தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - P20334-சிறுகதைகளில் சமூகச் சீர்த்திருத்தங்கள்

  • 4.5 சிறுகதைகளில் சமூகச் சீர்திருத்தங்கள்

    சமூகச் சிக்கல்களுக்குரிய சிறுகதைகள் தீர்வுகளைத் தம்மிடத்தே கொண்டுள்ளன. இத்தீர்வுகள் ஒரு சமூகத்தின் சீர்திருத்தங்களுக்கும் அடிப்படையாகின்றன. சமூகச் சீர்திருத்தங்கள் ஒரு சமூகத்தின் நன்மை கருதிய விளைவுகளாக அறியப்படுகின்றன. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஒன்பது சிறுகதைகளும் சமூகச் சீர்திருத்தங்களுக்கு இடமளிப்பவையாகவே உள்ளன. கீழ்க்காணும் வகையில் அதைப் பற்றிக் காணலாம்.

    • தனி மனிதச் சிக்கலுக்குரிய கதைகளில் சீர்திருத்தக் கருத்துகள்

      • ஒவ்வொரு தனி மனிதனும் குடும்பம், சமூகம் என்ற அளவில் இணக்கமான உறவினை ஏற்படுத்திக் கொண்டு வாழ வேண்டும். தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்வது என்பது சிக்கல்களைத் தீர்க்க உதவாது. அது உளச்சிக்கலுக்கே இடமளிக்கும். ஆகவே தனிமனிதர்கள் மன உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டும் செம்மைப்படுத்திக் கொண்டும் வாழ்வதன் மூலமே சமூகம் பயனடையும் என்பது அறியப்படுகிறது.

      • தனிமனிதன் சுயநலமின்றி விட்டுத் தருதல், பிறர் உணர்வுகளை மதித்தல், பிறர் நலம் பேணுதல் ஆகியவற்றின் மூலமே சமூகக் குறைபாடுகளைக் களைந்து செம்மைப்படுத்த முடியும் என்பது அறிவுறுத்தப்படுகிறது.

      • தனிமனிதன் தன்னைச் சீர்திருத்திக் கொள்வதன் மூலமும், தன்னுடைய தவறுகளை அறிந்து செயல்படுவதன் மூலமுமே சமுதாயம் பயனடைய முடியும் என்பது தெளிவுபடுத்தப் படுகிறது.

    • பெண்களுக்கான சிக்கல்களுக்குரிய சிறுகதைகளில் சீர்திருத்தக் கருத்துகள்

      • பெண்களுக்கான ஒழுக்கம் வலியுறுத்தப்படுகிறது. அந்த ஒழுக்க உயர்வே நம் பாரம்பரியப் பண்புகளை மேம்படச் செய்யும் என்பது கூறப்படுகிறது. உழைப்பின் உயர்வு பெருமைக்கு உரியதாக உரைக்கப்படுகிறது. சுயமுயற்சி வலியுறுத்தப்படுகிறது. சிறுகதை வெளிப்படுத்தும் இக்கருத்துகள் அனைத்தும் சமூகச் சீர்திருத்தத்திற்கு உதவுவதாய் உள்ளன.

      • ‘முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது. ‘பிறர்க்கு இன்னா முற்பகல் செயின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்’ என்ற குறள் கருத்து இக்கதையின் போதனையாகிறது. உண்மை, நேர்மை, அறம்பேணல் ஆகியவற்றின் மூலமே ஒரு சமூகம் சீர்பட முடியும் என்பது உரைக்கப்படுகிறது.

      • பெண்களுக்குப் பெண்களே எதிரியாகும் சமூகச்சூழல் மாற வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. ஆண்கள், பெண்களின் சிக்கல்களைத் தீர்க்க முன்வராத நிலையில் சிக்கல் மேலும் அதிகமாகும் என்பதை அறியமுடிகிறது. இவற்றைப் பின்பற்றிச் செயல்படுவதன் வாயிலாகவே பெண்கள் சமூகம் நலம்பெற இயலும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

    • சமூகச் சிக்கல்களுக்குரிய சிறுகதைகளில் சீர்திருத்தக் கருத்துகள்

      • ஏற்றத் தாழ்வற்ற சமூக, பொருளாதார அமைப்புகள் உருவாதல் வேண்டும். பிறர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும், செயல்படும் சக அமைப்புகள் தோன்ற வேண்டும். சிறு குடும்ப நெறி பேணப்பட வேண்டும் என்பன போன்றவை சமூகச் சீர்திருத்தக் கருத்துகளாகின்றன.

      • மேல்மட்டச் சமூகம், கீழ்மட்டச் சமூகம் இவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும். கீழ்மட்டச் சமூகத்தினர் கல்வியறிவு பெறவேண்டும். சமூகத்தில் தங்கள் உரிமையினை நிலைநாட்டிக் கொள்ளத் தயங்கக்கூடாது. முயல்கள் ஆமையாக மட்டும் அல்ல ஊமையாகவும் இருக்கக்கூடாது என்பது வற்புறுத்தப்படுகிறது.

      • உழைப்பவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும்;  பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்பது சீர்திருத்தக் கருத்து ஆகிறது. உழைப்பின் பெரும் பகுதி பண்ணைக்கும், மிகக் குறைந்த ஊதியம் உழைப்பவனுக்கும் கிடைக்கும் நிலை மாற வேண்டும்; சமூக மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்பன சிறுகதை வற்புறுத்தும் கருத்துகளாகின்றன.

    மேற்கண்ட அளவில் சமூகச் சீர்த்திருத்தக் கருத்துகள் வெளிப்பட்டுச் சிறுகதைகள் சமூகப்பயன் நிறைந்தனவாகத் திகழ்கின்றன.

