Primary tabs
-
2.4 இன்றைய தமிழ்ச் சிறுகதையின் போக்குகள்
இன்றைய சிறுகதைகள் பெரும்பாலும் இளைய தலைமுறையினரைப் பற்றியதாய் அமைந்துள்ளன. சமூக முன்னேற்றம், கலாச்சார மீட்பு, பரிவு, அன்பு, மனித நலம், இந்த உலகம் நிலைத்து நிற்பதற்கான ஆசை இப்படிப் பல கதைக்கருக்களைக் கொண்டு சிறுகதைகள் உருவாகியுள்ளன. இக்கால கட்டத்திற்குரிய படைப்பாளர்கள் வாழ்வின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும், காதலுமே சிறுகதைகளின் தோற்றத்திற்குக் காரணமாயின. இக்காலச் சிறுகதைகள் ஏறக்குறைய அனைத்துமே சமூகத்துடன் பேசுவதற்கான ஓர் ஊடகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இச்சிறுகதைகளின் சமூகப்பயன் மற்றும் இலக்கியப்பயனைக் காணலாம்.
- சமூகப்பயன்
இன்றைய சிறுகதைகளின் காலம் வாசகர்களின் காலமாக இருப்பதால் சமூகப் பயனில்லாச் சிறுகதைகள் புறக்கணிக்கப்படுவதைக் காணமுடிகிறது. ஆகவே, படைப்பாளர்கள் சமூகப் பொறுப்பு மிக்கவர்களாகவே செயல்படுகின்றனர். இதன் காரணமாகவே இன்று பெண் சுதந்திரம் பற்றிய சிறுகதைகள் பரவலாகத் தோன்றியுள்ளன. அதேபோல் சமூக விழிப்புணர்வுச் சிறுகதைகள், சுற்றுப்புறச்சூழலை இனம் காட்டும் சிறுகதைகள் என்று சமூகப் பிரச்சனைகள் பேசப்பட்டு, சமூகப் பயனுக்குச் சிறுகதைகள் உரியவையாகின்றன.
- இலக்கியப்பயன்
இன்றைய சிறுகதைகள் அனைத்தும் சமகால வாழ்வைப் பற்றிய உரத்த சிந்தனையாகவே அமைந்துள்ளன. இன்றைய சிறுகதைகளில் மொழியின் அழகு, சமூக நோக்கு இவற்றைவிட, செய்தி நேர்த்தி, தொழில் நுட்பம் ஆகியவை முதன்மை பெற்றுள்ளன. எனவே தான் இன்றைய நாளில் நல்ல கதை என்பதே நுட்பமான கதை என்று கூறுமளவில் உள்ளது. இன்றைய சிறுகதை மரபினையும் பேசுகிறது, நவீனத்துவத்தையும் பேசுகிறது. தலைமுறைகளைக் குறித்த பெருமையும் இதற்கு உண்டு. நேரடியான கேள்விகளுக்கு இடமளித்து, கதையின் மூலம் வாழ்க்கை அறியப்படுகிறது. இங்ஙனம் நிகழ்காலத்தை அறிவுறுத்தியும், இன்புறுத்தியும் செயல்படும் இன்றைய சிறுகதைகள் இலக்கியத் தரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளமை உணரத்தக்கது.
இப்பகுதியில், இன்றைய சிறுகதைகளின் வரிசையில் சுஜாதாவின் அடிமை எனும் சிறுகதையும், இமையத்தின் அம்மா எனும் சிறுகதையும் இடம் பெற்றுள்ளன. இனி, இச்சிறுகதைகளின் போக்குகளைக் காணலாம்.
