தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - P20332-தமிழ்ச் சிறுகதையின் போக்குகள்

  • 2.1 தமிழ்ச் சிறுகதையின் போக்குகள்

    முதலில் சிறுகதையின் போக்குகள் என்றால் என்ன என்பதை அறிதல் வேண்டும். சிறுகதைகள் தோன்றிய நாளிலிருந்து இன்று வரையிலும் அவை பெற்றுள்ள வளர்ச்சிகளும், மாற்றங்களுமே அதன் போக்குகளாகக் குறிப்பிடப்படுகின்றன. அவை இலக்கியப்பயன், சமூகப்பயன் என்ற அடிப்படையில் அமைகின்றன. சிறுகதையின் போக்குகளுக்குச் சமூக மாற்றங்கள், நாகரிக வளர்ச்சி, பண்பாட்டு மாற்றங்கள், நவீன இலக்கிய வளர்ச்சி ஆகியவைகளும் காரணமாகின்றன.

    மேலும் படைப்பாளர்கள் தங்களின் ரசனைக்கு ஏற்பச் சிறுகதை இலக்கணத்தை வரையறுப்பதில் வேறுபடுவதாலும் சிறுகதையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வகையில் படைப்பாளர்களின் சிந்தனை வேறுபாடுகளைக் கீழ்க்காணும் வகையில் காண்போம்.

    • வாழ்வில் விதவிதமான அம்சங்கள், சிக்கல்கள், புதிர்கள், துன்பங்கள், மகிழ்ச்சிகள், பாதிப்புகள், வேடிக்கைகள், ரசனைகள் போன்றவற்றைப் படைப்பாளர்கள் தங்கள் சிந்தனைகளாக வெளிப்படுத்தினர்.

    • சிறுகதைகளின் மூலம் மனிதர்களின் விதவிதமான உணர்வுகளையும், உளப்போராட்டங்களையும், வாழ்க்கையின் முரண்பாடுகளையும், விசித்திரத் தன்மைகளையும் வெளிப்படுத்தினர்.

    • வாழ்வின் எதார்த்தத்தையும், சமகாலச் சமுதாயத்தையும் எடுத்துரைத்தனர்.

    • சமூகப் பொறுப்பு மிக்க படைப்பாளர்கள் சமூகத்துடன் பேசுவதற்கான ஒரு ஊடகமாகச் சிறுகதைகளைப் பயன்படுத்தினர்.

    • கல்வி தொழில் நுட்ப ஊடகங்களாகச் சில படைப்பாளர்கள் சிறுகதையை வடிவமைத்தனர்.

    இங்ஙனம் படைப்பாளர்களின் சிந்தனை மாறுபாடுகளுக்கு ஏற்ப, சிறுகதையின் போக்குகள் அமைந்தன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:26:06(இந்திய நேரம்)