Primary tabs
4.3 சிறுகதைகளில் பெண்களின் சிக்கல்கள்
சிறுகதைகளில் பெண்களுக்கான சிக்கல்களை அறிவதன் மூலம் சமூகத்தில் பெண்களின் நிலையை உணரலாம். பெண்களுக்கான சிக்கல்கள் சமூகச் சிக்கல்களாக உணரப்படுவதால் அவற்றிற்குத் தீர்வு காணவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. சாதி, இனம், அதிகாரம், வறுமை, ஒழுக்கம், வரதட்சணை, பொருந்தா மணம், காதல், கற்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெண்களுக்குச் சிக்கல்கள் ஏற்படுவதைச் சிறுகதைகள் காட்டுகின்றன. பெண்களுக்கான சிக்கல்களுக்குக் குடும்பம் மற்றும் சமூகமே களனாகின்றது. பெண்கள் சுயக்கட்டுப்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பின் மூலம் சிக்கல்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு வாழவேண்டும் என்பது வற்புறுத்தப்படுகிறது.
இப்பகுதியில் பெண்களின் சிக்கல்களைப் பேசும் சிறுகதைகளாக மூன்று கதைகள் இடம்பெற்றுள்ளன.
4.3.1 ஜெயந்தனின் ‘மொட்டை’ சிறுகதை
மொட்டை என்ற பெண் புருஷன் தன்னைக் கைவிட்டுப்போன நிலையில், தன் மகன்களை இழந்த நிலையில், ஆதரிக்க யாருமில்லாதவளாய், தன் உழைப்பை மட்டும் நம்பி வாழுகின்றாள். அவளின் தன்மான உணர்வினைக் காட்டும் கதையாக இது விளங்குகிறது. கதைச் சுருக்கத்தைக் காணலாம்.
- கதைச் சுருக்கம்
மொட்டை மாநிறம். வயது முப்பது அல்லது முப்பத்திரண்டு இருக்கும். நெருங்கிப் பார்க்கும் பொழுது முகத்தில் அழகு, அம்சம் என்று சிறப்பாக எதுவுமில்லை. அதே சமயம் அவலட்சணமும் இல்லை. அவளைப் பெண்ணாக யாராவது ஏற்றுக் கொள்வார்களா. என்றால் சந்தேகமே, வீடுகளுக்குத் தண்ணீர் தூக்குவது, பத்துப் பாத்திரங்களைத் தேய்ப்பது, பிள்ளைகளின் துணிகளைக் கசக்கிப் போடுவது அவள் வேலை. அதன் மூலம் வரும் வருமானம் நாற்பதோ, ஐம்பதோ என்றாலும் நாள் முழுக்க வேலை செய்வாள். எப்பொழுது உண்பாளோ, உறங்குவாளோ தெரியாது. இந்தக் கஷ்டத்தையெல்லாம் அவள் சின்ன முணுமுணுப்புக்கூட இல்லாமல் செய்து வந்தாள். அவளுடைய உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. ஆனால் அவளை மொட்டை என்று அழைப்பதால் அவள் முகம் சுளிப்பதோ, வருத்தப்பட்டதோ கிடையாது. அவள் குறைந்த பணத்துக்குத் தண்ணீர் சுமந்ததாலும், கெடுதலே அறியாதவளாக இருந்ததாலும் அவள் மீது அனைவருக்கும் பிரியம்.
ஒரு முறை அவள் தங்கை வீட்டிற்குப் போனவள் அங்கேயே தங்கிவிட்டாள். இந்த ஊரைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவன் அங்கே கடை வைத்திருந்தான். அதில் அவள் வேலைக்கும் சேர்ந்தாள். அவள் இல்லாமல் அவள் வாடிக்கையாளர்கள் திண்டாடிப்போயினர். இரண்டு மாதங்கள் கழித்துப் பாத்திரங்களை எடுப்பதற்காக, மொட்டை திரும்ப ஊருக்கு வந்தாள். அவள் யாரும் எதிர்பாராத அளவிற்கு நன்றாகவே இருந்தாள். தலை மட்டும் மொட்டையாகவே இருந்தது. மீண்டும் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டாள். அப்புறம் ஒரு மாதம் கழித்துத் திரும்பி வந்து பழைய வேலையையே செய்ய ஆரம்பித்துவிட்டாள். வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு ஏன் வந்துவிட்டாய் என்று மற்றவர்கள் கேட்டபோது, ‘அவன் எனக்குப் பொண்டாட்டியா இருன்னு சொன்னான். அது தான் வந்திட்டேன்’ என்கிறாள். ஊராரின் ஒட்டு மொத்தக் கருத்தும் இவள் இருக்கிற இருப்புக்குப் பொண்டாட்டியா இருந்தால் என்ன கெட்டுவிடப்போகிறது என்பதுதான்.