2.4.1 சுஜாதாவின் சிறுகதை - அடிமை
சுஜாதா என்கின்ற ரங்கராஜன் ஒரு பொறியியல் பட்டதாரி. இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். சுஜாதா என்கின்ற தன் மனைவியின் பெயரிலேயே எழுதி வருகிறார். பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். இவருடைய விஞ்ஞானச் சிறுகதைகள் தொழில் நுட்பக் கூறுகளை உள்ளடக்கி, எதிர்காலச் சாத்தியக்கூறுகளைக் கொண்ட தொழில் நுட்பச் சிறுகதைகளாக விளங்குகின்றன. இவ்வகையில் அடிமை சிறுகதையைப் பற்றி இங்குக் காணலாம்.
- கதைச் சுருக்கம்
இக்கதை இயந்திர மனிதனைச் சுற்றி எழுதப்பட்ட தொழில் நுட்பச் சிறுகதையாகும். இந்த இயந்திர மனிதன் கதவைத் திறந்து விடுவது, பானம் கலந்து தருவது, அன்றாட நிகழ்வுகளை நினைவூட்டுவது போன்ற எல்லாப் பணிகளையும் செய்கிறது. ஒரு காலகட்டத்தில் நிஜமனிதனுக்கு இயந்திர மனிதன் மீது வெறுப்புணர்ச்சி வருகிறது. தன் மனைவி மீது இயந்திர மனிதன் அதிக அக்கறை காட்டுவதாகவும், தன் மீது வெறுப்புக் காட்டுவதாகவும் கருதுகிறான். குளியலறையில் இயந்திர மனிதன் தன் மனைவியுடன் உரையாடுவது பிடிக்காமல் அவனைக் கொல்ல நினைக்கிறான். முதலில் அவனை எப்படி அழிப்பது என்று தடுமாறும் அவன் இயந்திர மனிதனிடமே அவனை அழிப்பதற்கான வழிவகைகளைக் கேட்டு அவனை அழித்து விடுகிறான்.
தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் மனித வாழ்வில் அதிகளவு குறுக்கிடுவதால் ஏற்படும் உளச்சிக்கல்கள் படைப்பாளரின் சிந்தனையாக வெளிப்பட்டுச் சிறுகதையின் போக்காகிறது. சிறுகதையில் நிகழும் நிகழ்வுகள் எதிர்காலச் சாத்தியக் கூறுகளாகவும் அவருடைய சிந்தனையில் வெளிப்படுகிறது.
நமது வாழ்வில் உயிரில்லா இயந்திர மனிதன் என்னும் நவீனத்துவம் குறுக்கிடும்பொழுது ஏற்படும் விளைவுகள் உளச்சிக்கலுக்கு இடமளிப்பதாகவே உள்ளது என்கின்றார்.
இயந்திர மனிதனுடன் பெண்கள் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதால் இந்நூற்றாண்டில் பெண்களுக்கான சுதந்திரம் அதிகம் என்கிறார் படைப்பாளர்.
அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சிகளைப் புறக்கணிக்கவும் தேவையில்லை, அதை ஒரு எல்லைக்கு மேல் அனுமதிக்கவும் தேவையில்லை என்பது காலத்தின் தேவையாக உணர்த்தப்படுகிறது.
- இலக்கியத் தரம்
படைப்பாளரால் இயந்திர மனிதனுக்குரிய மொழி நடை பயன்படுத்தப் பட்டுள்ளது. மொழிநடை மிகவும் எளிமையானதாக இருப்பினும் சிந்தனைக்கு இடமளிக்கிறது. படைப்பாளர் கொள்ள வேண்டிய சமூக அக்கறையோடு தொழில் நுட்பச் சிறுகதையாக இதை ஆக்கியிருக்கிறார் சுஜாதா.
2.4.2 இமையத்தின் சிறுகதை - அம்மா
இவரின் இயற்பெயர் ஆறுமுகம். இவர் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். வாழ்க்கை நிகழ்வுகளை இவரது சிறுகதை படம் பிடிக்கிறது. இவருடைய கதை சமூகத்துடன் பேசுவதற்கான ஓர் ஊடகமாகவே உள்ளது. மனித உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள் இவருடைய கதையில் சிறப்பிடம் பெறுகின்றன. இப்பகுதியில் அம்மா சிறுகதை தொடர்பான செய்திகளைக் காணலாம்.
