Primary tabs
-
6.2 பிறவகை மொழிபெயர்ப்பு
மொழிபெயர்ப்பு என்பதை, நூல் மொழிபெயர்ப்பு என்றும் பிறவகை மொழிபெயர்ப்பு என்றும் பிரிக்கலாம். நூல் மொழிபெயர்ப்பில் உண்டாகும் சிக்கல்களும், பிற வகை மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்களும் வேறு வேறானவை. அவற்றைத் தனித் தனியே பிரித்துக் காண வேண்டும்.
6.2.1 விளம்பர வகை மொழிபெயர்ப்பு
தமிழ்நடை பற்றிக் கூற வந்த மு. அருணாசலம் தமது இன்றைய தமிழ் வசன நடை என்ற நூலில் பழந்தமிழ் நடை புதுத்தமிழ் நடை என்ற இயல்களில் தமிழின் நடைமுறை நிலைக்குப் பல பெயர்களை இட்டு வழங்குகிறார். அவற்றில் வடமொழித் தமிழ், தனித்தமிழ், சர்க்கார் தமிழ், பாதிரித் தமிழ், அம்மாமித் தமிழ், ஹாஸ்யத் தமிழ், மொழிபெயர்ப்புத் தமிழ், விளம்பரத் தமிழ், பத்திரிகைத் தமிழ் என்பன நம் கவனத்திற்குரியன.
உற்பத்தியாளர்கள் தங்கள் பொருளின் தரத்தை உயர்த்திக் காட்டி விளம்பரத்தைக் காண்போர் வாங்கியாக வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் அமைவதே விளம்பரத் தமிழாகும். இன்றைய நிலையில் இந்த விளம்பரத் தமிழ்தான் மக்கள் தொடர்புச் சாதனங்களின் மணி மகுடமாகத் திகழ்கிறது.
விளம்பரத்திற்குச் சொல்லப்படும் செய்தி முன்பின் மாறானதாக இருத்தல் கூடாது. விளம்பரத்தைப் படிக்கும் ஒருவன் அப்பொருளை வாங்கிப் பயன்படுத்தியே தீரவேண்டுமென்ற வேகத்தை அவனுக்குள் உருவாக்கவேண்டும். ''இரண்டு வாங்கினால் அல்லது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்'' என்ற விளம்பரம் இன்றைய சூழலில் பலரைக் கவரும் ஒன்றாக அமைகிறது. ஆக நல்ல மொழிபெயர்ப்பால் இலக்கிய வளமையும், வணிக இலாபமும் பெற்றுக் கொள்ளலாம்.
6.2.2 மக்கள் தொடர்புச் சாதன மொழிபெயர்ப்பு
மக்கள் தொடர்புச் சாதனம் என்னும் போது வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி முதலியன முதலிடம் பெறுகின்றன. இலக்கியம், நாடகம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் கொண்டவற்றையும் அறிவியல் துறைசார்ந்த பிறவற்றையும் பலரும் அறிந்து பயன்பெற உதவுவது இச்சாதனம். ''விளம்பரத்தால் வரும் வாழ்வு நிரந்தரமாகாது'' என்று கவியரசு கண்ணதாசன் பாடினாலும் கூட, பலருக்கு முகம்காட்ட வழிசெய்தது இச்சாதனங்களே. மொழிபெயர்ப்பைத் துறைதோறும் பிரித்து வகைப்படுத்தும் போது,
(1) விளம்பரச் செய்தி மொழிபெயர்ப்பு
(2) அறிவியல் மொழிபெயர்ப்பு
(3) இலக்கிய மொழிபெயர்ப்புஎன்று கொள்ளலாம். தொலைக்காட்சி மைய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வானொலி பிரசார் பாரதி நிறுவனக் கட்டுபாட்டில் இருக்கிறது திரைப்படம். சட்டதிட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்ட நெறியின் படி செயல்படுவது. இவற்றில் இலக்கியம், நாட்டு நடப்பைக் காட்டும் நாடகங்கள், செய்திகள், அறிவியல் சாதனங்கள், மக்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஒரு மொழியில் தயார் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்து ஒலிபரப்பப்பட்டும், ஒளிபரப்பப்பட்டும் வருவதைக் காணுகிறோம். ஒலி, ஒளி மொழிபெயர்ப்பு நிலையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழிகோல இந்த மக்கள் தொடர்புச் சாதனங்கள் துணை நிற்கின்றன.
6.2.3 தொழில் நுட்பத்துறை மொழிபெயர்ப்பு
தமிழ் இலக்கியம் தமிழர்களின் மரபுச் சொற்களை, பழக்க வழக்கங்களைத் தன் கவிதையிலே கொண்டு அமைந்துள்ளது. சங்க இலக்கியம் தொட்டு அனைத்து இலக்கியங்களிலும் மரபுச் சொற்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கக் காணலாம். சங்கப் பாடல்களில் பொருளடக்கமானது திணை, துறை என இருவகையாகப் பகுக்கப்பட்டது. இதனை ஆங்கிலப் படுத்தும் நிலையில் Theme, Sub-theme என்ற சொற்களால் சுட்டினர். ஆனால் அதன் கீழ்வரும் திணை - பொதுவியல், துறை - இயல்மொழி வாழ்த்து என்றெல்லாம் வரும்போது விளக்கலாமே தவிர மொழி பெயர்க்க இயலாது.
அகம், புறம் என்ற பிரிவுகளும் குறிஞ்சி, முல்லை, வெட்சி, தும்பை என்ற குறிப்புணர்த்தும் பூக்களின் பயன்பாடும் பிறமொழிகளில் விளக்கப் படலாமே தவிர, மொழிபெயர்க்கப்பட இயலாது.