அய்யாக்கண்ணு ஊருக்கு வந்த நேரத்தில் தமாஷாக அவனை விசாரித்த பொழுது, ‘அவள் கெடக்கிறா லூசு’ என்று நழுவிக்கொண்டான். இப்பொழுது மொட்டை ஊருக்கு அதே பழையமொட்டை ஆகிவிட்டாள். உடம்பு இளைத்துவிட்டது. திண்டுக்கல் தந்த புதிய நிறம் போய்விட்டது. இருப்பினும் அவள் அதைச் சற்றும் எண்ணாதவளாய் எப்பொழுதும்போல் வேலை செய்தாள். யாராவது அவளைச் சீண்டிப் பார்க்கும்போது மட்டும் ரோஷத்தோடு கோபப்பட்டுக் கையைநீட்டி ‘அட அவன் எனக்குப்.’ அதையே சொல்கிறாள். நீங்கள் விரும்பினால் இப்போதும் அவளை அந்தக் கிராமத்தில் பார்க்கலாம் என்பதோடு கதை முடிவடைந்துள்ளது.
- கதை காட்டும் சிக்கல்கள்
பெண்களுக்கான சமூகச் சிக்கல்களை இச்சிறுகதை படம்பிடித்துள்ளது. ஆண்களால் விரும்பப்படும் அழகில்லாத மொட்டை போன்ற பெண்களுக்குக்கூடச் சமூகத்தில் ஒழுக்கமாக வாழ விரும்புவதில் இடையூறு ஏற்படுவது காட்டப்படுகிறது. மொட்டை போன்ற அப்பிராணியாக இருக்கும் பெண்கள் சமுதாயத்தினரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாவது காட்டப்படுகிறது. சுயமரியாதையோடு வாழ விரும்பும் பெண்களைச் சீண்டிப் பார்க்கும் சமூகம் சிக்கலை ஏற்படுத்துவதாய் உள்ளது. அய்யாக்கண்ணு தன் தவற்றினை மறைக்கும் பொருட்டு மொட்டையை ‘லூசு’ என்பது பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்கப் போக்கைக் காட்டுவதாயுள்ளது. ‘மொட்டை அனுசரித்துப் போனால்தான் என்ன? இவள் இருப்புக்கு என்ன கெட்டுப்போச்சு’ என்று அவளின் தோற்றத்தை வைத்து அவளின் மன உணர்வுகளைக் காயப்படுத்துவது பெண்களுக்கான சிக்கலைக் காட்டுவதாகிறது. எதற்கும் கோபப்படாத மொட்டை, அவள் சுயமரியாதையை ஊரார் சீண்டிப் பார்க்கும்போது மட்டும் கோபப்படுவது, ரோஷப்படுவது அவளுக்கு ஏற்படும் சிக்கலைக் காட்டுவதாகிறது.
- தீர்வுகள்
மொட்டை தனக்கு ஏற்படும் சிக்கல்களைத் தானே தவிர்த்துக் கொள்வதன் மூலம் தீர்வு அமைத்துக் கொடுக்கிறார் படைப்பாளர். மொட்டையின் ஒழுக்கத்திற்கும், தன்மான உணர்விற்கும் பாதிப்பு ஏற்படும் பொழுது அவள் வசதியான வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு உழைப்பினை மேற்கொள்வது சிக்கல்களுக்கான தீர்வாகின்றது. மொட்டையைச் சீண்டிப்பார்க்கும் பொழுதெல்லாம் அவள் கோபப்படுவது சிக்கலைத் தீர்க்கும் உத்தியாகப் படைப்பாளரால் கையாளப்பட்டுள்ளது. சாமியாராக வரும் கணவனை மொட்டை வெறுப்பதும், தன் வாழ்க்கைக்குத் துணையாகாத கணவனை அவள் புறக்கணிப்பதும் சரியான தீர்வுகளாக அமைந்துள்ளன.
4.3.2 சூடாமணியின் ‘எனக்குத் தெரியாது’
பெண்களுக்கான சிக்கல்களை உரைக்கும் இரண்டாவது சிறுகதையாக இக்கதை இடம்பெற்றுள்ளது. இதன் கதைச் சுருக்கத்தைக் காணலாம்.