    4.5.1 மனித நேயப் போக்கு

    சமூகச் சீர்த்திருத்தச் சிறுகதைகள் அனைத்தும் மனித நேயப் போக்கையே அடிப்படைக் கருத்துகளாய்ப் பெற்றுள்ளன. மனித நேயத்தைக் கொண்ட சமூகமே மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது பாடப்பகுதியில் உள்ள சிறுகதைகளின் மூலம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

    மேலே கண்ட சிறுகதைகள் மனித நேயப் பண்பினை வலியுறுத்தும் அளவில் சிறப்புப் பெறுகின்றன.

      • மனிதநேயம், அன்பு இல்லாத காரணத்தினாலேயே ‘எனக்குத் தெரியாது’ என்ற கதையின் தலைவி அபிராமி பாதிக்கப்படுவதைக் காணமுடிகிறது.

      • மனிதநேயம் இல்லாத காரணத்தினாலேயே ‘மூன்று நாள்’ சிறுகதையில் கணவனாலும், மாமியாராலும் சுமதி பாதிக்கப்படுவதைக் காணமுடிகிறது.

      • ‘குறட்டை ஒலி’ சிறுகதையில் மனிதநேயம் இல்லாத செல்வந்தர், குடும்பச் சிக்கலை ஊக்குவிப்பவர்களாகக் காட்டப்படுகின்றனர்.

      • ‘ஆமைச் சமூகமும், ஊமை முயல்களும்’ சிறுகதையில் பகட்டு வாழ்க்கை வாழ்பவர்களிடம் மனிதநேயம் இல்லாதது காட்டப்படுகிறது. அதுவே சிக்கல்களுக்குக் காரணமாகவும் காட்டப்படுகிறது.

      • ‘செவ்வாழை’ சிறுகதையில் மனிதநேயமில்லாத கணக்குப்பிள்ளையின் சூழ்ச்சியால் அவர்கள் உயிராக வளர்த்த செவ்வாழை பறிபோவதைக் காணமுடிகிறது.

    மேற்கண்ட கதைகளின் மூலம் மனிதத் தன்மையற்ற, மனித நேயமற்ற செயல்களே சமூகச் சிக்கல்களுக்குக் காரணமாவது காட்டப்படுகிறது. மனித நேயத்தை வளர்த்துக் கொள்வது மட்டுமே இதுபோன்ற சிக்கலுக்குத் தீர்வாக அமையும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

    4.5.2 புதுமை, புரட்சிக்கு வித்திடல்

    சமூகச் சிக்கல்களுக்குரிய சிறுகதைகள் சமூகச் சீர்திருத்தத்திற்கு வழிகாட்டும் அளவில் புதுமை, புரட்சிக்கு உரியனவாகவும் உருவெடுக்கின்றன. இத்தகைய புதுமை, புரட்சிக் கருத்துகள் காலமாற்றத்திற்கு உரியவையாகின்றன. சமூக வழிகாட்டலுக்கும் இன்றியமையாதன ஆகின்றன. புதுமை, புரட்சிச் சீர்திருத்தக் கருத்துகளை இச்சிறுகதைகளில் காண முடிகிறது.

      • ‘இருளில் இரு பறவைகள்’ சிறுகதையில் தந்தையும், மகனும் நண்பர்களாகக் குடும்பச் சிக்கல்களைப் பரிமாறிக் கொள்ளும்பொழுது சிக்கல்களுக்கான தீர்வுகள் சுமுகமாகப் பெறப்படுகின்றன. தந்தை தன் நிலையினை மகனிடம் பகிர்ந்து கொள்வதும், அவனது காதலை அவர் ஏற்றுக்கொள்வதும், அவன் செய்த தவற்றினை அவனே உணரும்படி செய்து, அதனால் அவன் திருந்துவதும் புதுமைக்கும், புரட்சிக்கும் உரிய சீர்திருத்தங்களாயின.

      • ‘எனக்குத் தெரியாது’ சிறுகதையில் கண்ணெதிரே நடந்த கொடுமையை, அதைக் கூறவிடாமல் மிரட்டித் தடுத்துவிடும் கொடுமையாளனை அந்தப் பதினைந்து பேரும் தண்டித்து விடுகின்றனர். போலீஸ் விசாரிக்கும் பொழுது முன்னர்க் கூறியதுபோலவே எனக்குத் தெரியாது என்று கூறிவிடுகின்றனர். ‘பழிக்குப் பழி’ போன்று இது தோன்றினாலும், சமூகச் சீர்த்திருத்தங்களுக்கு இடமளிக்கும் புதுமை மற்றும் புரட்சிக்கு உரிய தேவையான செயலாகவே கருத இடமளிக்கிறது.

      • ‘மூன்று நாள்’ சிறுகதை பெண்களின் பிரச்சனையை, அந்தரங்கத்தை வெளிப்படுத்தும் அளவில் புதுமை, புரட்சிக்கு உரியதாகிறது. இத்தகைய சிக்கல்களைப் பெண்களுக்கு ஏற்படுத்துதல் கூடாது என்பதை வெளிப்படுத்தும் அளவில் புதுமை, புரட்சிக்கு வித்திடுவதாக இச்சிறுகதை அமைந்துள்ளது.

        இதிலிருந்து புதுமை, புரட்சிக்குரிய சீர்திருத்தக் கருத்துகளை இச்சிறுகதைகள் வெளிப்படுத்தத் தவறவில்லை என்பதை அறியமுடிகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 11:31:12(இந்திய நேரம்)