தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - P20332-தமிழ்ச் சிறுகதையின் போக்கில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள்

  • 2.5 தமிழ்ச் சிறுகதையின் போக்கில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள்

    தமிழ்ச் சிறுகதையின் போக்கில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைப் பின்வருமாறு காணலாம்.

    தொடக்க காலச் சிறுகதைகள் சமூக நிகழ்வுகளை எடுத்துக் காட்டின. சமூகப் பிரச்சனைகளையும் கோடிட்டுக் காட்டின. இதன் மூலம் சிந்தனைக்கு இடமளித்தன. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு உரிய பிரச்சனைகள் மட்டும் பேசப்பட்ட நிலையில் அது பொதுப் பிரச்சனைகளுக்கு இடமளிக்காமல் போயிற்று. எடுத்துக்காட்டு: குளத்தங்கரை அரசமரம் எனும் சிறுகதை. அதே சமயம் புதுமைப்பித்தன் அவர்களின் சிறுகதை மொத்த மக்களின் குரலாய் அமைந்தது. எடுத்துக்காட்டு: ஒருநாள் கழிந்தது எனும் சிறுகதை. தனிமனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் தி.ஜானகிராமனின் முள்முடி கதை அமைந்தது.

    இவ்வளவில் தொடக்க காலச் சிறுகதைகளின் போக்கில், படைப்பாளர்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் இடம்பெற்றிருப்பது அறியத் தக்கது.

    அடுத்து எழுபதுகளில் இதழ்களின் வளர்ச்சியும், ஜனரஞ்சகப் படைப்பாளர்களின் படைப்புகளும் சிறுகதையின் போக்கினை மாற்றின. அடித்தள மக்களின் சிக்கல்கள் அதிக அளவில் இடம்பெற்றன. புரட்சிகரமான கருத்துகள் சிந்தனையைத் தூண்டுவதாய் அமைந்தன. எதார்த்தப் படைப்புகள் மக்களைக் கவர்ந்தன. உள்மனத்தை வெளிப்படுத்தும் கதைகளும் இடம்பெற்று, சிறுகதைகளின் போக்கினை மாற்றின.

    எடுத்துக்காட்டு :

    • ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், அசோகமித்திரன் ஆகிய மூவரும் குழந்தைகளை மையமாகக் கொண்டு சிறுகதைகள் எழுதிய போதிலும் மூவரின் சிந்தனையும் மாறுபடுவதைக் காணமுடிகிறது. இதுவே சிறுகதையின் போக்கிற்குக் காரணமாகின்றது.

    • இக்காலகட்டத்தில் ஆபாச எழுத்துகள் அதிகமாக இடம்பெற்றதால், இலக்கியத் தரமிக்க எழுத்துகள் குறைவாகவே வெளிவந்தன. மேலும் படைப்பாளர்களின் வணிக நோக்கும் சிறுகதைகளின் இலக்கியத் தன்மையைப் பாதித்தன. எழுபதுகளின் இறுதியில் வீழ்ச்சி கண்ட சிறுகதைகள் அடுத்து வளர்ச்சியைப் பெற்ற காலமாக இன்றைய சிறுகதைகளின் காலம் அமைகின்றது.

    இன்றைய சிறுகதைகள் இளைய தலைமுறையினருக்கும், எதிர்காலத்தவர்களுக்கும் உரியனவாகின்றன. சமகாலத்தவர்களின் வாழ்க்கைச் சிந்தனைகளாகின்றன. இச்சிறுகதைகளில் செய்தி நேர்த்தியும், தொழில் நுட்பமும் முக்கிய இடம்பெற்றுள்ளன. இவ்வளவில் இன்றைய சிறுகதைகள் வாசகர்களின் காலமாக அமைந்து அதன் போக்கை மாற்றியுள்ளன.

    2.5.1 இலக்கிய மாற்றங்கள்

    சிறுகதைகளின் போக்குகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் எங்ஙனம் அதன் இலக்கியத் தன்மையைப் பாதிக்கின்றன என்பதைக் காணலாம்.

    இலக்கிய மொழியாகப் பண்டித மொழிதான் இருக்க வேண்டும் என்ற நிலை மாறி, மொழி எளிய தன்மைபெற்று அனைவரும் படித்து மகிழ உதவும் போக்கினைக் காணலாம். கற்பனையும், வருணனையும் தேவை என்ற நிலை மாறி, கதையின் உண்மைத் தன்மை முக்கியத்துவம் பெறும் போக்கினைக் காணலாம். வட்டார வழக்குகள் சிறுகதையில் இடம்பெற்று மொழி வளர்ச்சிக்கு உதவுகிறது. தொழில்நுட்பம் சார்ந்த மொழிகளும், குறிப்பு மொழிகளும் இடம்பெற்று, இலக்கிய வகை வளர்ச்சிக்குத் துணை நிற்கின்றன.

    • காலத்திற்கேற்ப மொழிநடை கையாளப்பட்டு மொழியின் செம்மைத் தன்மை போற்றப்படுகிறது. பல்துறைக் கருத்துகளும் சிறுகதையில் இடம்பெற்று மொழியின் வளம் காக்கப்படுகிறது.

    • தனிமனித உணர்வு, சமுதாய வாழ்வு இவற்றைச் சுவையோடு பிரதிபலிக்கும் இலக்கியப் போக்கினைக் காணமுடிகிறது.

    • மரபுகளைப் போற்றும் காலமாற்றம் சிறுகதையின் போக்கில் தென்படுகிறது.

    2.5.2 சமூக மாற்றங்கள்

    சமூக அக்கறை கொண்ட படைப்பாளர்கள் சமூகத்தோடு தம்மை இணைத்துக் கொண்டு செயல்படும் நிலையில் அது சமூகப் பயனுடையதாகிறது. தம் விருப்பு, வெறுப்புகளுக்கு இடமின்றி, சமூக நலத்தில் அக்கறை கொண்ட படைப்பாளர்களும் சமூகப் பயன்களுக்கு இடமளிக்கின்றனர். மேலும் சமூகப் பயனுக்கு இடமளிக்காதவர்களைப் புறக்கணிக்கும் போக்கிற்கும் இடமுண்டு என்பது அறியப்படுகிறது.

    இதிலிருந்து சமூகத்தோடு தொடர்பு கொள்வதற்குச் சிறுகதைகள் ஓர் ஊடகமாகவே மாறியுள்ளதை அறிய முடிகிறது. எனவே சிறுகதைகளின் சமூகப் பயன் இந்நாளில் கொள்ளப்படாத ஒன்று என்றறியப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-09-2017 18:00:32(இந்திய நேரம்)