- கதைச் சுருக்கம்
பஞ்சாயத்தில் வேலப்பன் குற்றவாளி இல்லை என்பது தீர்ப்பாகிவிட்டது. அபிராமி உரத்த குரலில் பலமுறை இவன்தான் குற்றவாளி என்று கூறியும் பயனில்லை. அவள் மட்டும் தான் அவனை அடையாளம் காட்ட வேண்டும் என்பதில்லை. அவளுடன் வேலைசெய்த அவளைப் போலவே கீழ்ச்சாதிக்காரர்கள் அனைவரும் அடையாளம் சொல்லமுடியும். ஆனால் யாரும் சொல்லவில்லை.
சம்பவத்தன்று முதலாளி வீட்டிலிருந்து ஆட்கள் தடி மற்றும் கம்புகளுடன் வயலுக்கு வந்து அபிராமியை அணுகினர். ‘முதலாளி வீட்டுப் பேரக்குழந்தை கழுத்தில் போட்டிருந்த சங்கிலியைக் காணவில்லை. உம்மேல சந்தேகமாம். மொதலாளியம்மா உன்னை விசாரிக்க வீட்டுக்கு கூட்டிவரச் சொன்னாங்க’ என்றார்கள். ‘அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். நீங்கள் உங்க வேலையைப் பார்த்துக்கிட்டு போங்க’ என்றாள். இரண்டு ஆட்களுக்குப் பின்னால் வந்த மொதலாளி வேலப்பன் அவள் தலைமுடியைப் பற்றி நிமிர்த்தினான். ‘திருட்டுச் சிறுக்கி, மரியாதையா கூப்பிட்டா வரமாட்டே. இழுத்துக்கிட்டுப் போனாத்தான் வருவியா?’ அவன் அதிகாரத்தைப் பார்த்த வயலில் இருந்த மற்ற பதினைந்து ஆண், பெண்கள் பயந்து பழகிவிட்ட நிலையில் மலைத்து நின்றுவிட்டனர்.
மறுநாள் அபிராமியின் முறையீடு கிராமம் முழுக்க எதிரொலித்தது. தனக்கு நேர்ந்ததை, பஞ்சாயத்தைக் கூட்டி, தன்னைச் சிதைத்தவன் இவன் தான் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினாள். இதனையடுத்து வேலப்பனின் தந்தை பஞ்சாயத்துத் தலைவருடன் தாமிருவரும் ஒரே பரம்பரையில் வந்தவர்கள் எனப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்திவிட்டுச் சென்றார். வேலப்பனின் உறவுக்காரருள் ஒருவர் வயலில் வேலைசெய்த அந்தப் பதினைந்து பேரையும் அழைத்து வேலப்பனுக்கு எதிராக யாராவது சாட்சி சொன்னால் அபிராமிக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும் என்று எச்சரித்தும் சென்றார். இந்நிலையில்தான் பஞ்சாயத்துக் கூடி அபிராமியின் குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை என்றும், மேல்சாதிக்கார வேலப்பன் கீழ்சாதிப் பெண்ணைக் கற்பழித்திருக்கச் சாத்தியமே இல்லை என்ற நிலையில் வேலப்பன் நிரபராதி என்றும் தீர்ப்பளித்தனர்.
ஒரு மாதத்திற்குப் பின் கட்சிப் பணிக்காகச் சென்னை சென்றுவிட்டுத் தேர்தலில் நிற்கும் கனவோடு கிராமத்திற்கு வந்தான் வேலப்பன். மறுநாள் காலையில் ஊர்க்கோடிப் புளிய மரத்தின்கீழ் அவனுடைய ரத்தம் தோய்ந்த பிணம் கிடந்தது. உடலில் பதினைந்து அரிவாள் வெட்டுகள் இருந்தன.
வேலப்பனின் தந்தை உக்கிரமானார். ‘கிராமத்தையே திட்டமிட்டுக் கொளுத்துவேன் பார்’ என்று அரற்றினார். போலீஸ் வந்து விசாரித்தது. யாரைக் கேட்டாலும் ஒரே பதில் எனக்குத் தெரியாது என்பது தான். யாருக்குமே தெரியாம இது எப்படி நடத்திருக்க முடியும்? என்று கேட்ட போது, அந்தப் பதினைந்து பேரில் ஒரு பெண் அப்பாவியாக ‘எனக்கு ஒரு ஊகங்க’ என்றாள். ‘இந்தப் புளியமரத்தில் இருக்கின்ற அரிவாள் பேய்தான் சின்ன முதலாளியை அடிச்சிருக்கணும்; அது அடிச்சா ஒடம்புல இப்படித்தான் அரிவா அடையாளம் இருக்கும்’. அனைவரின் பதிலும் அதுவாக இருக்க, இன்ஸ்பெக்டரின் அடிவயிற்றில் சில்லென்று ஒரு பயம் வெட்டியது. பின்வாங்கினார். அதன்பின் அவர் மேலதிகாரிக்கு ஓர் அறிக்கை அனுப்பினார். ‘ஆளுங்கட்சியினரின் செல்வாக்கைப் பொறுக்காமல் காழ்ப்புணர்ச்சியில் மாற்றுக்கட்சியினர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம்’ என்று தன்னுடைய ஊகத்தைக் குறிப்பிட்டிருந்தார் என்பதோடு கதை முடிவடைந்துள்ளது.
