் வரை தொடர்ந்து கூறப்படுகின்றன.

    இவற்றைத் தொடர்ந்து பேதை (113-133), பெதும்பை (134-162), மங்கை (163-192), மடந்தை (193-227), அரிவை (228-262), தெரிவை (263-305), பேரிளம்பெண் (305-327) ஆகிய ஏழு பருவப் பெண்களின் வனப்பும் பண்பும் செயல்களும் காதலும் மயக்கமும் முறையே கூறப்படுகின்றன. பின் தோழியர் பலர் ஏங்கி நின்று தம் தலைவியைப் புரக்குமாறு வேண்ட, விக்கிரம சோழன் உலாப் போந்தான் என விக்கிரம சோழன் உலா நிறைவு பெறுகிறது.
     

    இந்நூல் கலிவெண்பா என்னும் பாவினால் அமைந்தது. வெண்டளை பெற்று, இரண்டாமடி தனிச்சொல் பெற்று, முற்றுப்பெறுகின்றது. அடிதோறும் மூன்றாம் சீரிலாவது நான்காம் சீரிலாவது மோனை இடம் பெற்றுள்ளது. எதுகையும் மோனையும் இல்லாத கண்ணிகள் இந்நூலில் எங்கணும் இல்லை.சொல்லணியும் பொருளணியும் ஆங்காங்கே அமைந்து இந்நூலுக்கு அழகு சேர்க்கின்றன. ஒட்டக்கூத்தரின் கற்பனைத்திறம் நூலின் பலவிடங்களில் பளிச்சிடுகிறது.

    இவ்வுலாவின் பாட்டுடைத்தலைவன் விக்கிரமசோழன். இவன் இராசகேசரி முதற்குலோத்துங்கனுக்கும் மதுராந்தகிக்கும் பிறந்த எழுவரில் ஒருவன். இவனுடன் பிறந்தோர் இரண்டாம் இராசராசன், வீரசோழன், சோழகங்கன் ஆகிய மூவரே. மற்றை மூவர் பெண்மக்களாவர். எழுவரில் இவனே இளையோன் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இம்மன்னன் கி.பி. 1118-ஆம் ஆண்டில் முடி சூடி அரசு கட்டில் ஏறினான். கி.பி. 1122 வரை தந்தையுடன் இருந்து ஆட்சி புரிந்தான்.

    இம்மன்னன் அரசு புரியும் காலத்தில் வடஆர்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களில் வெள்ளக்கேடு நேர்ந்த காரணத்தால் ஊர்ப்பொது நிலங்களை விற்று அரசாங்கவரி செலுத்தப்பட்டது என அறிகிறோம். கல்வெட்டு ஒன்றில் இவ்வெள்ளக்கொடுமை நிகழ்ந்தது பொறிக்கப்பட்டுள்ளது. காலம் பொல்லாததாய் நம்மூர் அழிந்து குடி ஓடிப்போய்க் கிடந்தமையால் என்பது அக்கல்வெட்டின் தொடக்கம். அதனால் இவன் ஆட்சியில் உணவுப்பஞ்சம் மிகுந்திருந்தது என அறியலாம்.

    இவன் ஆட்சிக்காலம் முழுவதும் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகராய் அமைந்திருந்தது. திருமழபாடிக்கல்வெட்டு ஒன்றில் இவன் செய்த திருப்பணியும் திருவிழாவும் விரிவாகப் பொறிக்கப்பட்டுள்ளன. தில்லைக்கோயில் திருப்பணிகள் விக்கிரம சோழனது பத்தாம் ஆட்சியாண்டில் செய்யப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளன.

    பகைவரைத் தொலைத்து, கொங்கண நாடும், கன்னட நாடும் கைக்கொண்டு வலிமை பொருந்திய மராட்டிய அரசனைக் கொன்று, கொடிய வறுமையையும் சுங்கத்தையும் நீக்கி, ஆத்தி மாலையால் பொலிந்த வலிமையான தோள்களை உடைய முதற்குலோத்துங்கனுக்கு (அபயனுக்கு) மகனாகப் பிறந்தவன் விக்கிரம சோழன். பாண்டியன் திறையாகத் தந்த முத்துகளை அணிந்து சந்தனக்குழம்பையும் பூசி, பெருமை உடைய மகளிர் கூட்டம் அருகிருந்து போற்றவும் மூன்று கண்களை உடைய சிவபெருமானை வணங்கிய பின் ஏழைகளுக்கு அன்னம் ஆடை முதலியன வழங்கினான். மன்னனுக்குத் தக்க அணிகலன்களான மகரக்குழை, வாகுவலயம், மணிகள் பதித்த கடகம், கவுத்துவ மணி ஆகியவற்றை அணிந்து கொண்டான். அயிராவதம் என்னும் பட்டத்து யானையின் மேல் ஏறி அமர்ந்தான். ஒரு வலம்புரிச்சங்கு முதலில் ஊதப் பின் மற்றுமுள்ள பல சங்குகள் முழங்குகின்றன. மன்னர் பலர் வந்து விக்கிரம சோழன் பாதங்களில் வணங்கும்போது அவர்கள் முடிபடுவதால் சோழமன்னனின் கழல்கள் ஒலிக்கின்றன.

