தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சட்டத்துறை மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்

  • 6.4 சட்டத்துறை மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்

    கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தமிழை ஆட்சி மொழியாக ஏற்றபின் சட்டம், நிர்வாகம் (ஆட்சி), நீதி ஆகிய மூன்று துறைகளிலும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கோட்பாட்டின்படி, தமிழை ஆட்சி மொழியாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். எளிய மக்களுக்குப் புரியும் வகையில் மேற்கண்ட சட்டம், ஆட்சி, நீதி ஆகிய துறைகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். அப்போதுதான் பாமர மக்களுக்கும் ஆட்சித்துறைக்கும் நேரடியான தொடர்பு ஏற்படும் என்பது நடைமுறை.

    சட்டம், ஆட்சி, நீதி ஆகிய துறைகளில் செய்யப்படும் மொழிபெயர்ப்பில் இலக்கிய மொழிபெயர்ப்புப்போல மொழி நயத்திற்கோ, உணர்ச்சிக்கோ சிறிதும் இடமில்லை. நீதிபதியின் மொழியாளுகை போல, செறிவாகவும் கறாராகவும் மொழிபெயர்ப்பு இருத்தல் வேண்டும். இல்லையேல் சிக்கல்களே மிஞ்சும்.

    சட்டக் கருத்துகளை மிகைபடக் கூறாமலும் குன்றக் கூறாமலும் நடுநிலையில் உள்ளதை உள்ளவாறே எளிய, தூய தமிழில் திறம்பட எடுத்து இயம்ப வேண்டியது சட்டவியல் தமிழ் வரைவுகள் ஆகும். சட்டமொழி (Legal Language) என்பது ஒரு மொழியின் பயன்பாட்டில் சட்டக் கருத்துக்களை, தெள்ளத்தெளிவாக, சொல்ல வந்த செய்தியைத் தொடர்புபடுத்தி, அந்தந்தச் சமுதாயச் சூழல்களுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளப்படும் அல்லது எழுதப்படும் ஒரு மொழிநடையாகும்.

    6.4.1 கலைச் சொல்லாக்கம்

    அறிவியல் துறையைப் போன்றே சட்டம், ஆட்சி, நீதி ஆகிய துறைகளில் பயன்படும் மொழிநடையும் வரையறைக்கு உட்பட்டது. ஆகையால் இத்துறைகளுக்கும் கலைச்சொற்கள் தேவைப்படுகின்றன. தமிழில் சட்டக் கருத்துக்களை வெளியிடும்போது நிறைய, புதிய தமிழ்ச்சொற்கள் தேவைப்படுகின்றன. அவற்றை நிறைவு செய்வதற்கே சொல்லாக்கம் தேவைப்படுகிறது.

    உருவாக்கப்படும் கலைச்சொற்களைத் தரப்படுத்தும்போது பொருத்தமுடைமை, எளிமை, ஏற்புடைமை, மொழித்தூய்மை, ஒரு சீர்மை ஆகியவையும் பல்துறை அணுகுமுறையும் போக்கும் பின்பற்றப்பட வேண்டும்.

    பொருத்தமுடைமை

    ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான பல தமிழ்ச் சொற்கள் இருந்தாலும் அச்சூழ்நிலைக்கு ஏற்ற பொருத்தமுடைய சொல்லைத் தரப்படுத்துதல் அவசியமாகும்.

    எளிமை

    சொல் எளிமையாக அமைவதோடு கேட்பதற்கும் இனிய ஓசை நயம் உடையதாகவும் இருக்க வேண்டும். ‘By Beat of Drum’ என்ற ஆங்கில வாசகத்திற்குப் பறையறைதல் என்ற சொல் பொருத்தமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. அவ்வாறே பப்ளிக் பங்க்ஷனரி (Public Fuctionary) என்ற ஆங்கிலத் தொடருக்கும் பொதுவாழ்வினர் என்ற ஓசை நயம் மிக்க பொருள் பொதிந்த சொற்றொடரைக் கையாளுகின்றனர். அதே போல் Confidential என்ற சொல்; இதற்கு மறைபொருள் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

    ஒரு சீர்மை

    தமிழில் சட்டத்தை வரையும் பொழுது சட்டக் கலைச்சொற்களை ஒரு சீர்மையாகப் பயன்படுத்தத் தவறினால் ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களைத் தமிழில் வரைவது இயலாது. மேலும் தமிழில் வரையப்படும் பல்வேறு சட்ட வாசகங்களில் தெளிவும் திட்பமும் இல்லாது போய்விடும். பொருள் மயக்கமும் குழப்பமும் நேர்ந்துவிடும். எனவே, அடிப்படையாக அமைய வேண்டியது ஒரு சீர்மை கொண்ட சட்டச் சொல்லாக்கம் ஆகும்.