புறப்பாடலில் போரின் நிலை, ஆட்சி அமைப்பின் பகுதி இவை சுட்டப்படும் நிலையில் கருத்து, பொருள் இவைதான் குறிப்பிடப்பட இயலுமே தவிர மொழிபெயர்ப்பில் கொண்டு வந்து அமைப்பது சிக்கலான ஒரு காரியமே.
இயற்கை நிகழ்ச்சிகளான வேங்கை பூத்தல், வயல் கதிர் முற்றல் என்பன பெண்களின் பருவ மாறுபாடுகள், திருமணத்திற்கு ஏற்ற காலம், பெண்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலை ஆகிய உட்குறிப்புகளை உணர்த்த இலக்கியத்தில் பயன்படுத்தபட்டன. அவற்றை மாற்று மொழியில் படைப்பது என்பது மிகக் கடினமான ஒரு செயலாகும். முயன்று புகுத்தினும் அது சற்றுப் பொருந்தா நிலையில் அமைவது திண்ணம். வெறியாட்டு என்ற ஒரு நிலையைச் சங்க இலக்கியம் தருகிறது. அதனை அந்தக் கருத்திலே எப்படி மாற்று மொழியில் தருவது? இத்தகு சிக்கல்கள் இலக்கிய நிலையில்தான் உண்டு என்றால், அங்ஙனமல்ல, பிற துறைக் கலைச்சொற்களை மொழியாக்கம் செய்யும் நிலையிலும் இது எழுகிறது. நமது மொழியைக் காட்டிலும் ஆங்கிலத்தில் சொற்கள் அதிகம். எனவே, தொழில் நுட்பத் துறை சார் நூல்களைத் தமிழில் பெயர்க்கும் போது நிகரான அல்லது இணையான தமிழ்ச் சொற்கள் கிடைப்பது கடினமாகிறது.
எடுத்துக்காட்டாக :
Treatment என்ற சொல் நமக்கு அன்றாடப் பழக்கத்திலுள்ள சொல்தான். அது பயன்படுத்தப்படும் இடத்திற்கேற்பப் பொருள் மாற்றம் பெறும். மருத்துவரிடம் சிகிச்சை பெறும்போது ஒரு treatment வருகிறது. அவர் treatment சரியில்லையென்று ஒரு பெண் தன் கணவனைப் பற்றிச் சொல்லும் போது ‘பெண்ணை நடத்துமுறை’ என்ற பொருளில் வருகிறது. பாலுமகேந்திரா படத்தில் ‘அவர் treatment -ஏ தனிதான்’ என்றால் அவர் படத்தை இயக்கிச் செல்லும் முறை என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. இப்படிப் பல சொற்களைச் சுட்டிச் சொல்லலாம்.
இக்காலத்தில் சிறுகதை, புதினம் முதலியவற்றில் பேச்சு வழக்கு அப்படியே பயன்படுத்தப்படுகிறது. Tubelight என்பது குழல் விளக்கைச் சுட்டும் அதே நேரத்தில் ‘அவன் சரியான Tubelight’ என்றால் எளிதில் புரிந்து கொள்ளும் திறனற்றவன் என்ற பொருளையும் தருகிறது. இவற்றை மொழிமாற்றம் செய்ய முனைந்தால் நடைமுறை மரபு தெரியாத போது புரிந்துணர இயலாது போகும்.
6.2.4 ஆட்சித்துறை மொழிபெயர்ப்பு
‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்!’ என்ற ஒலி மக்களின் மூச்சுக் காற்றிடைக் கலந்து ஒன்றிவிட்ட போதிலும் ஆட்சித்துறையில் மேல்அலுவலர்கள், அலுவலர்கள் என்ற நிலையில் பிற மாநிலங்களைச் சேர்ந்த வட்டார மொழி அறியாத அதிகாரிகளால் ஆங்கிலம் மேலோங்கி விடுகிறது. தமிழில் ஆட்சியை நடத்திச் செல்ல மிகுந்த வாய்ப்பு அளிக்கத்தக்க ஒரேதுறை ஆட்சித்துறைதான். அதில் ஆங்கிலத்திற்கு மரியாதை அளிக்கப் படலாம். ஆனால் ஆளுகை தமிழின் கையில் இருக்க வேண்டும். அதற்கு மொழிபெயர்ப்புகள்தாம் ஏற்ற துணையாகின்றன.
நம்நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் நீதித்துறையோடு தொடர்பு உடையவர்களான முனிசீப் வேதநாயகம் பிள்ளையும், நீதிபதி தாமோதரம் பிள்ளையும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தமிழாக்கம் செய்த நிலையை நமக்கு வரலாறு காட்டுகிறது. ஆகத் தம் நெருக்கமான பணியிலும் அவர்கள் நேரம் ஒதுக்கி மொழிபெயர்ப்பை வளர்த்தமை போற்றற்குரியதே.
6.2.5 மேடை மொழிபெயர்ப்பு
மேடையில் ஒருவர் பேசுவதை மற்றொருவர் வட்டார மொழிக்கு மாற்றம் செய்வது சமயப் பிரச்சாரங்கள், சமய வழிபாட்டு நிலைகளில் இன்றும் இருந்து வருவதைக் காணுகிறோம். இங்ஙனம் மொழிபெயர்ப்பதில் சிரமம் அதிகம். பேசுபவர் என்ன சொல்லப் போகிறார் என்ற கவனம் முதலில் மொழிபெயர்ப்பாளருக்குத் தேவை, சொல்பவரது சொல், ஓசைநயம், உறுப்பு அசைவுகளும் கூட மொழி மாற்றாளருக்குக் கை வரப் பெற வேண்டும்.