    தொண்டைமான், வாணன், காடவன், வேணாடர் வேந்தன், அனந்தபாலன், அதிகன், நுளம்பன், திகத்தன், மாளுவ நாட்டு மன்னன், மகத நாட்டு மன்னன், சேரன், பாண்டியன், பல்லவன், மற்றைய மண்டலத்து மன்னர்கள் ஆகியோரும் மற்றும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் முன்புறத்திலும் வலப்புறம் இடப்புறம் ஆகிய இரு பக்கங்களிலும் சூழ்ந்து நெருங்கி வர, விக்கிரம சோழன் உலா வரும் சிறப்பைக் காணலாம்.

    இம்மன்னன் உலா வருவதைக்காண வேண்டும் என்ற வேட்கையால் சூழ்ந்திருக்கும் பரத்தையர் கூட்டம் மணற்குன்றின் மேல் அமர்ந்திருக்கும் அன்னப்பறவைக் கூட்டம் போலவும், மேகத்தில் தோன்றும் மின்னல் கூட்டம் போலவும், மலைகள் தோறும் சேர்ந்த மயில் கூட்டம் போலவும் விரைந்து வந்து தெருவெங்கும் நெருங்கி நின்றது.

    விக்கிரம சோழன் உலா வரும் அழகைக் காண வந்த மகளிர் கூட்டம் அரம்பையர் போலவும் (தேவருலக மகளிர்) நாகருலக மகளிர் போலவும் விஞ்சையர் உலக மகளிர் போலவும் தோன்றினர் என்கிறார் ஒட்டக்கூத்தர். பிறை போன்ற பேதைப்பெண் இளமையான அன்னப்பெடை போன்றவள், இளங்கொம்பு போன்றவள் விக்கிரம சோழன் அணிந்திருந்த செங்கழுநீர் மாலையையே பார்த்தாள். வேறொன்றையும் பார்க்கவில்லை. அந்த மாலையை வாங்கி எனக்குத் தாருங்கள் என்று தாய்மாரிடம் கூறுகின்றாள்.

    பெதும்பைப் பருவத்தாள் ஒருத்தி வேய்ங்குழல் போன்ற இனிமையான சொற்களைப் பேசக்கூடியவள் தான் கண்ட கனவினைப் பேசுகின்றாள். ஓர் இளம்பூங்கொடி செழித்த கோங்க மரத்தின் ஒரு கொம்பினைப் பற்றி இணைந்திருப்பது கண்டு மகிழ்வுற்றேன் என்கிறாள்.

    செருக்குற்ற அன்னம் போன்ற மங்கைப்பருவப் பெண்ணொருத்தி விக்கிரம சோழனைப் பெதும்பைப் பருவத்தில் கண்டு காதல் கொண்டவள். அவன் பாதம் முதலாகத் தங்க முடி புனைந்த உச்சி வரையிலும் மனத்திலே குறித்தெழுதிப் பின் படத்தில் எழுதிப் பகல் முழுதும் பார்த்திருந்தவள். இப்பொழுது மன்னனைக் காணத் தன்னை அலங்கரித்துக்கொண்டு இப்பொழுது தன்னை அறிவானோ என்று கண்ணும் மனமும் களித்து நிற்கிறாள்.

    வெல்லப்பாகு போன்ற இனிய சொல்லையுடைய மடந்தைப் பருவப்பெண் பாங்கியிடம் பந்தயம் கட்டிப் பல பந்துகளைக் கையிலெடுத்தாள். ஆட்டத்தில் பாங்கியை வென்றாள். உடனே சூரியன் போன்ற சோழன் மாலையை வாங்கித்தா என்று அவளை வருத்தி நிற்கிறாள்.

    தேவாமிர்தம் போன்ற அரிவைப் பருவமுடைய ஒருத்தி மான்விழி போன்ற கண்களை உடையவள்; முன்னொரு நாள் தெருவில் பவனி வந்த விக்கிரம சோழன்பால் காதல் கொண்டவள் இப்போது காமத்தீயால் மனம் உருகி நிற்கிறாள். அன்னங்கள், குருகுகள், குயிலினங்கள், மயிலினங்கள், வண்டுகள் ஆகியவற்றைப்பார்த்து, சோழனை அடைய நீங்கள் எனக்கு உதவி செய்ய மாட்டீரோ என்று மயங்கிக் கூறி நிற்கிறாள்.

    மயக்கம் கொடுக்கும் தேன் போன்ற தெரிவைப்பெண் ஒருத்தி பாணனை நோக்கி, சோழனது நாட்டையும், ஆத்திமாலையையும், புலிக்கொடியையும், காவிரியாற்றினையும் பற்றிப்பாடுக என்கிறாள். பாணன் யாழிலிருந்து எழுந்த இசைப்பாடல்கள் இனிமையாக ஒலிக்க, காமனுடைய அம்புகள் அவளைத் துன்புறுத்த, விடியுமளவும் காதலால் பலபடப் புலம்பி நிற்கிறாள்.

    வில்லை நெற்றியாகக் கொண்ட பேரிளம்பெண் கமழும் பூமாலை பல அணிந்து, கள்ளுண்டு களித்துக் கனவிலே சோழனைக் கண்டு மகிழ்ந்தவள், கனவை நனவாகப் பலரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள்.

    1)
    உலா இலக்கியம் எதைப் பற்றிப் பாடுகிறது?
    2)
    முதல் உலா நூல் எது?
    3)
    உலாவின் அமைப்பு முறை பற்றிக் கூறுக
    4)
    ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல்கள் யாவை?
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 12:51:25(இந்திய நேரம்)