    6.4.2 சொல்லும் சொற்றொடரும்

    சட்டக் கருத்துகளை வெளியிடுவதற்கு, கலைச்சொற்கள் மிகவும் இன்றியமையாதவையாகும். இலக்கியக் கருத்துகளைச் சொல்லும் ஒரு வாக்கியத்தின் தன்மை வேறு; சட்டவியல் கருத்துகளைக் கூறும் ஒரு வாக்கிய அமைப்பின் தன்மை வேறு. சட்டத்தில் சொல்லப்படும் கருத்துகள் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் வேண்டும். சட்ட மொழிபெயர்ப்புகளில் செயப்பாட்டு வினைவாக்கியங்கள் பெருமளவில் பயன்படுகின்றன. இச்செயப்பாட்டு வினைவாக்கியங்களை மாற்றி நேரடியாகக் கூறும் போது சில இடர்ப்பாடுகள் இருப்பதால், அவை செயப்பாட்டு வினை வாயிலாக வெளியிடப்படுகின்றன.

    6.4.3 எளிமையாக்கமும் விரிவாக்கமும்

    சட்டத் தமிழுக்கு, சுமார் ஒன்றரை நூற்றாண்டு வரலாறு உண்டு என்பர். மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளையவர்கள் தமிழ்ப் புதினத்துக்கு மட்டும் தந்தையல்ல; சட்டத் தமிழுக்கும் அவரே தந்தை என்கின்றனர். இவர் முதன்முதலாக ஆங்கிலத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு, சட்டத் தமிழையும் தொடங்கி வைத்துள்ளார். அவரது சமகாலத்தவரான யாழ்ப்பாணம் தாமோதரம் பிள்ளை அவர்களும் புதுக்கோட்டை அரசவையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நீதிபதியாக இருந்து தமிழில் நிறைய சட்டங்களை மொழிபெயர்த்துள்ளார்.

    1980ஆம் ஆண்டு சனவரி திங்கள் முதல் பேராசிரியர் மா.சண்முகசுப்பிரமணியம் அவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட தீர்ப்புத்திரட்டு என்ற சட்டத்தமிழ் திங்கள் இதழில், தமிழில் வெளியான பல பழந்தமிழ்த் தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பல தீர்ப்புகள் ஒரு நூற்றாண்டானவை. அவற்றில் தமிழின் மொழிநடை, சொல்லின் பயன்பாடு, பயன்படுத்தப்பட்டுள்ள சொற்றொடர் ஆகியவற்றில் இடைக்காலத் தமிழில் வடமொழி பெற்றிருந்த செல்வாக்கைப் போலவே, ஆங்கிலம், பாரசீகம், உருது போன்ற பிறமொழிச் சொற்கள் செல்வாக்கைப் பெற்றிருந்ததைக் காண முடிகிறது.

    சட்டத் துறையில் சிக்கல் ஏற்படாமல் மொழிபெயர்க்கப் பின்வரும் பரிந்துரைகளை முக்கியமானவையாகக் கொள்ளலாம்.

    1. எளிய சட்டச் சொற்களைத் தொகுத்துச் சட்டத் தமிழ் அகராதி வெளியிடுதல் - மொழிபெயர்ப்பின்போது இதனையே பின்பற்றுதல்.

    2. தொழிலாளர்கள் மற்றும் எளிய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பொதுமக்களுக்குத் தேவையான சில வழக்குகளைத் தொகுத்துச் சிறு சிறு நூல்களாக மொழிபெயர்த்தோ, தமிழிலேயோ வெளியிட வேண்டும்.

    3. இலவசச் சட்ட உதவி வழங்குவோர் பெரும்பாலும் தாய் மொழியாம் தமிழிலேயே தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்தல்.

    இவற்றால் மக்களிடம் தமிழில் சட்டக் கருத்துகள் எளிமையாகப் பரவ வாய்ப்பு உண்டு. அதே சமயம் மொழிபெயர்ப்பின்போது எழும் சிக்கல்கள் பலவற்றையும் தவிர்த்துக் கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 19:03:38(இந்திய நேரம்)