- கதைச் சுருக்கம்
ஒரு தாய் தன் மனக்குறைகளை மகனிடம் உரையாடும் வண்ணம் இச்சிறுகதை அமைந்துள்ளது. வயதான காலத்தில் தனியாக, தானே உழைத்து வாழ்வதாக மகனிடம் குறைபட்டுக் கொள்கிறாள். மகன் தன் வீட்டிற்கு வந்து விடு என்று கூறும்பொழுது அந்தச்சூழல் தனக்கு ஒத்துவராது என்கிறாள். மகன் தனக்கு உள்பாவாடை வாங்கித் தராததால் பள்ளிப் பிள்ளைகளின் பாவாடையை வாங்கி அணிந்திருப்பதாகக் கூறுகிறாள். அதே சமயம் மகன் மீது ஊரார் கண்பட்டுவிடக் கூடாது என்பதிலும், அவனைக் குறை கூறுபவர்கள் பேச்சைத் துண்டித்துக் கொள்வதிலும் கவனமாக இருக்கிறாள். அவன் தன் அக்காவைக் கவனிக்காததையும், அவனை வளர்க்க அவள் சிரமப்பட்டதையும் கூறி நான் செத்தால் தான் நல்லது கெட்டது புரியும் என்கிறாள். இறுதியில் மகனுக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்கள், பணம், பேத்திக்குக் கொலுசு ஆகியவை கொடுத்தனுப்புகிறாள்.
தாயின் முறையீடு அனைத்திற்கும், மகன், ஏதோ சிக்கலில் மாட்டிக் கொண்டது போல் முகம் வாடி, தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறான். சில வேளைகளில் தாயை முறைத்தும், பல்லைக் கடித்தும், அவள் சொல்வதைக் காதில் வாங்காமலும் அமர்ந்திருக்கிறான். இந்தச் சனியனுக்குதான் இங்கு வருவதில்லை என்கிறான். இவ்வளவில் இக்கதையின் போக்கு அமைந்துள்ளது.
இச்சிறுகதையில் படைப்பாளர் சமூகப் பயனுள்ள வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறியுள்ளார். கணவனாலும், மகனாலும் துன்பப்படும் தாயார் பாத்திரம் மனத்தில் நிலைக்கிறது. இதன் வழி வெளிப்படும் சிந்தனைகளாவன.
கீழ் மட்டத்தில் வாழும் தாயாரின் ஏக்கம், உணர்வுகள் வெளிப்பட்டு, பெற்றவர்களைப் புறக்கணிக்கும் சமூகக் குறைபாடு சுட்டப்படுகிறது.
தாயார் பாத்திரத்தின்படி உழைப்புத் தரும் உயர்வினை உணர முடிகிறது.
மகன் பாத்திரப்படைப்பு தனிமனிதக் குறைபாட்டைச் சுட்டுகிறது.
காலம் எவ்வளவு மாற்றம் பெற்றாலும் தாயுள்ளம் மாறாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
- இலக்கியத் தரம்
படைப்பாளர் சமூக அக்கறையோடு சமூக நிகழ்வினை அமைத்துள்ளார். இதன் வழி மனித உணர்வுகள், தாயுள்ளம், தனிமனிதக் குறைபாடு, சமூகச் சிக்கல் ஆகியவை சிறப்பாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. இயல்பான வட்டார வழக்கில் மொழிநடை அமைந்து மேலும் கதைக்குச் சிறப்பூட்டுகிறது. சமுதாயத்தை நெறிப்படுத்தும் அளவில் இச்சிறுகதை இலக்கியத் தரத்தைத் தன்னுடையதாக்கிக் கொள்கிறது.