தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - P20334- சிறுகதைகள் காட்டும் சமூகச் சிக்கல்கள்

  • 4.1 சிறுகதைகள் காட்டும் சமூகச் சிக்கல்கள்

    சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தி, பல சிறுகதைப் படைப்பாளர்கள் கதைகளைப் புனைந்துள்ளனர். இத்தகைய கதைகள் மக்கள் பொது அறிவு பெற்று, பிணக்குகள் நீங்கி வாழத் துணைபுரிவதாய் உள்ளன. படைப்பாளன் சமூகத்தையும், நாட்டையும் ஊடுருவியே சிறுகதைகளைப் படைப்பதால், அவை மக்களுக்காக, மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் உருப்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. மேலும் சமூகச் சிறுகதைகள் உண்மையை அலசும் துணிவையும், மாற்றம் காண வேண்டிய விழைவையும், படிப்போரிடையே ஏற்படுத்துகின்றன.

    சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தும் சிறுகதைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சமூகத்தில் நிறைய மாறுதல்களைக் கொண்டுவந்துள்ளதைக் காணமுடிகின்றது. இவ்வகையில் சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தும் படைப்பாளர்களின் சில படைப்புகளைப் பற்றி இங்குக் காண்போம்.

    எடுத்துக்காட்டுகள்

    சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தும் சிறுகதைகளாகக் கீழ்க்காணும் சிறுகதைகள் குறிப்பிடத்தக்கனவாகின்றன.

    • அகிலனின் ‘பூச்சாண்டி’
      சூடாமணியின் ‘சுமைகள்’

    - தனிமனிதச் சிக்கல்கள்
    • வ.வே.சு.ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’
      புதுமைப்பித்தனின் ‘ஆண்மை’

    - குழந்தை மணம் -
    சிக்கல்கள்
    • சத்திய மூர்த்தியின் ‘பலிபீடம்’
      ராமையாவின் ‘மலரும் மணமும்’

    - விதவைக் கொடுமை -
    சிக்கல்கள்
    • ஜெயகாந்தனின் ‘பேதைப்பருவம்’
      சங்கு சுப்பிரமணியத்தின்
      ‘வேதாளம் சொன்ன கதை’
    - பொருந்தா மணம் -
    சிக்கல்கள்
    • அழகிரிசாமியின் ‘அக்னிபிரவேசம்’
      அண்ணாதுரையின் ‘பலாபலன்’

    - மூடநம்பிக்கை - சிக்கல்கள்
    • ஜெகசிற்பியனின் ‘பிறவிக்கடல்தாண்டி’
      சோமுவின் ‘ஆறுமாத விடுதலை’

    - வறுமைக்கொடுமை -
    சிக்கல்கள்
    • செல்லப்பாவின் ‘மஞ்சள்காணி’
    - வரதட்சணை - சிக்கல்
    • சிற்பியின் ‘கோயில்’
    - சாதிக்கொடுமை - சிக்கல்
    • ராஜாஜியின் ‘முகுந்தன்’
    - தீண்டாமை - சிக்கல்

    • சமூகச் சிறுகதைகளின் பயன்

    சமூகச் சிறுகதைகள் படைப்பாளர்களின் சமூக அக்கறையையும், உணர்வையும் காட்டுவதாயுள்ளன. இதன் மூலம் படைப்பாளர்களின் அணுகுமுறையில் உள்ள நேர்மையும், மனிதநேயமும் கற்பவர்களுக்குப் பாடமாகிறது. படைப்பாளர்கள் சமூகத்தைக் குலைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தி, அவற்றிற்குத் தீர்வு காணவும் உதவுகின்றனர். பட்டிதொட்டிகளில் வாழும் படித்தவர்களும் சமூக, நாட்டு நடப்புகளை அறிய உதவுகின்றனர். இங்ஙனம் சமூகச் சிறுகதைகள் சமூகச் சிக்கல்களை வெளிப்படுத்தி, அவற்றை மக்கள் உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன; அறிவுபூர்வமாகச் சிந்திக்கவும், செயல்படவும் இடமளித்துப் பயன்கள் விளைவிக்கின்றன.

    இனிவரும் பகுதியில் சிறுகதை காட்டும் தனிமனிதச் சிக்கல்களைக் காண்போம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-09-2017 18:13:06(இந்திய நேரம்)