தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்

  • 6.6 ஆங்கிலம், தமிழ் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்

    பிறமொழிகளிலிருந்து வந்துள்ள பெரும்பான்மையான தமிழ் மொழிபெயர்ப்புகள் ஆங்கில வழியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளாயினும் உலக மொழிகளாயினும் ஆங்கிலமொழி வழியாகத் தமிழுக்கு வருகின்றன. இந்திய மொழிகளில் குறிப்பாகத் திராவிட மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும்பொழுது நேரடி மொழிபெயர்ப்பிற்கு நிறைய வழிகள் உள்ளன. இருமொழி அறிஞர்கள் ஆங்கில மொழியின் துணை இன்றியே நேரடியாக மொழிபெயர்த்து வெற்றி கண்டுள்ளனர். ஆனால் வடஇந்திய மொழிகளான இந்தி, குஜராத்தி, ஒரியா, வங்காளம், சிந்தி, பஞ்சாபி போன்ற மொழிகளில் தமிழரில் பலருக்குப் பயிற்சி இல்லாததால் அம்மொழி இலக்கியங்களை ஆங்கிலம் வழியாக மொழிபெயர்க்கின்றனர். ஆகவே, ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கின்றவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைச் சிக்கலின்றித் தெரிந்து வைத்திருந்தால் அதனால் ஏற்படும் மொழிபெயர்ப்புச் சிக்கலைத் தவிர்த்துக் கொள்ளலாம். மொழிபெயர்ப்பும் சிக்கலின்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

    6.6.1 செயப்பாட்டு வினைகளை மொழிபெயர்த்தல்

    செயப்பாட்டு வினைகள் அமைந்துள்ள வாக்கியங்களை மொழிபெயர்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகளை இப்பகுதி வழங்குகிறது. சிக்கலின்றி மொழிபெயர்க்க உதவும் குறிப்புகளை மொழிபெயர்ப்பாளருக்கு வழங்குகிறது.

    செயப்பாட்டு வினைகளைப் பேரளவில் பயன்படுத்துவது ஆங்கில மரபு. தமிழோ மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தும். செயப்பாட்டு வினையைச் செய்வினை அமைப்பில் எழுதுவதே தமிழ் மரபாகும்.

    கற்பிக்கப்பட்ட பாடம்
    -
    கற்பித்த பாடம்
    சொல்லப்பட்ட கதை
    -
    சொன்ன கதை
    அனுப்பப்பட்ட புத்தகம்
    -
    அனுப்பிய புத்தகம்

    கற்பித்த பாடம், சொன்ன கதை, அனுப்பிய புத்தகம் - எனச் செறிவாகவும் சுருக்கமாகவும் எழுதுவதே தமிழ் மரபு.

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 19:06:41(இந்திய நேரம்)