- கதை காட்டும் சிக்கல்கள்
இச்சிறுகதையில் சாதிக் கொடுமையும், அதிகாரப் போக்கும் பெண்களுக்கான சிக்கல்களாகக் காட்டப்பட்டுள்ளன. கீழ்ச் சாதிப்பெண்களை மேல்சாதியினர் கேவலப்படுத்துவதும், இழிவுபடுத்துவதும் சிக்கல்களுக்கான காரணங்களாகின்றன. அழகான பெண்களைத் தன் இச்சைக்குப் பயன்படுத்தும் ஆண்களின் அதிகாரப்போக்கு, சிக்கலுக்குரியதாகிறது. அதிகார வர்க்கத்துக்குப் பயந்து உண்மையை மறைக்கும் கீழ்ச்சாதிப்பெண்கள் பரிதாபத்திற்கு உரியவர்களாகின்றனர். பெண்களுக்குச் சமுதாய அமைப்பே சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளதை இக்கதையின் வழி அறியமுடிகிறது.
- தீர்வுகள்
இச்சிறுகதையில் பெண்களின் சிக்கல்களுக்கான தீர்வுகள் படைப்பாளரால் வழங்கப்பட்டுள்ளன. தன்னைச் சிதைத்தவனை அபிராமியும் மற்றவர்களும் சேர்ந்து அழிப்பதன் மூலமாக அநீதிக்குத் தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அபிராமிக்கு நேர்ந்த அநியாயத்தை ‘எனக்குத் தெரியாது’ என்று கூறி மறுத்ததுபோலவே வேலப்பனின் மரணத்தையும் ‘எனக்குத் தெரியாது’ என்று கூறி மறுப்பது சிக்கலுக்கு மற்றொரு சிக்கலே தீர்வாகி விடுவதைக் காட்டுகிறது. பெண்களுக்கு இழைக்கும் துன்பங்களை அதே பாணியில் வெற்றி கொள்வது சரியான தீர்வாகியுள்ளதை அறிய முடிகிறது. சாதிக்கொடுமை, அதிகாரப்போக்கு ஆகியவற்றின் மூலம் பெண்களை அடிமைப்படுத்தும் முயற்சியினைக் கைவிடுவதும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சியாக அமையும்.
4.3.3 பிரபஞ்சனின் ‘மூன்று நாள்’ சிறுகதை
பெண்களின் சிக்கல்களை வெளிப்படுத்தும் சிறுகதையாக இது விளங்குகிறது. இதன் கதைச்சுருக்கத்தைக் காணலாம்.
- கதைச்சுருக்கம்
இது பெண்களின் வாழ்க்கையில் பிரச்சனையாக இருக்கும் அந்த மூன்று நாட்களை வைத்துப் பின்னப்பட்ட கதையாகும். சுமதி கல்யாணமாகிப் புகுந்த வீடு செல்கிறாள். அடுத்த மாதமே அவளுடைய மாமியார் தன் ஆசாரத்திற்குத் தீட்டு நேரக்கூடாது என்ற எண்ணத்தோடு அந்த மூன்று நாட்கள் அம்மா வீட்டிற்குச் சென்று தலைக்குக் குளித்துவிட்டு அப்புறம் வந்து சேர் என்று அனுப்புகிறாள். இது ஒவ்வொரு மாதமும் தொடர்கிறது. இந்த விரட்டல் அவளின் அம்மா, அப்பாவிற்கு வேதனையைத் தருகிறது. தன்னுடைய அந்தரங்கம் ஊருக்கே வெளிச்சமாகி, சுமதிக்கும் பெரும் தலைகுனிவாகிறது. இந்த அவலத்திற்கு விடிவு காண வேண்டிய கணவனோ அம்மாவின் கைமுறுக்கின் ருசிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தான். அவன் அப்பாவியாகவும், தூங்குமூஞ்சியாகவும் இருப்பதே சுமதி மாதாமாதம் தாய்வீடு செல்லக் காரணமாகிறது.
கடைசியாக அவள் தன் மனக்குறையைக் கணவனிடம் கூறுகிறாள். ஒவ்வொரு மாதமும் இந்த நிலையில் அம்மா வீட்டிற்குச் செல்ல எனக்கு வெட்கமாயிருக்கு. தன்னுடைய அவலநிலையை இவ்விதம் கூறும்போது ஆரம்பத்தில் ‘உம்’ கொட்டிக் கேட்கும் அவன், அவள் சொல்லி முடிக்கும் முன்னரே வழக்கம்போலக் குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பிக்கிறான்.
சுமதிக்கு ஏற்பட்ட அவலத்திலிருந்து அவளை மீட்க இயலாத, உடல் தெம்பும், உள்ளத் தெம்பும் இல்லாத இளைஞனாக அவள் கணவன் கேசவன் விளங்குகிறான். இக்கதையைப் படித்து முடிக்கும்போது சுமதிமேல் நமக்குப் பிறக்கும் அனுதாபத்தைவிட அவள் கணவன் மீதே அதிக அனுதாபம் பிறக்கிறது. படைப்பாளரும் கதைமாந்தரிடம் உள்ள குறைபாடுகளைக் கண்டு சீற்றம் அடையாமல் அவர்களுடைய அறியாமையை எண்ணி அனுதாபப் படவே செய்கிறார்.
- கதை காட்டும் சிக்கல்கள்
இச்சிறுகதை காட்டும் சிக்கல் அனைத்துப் பெண்களுக்கும் பொதுவாகிறது. சுமதியின் மாமியார் தன் சுயநலத்தின் பொருட்டு மருமகளுக்குச் சிக்கல் விளைவிக்கக் கூடியவராய் விளங்குகிறார். சுமதியின் மாமியார் ஒரு பெண்ணாக இருந்தும் பெண்களின் சிக்கலை உணராதவராய் இருப்பதிலிருந்து பெண்களே பெண்களுக்கு எதிரிகளாய் விளங்குவதை அறியமுடிகிறது. சுமதிக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் இது போன்ற தலைக்குனிவே அவளுக்கும் சிக்கலாக அமைந்துவிடுவதைக் காணமுடிகிறது. இதைப்பற்றி ஒன்றும் கண்டுகொள்ளாமல் அவள் கணவன் அப்பாவியாகவும், சுகபோகியாகவும் இருப்பது அவள் சிக்கலை மேலும் அதிகப்படுத்துவதாயுள்ளது. அவள் மனத்துயரைக்கூட அறிய, கேட்க இயலாத நிலையில் இருக்கும் அவள் கணவனே, கதை எடுத்துக்காட்டும் சிக்கலுக்குக் காரணமாகின்றான்.
- தீர்வுகள்
இக்கதைக்கான தீர்வுகள் படைப்பாளரால் நேரடியாக வழங்கப்படவில்லை. ஆயினும் கேசவன் போன்ற சிக்கலுக்குத் தீர்வு காணாத ஆடவர்களின் அறியாமையை எண்ணித் தாம் அனுதாபப்படுவதாகக் கூறுவதன் மூலம் மறைமுகத் தீர்வு உரைக்கப்படுகிறது. இத்தகைய சிக்கல்களைக் கணவன் மட்டுமே தீர்க்க இயலும். இதை மற்றையோர் தீர்க்க இயலாது என்ற நிலையில் கணவனின் கடமையே தீர்வாக உரைக்கப்படுகிறது. வெளி மனிதர்களால் தீர்க்கப்படாத உணர்வு சார்ந்த விஷயங்கள் கணவனுக்கு மட்டுமே உரியது; அதை அவனே தீர்க்க முற்படுதல் வேண்டும். அவ்வாறு அவர்கள் தீர்க்க இயலாத நிலையில் அவர்கள் அனுதாபத்திற்குரியவர்களாகவே கருத இடமளிக்கின்றனர் என்பது ஆசிரியரின் மறைமுகத் தீர்வாகிறது. ஆகவே கணவனுக்காக மனைவியும், மனைவிக்காகக் கணவனும் என்று ஒருவரையொருவர் சார்ந்து வாழும் வாழ்க்கையும், புரிந்துகொண்டு வாழும் வாழ்க்கையுமே இதுபோன்ற சிக்கல்கள் எழாமல் தடுக்க இயலும் என்பது இக்கதை கூறும் கருத்தாகிறது.