தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாடகத்தின் தோற்றம்

  • 1.1 நாடகத்தின் தோற்றம்

    மனிதன் என்று அறிவு பெற்றுத் தோன்றினானோ, அன்றே நாடகமும் ஏதோ ஒரு முறையில் தோற்றம் பெற்றிருக்கக் கூடும். மனிதனின் விளையாட்டு உணர்வும், பிறரின் செயல்களை நடித்துக் காட்ட விரும்பும் இயல்பும், நாடகம் தோன்றக் காரணங்களாக அமையலாம். பொதுவாக நாடகத்தின் தோற்றம் பற்றிய தெளிவான கருத்து அறிய முடியாத ஒன்றாகவே உள்ளது. நடனத்திலிருந்துதான் நாடகம் தோன்றியிருக்க வேண்டும் என்பார் சிலர். சமயச் சடங்குகளிலிருந்து நாடகம் தோன்றியிருக்கலாம் என்பாரும் உளர். பொதுவாகச் சடங்கிலிருந்தே நாடகம் உருவாகியிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.

    புராதன (பழங்கால) மனிதன், பருவகால மாற்றங்களையும், இயற்கையோடு நிகழும் பல மாற்றங்களையும் கண்டு, இவை தனக்கு மேலான சக்திகளின் செயற்பாடே என்று நம்பினான். அதனை அடிப்படையாகக் கொண்டே சடங்குகள் உருவாகின. இதுவே நாடகமாக வளர்ந்தது.

    மனிதனின் இயல்பான குணமாக இருக்கின்ற நாடகத் தன்மை, ஒன்றைப் போலச் செய்து காட்டுதல் என்பதாகும். வேட்டையாடிய மனிதன் தான் வேட்டையாடிய நிகழ்வுகளை மீண்டும் செய்து காட்டினான். தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொல்லிக் காட்டினான். பின்பு அதனைச் செய்து காட்டினான். இவையே நாடகமாக மாறின.

    1.1.1 நாடகம் - சொல் விளக்கம்

    நாடகம் என்பதனைக் குறிக்கும் Drama என்ற சொல், கிரேக்கச் சொல்லின் அடியாகப் பிறந்தது. ட்ரமோனியன் (Dramonian) என்ற கிரேக்கச் சொல்லே இதன் மூலமாகும். இதன் பொருள் ‘ஒன்றைச் செய் அல்லது ஒன்றைப் போல நடித்துக் காட்டு’ என்பதாகும்.

    ‘நாடகம்’ என்று வழங்குகிற தமிழ்ச் சொல்லுக்கு அறிஞர்கள் பலவாறு பொருள் விளக்கம் தருகின்றனர். ‘நாட்டின் சென்ற காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடு + அகம் = நாடகம் என்று ஆயிற்று’ என்று அவ்வை சண்முகம் கூறுவார். ஆனாலும் நாடகம் என்ற சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்கள் ஆகியவற்றில் வரும் இடங்களை நோக்கினால் இன்று நாம் நாடகம் என்பதற்குக் கொள்ளும் பொருளில், அன்று கூறப்படவில்லை என்று அறியலாம். நாட்டியம் என்ற கருத்திலேயே காணப்படுகிறது.

    ‘நாடகம்’ என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் ‘நட’ என்று பாவாணர் கூறுகிறார். ‘நட’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து நடனம், நாட்டியம், நாடகம் என்பன ஆட்டத்தை அறிவிக்கும் மறுபெயர்களாக வந்தன என்பார். நடம், நட்டம் என்ற சொற்களும் ஆடலைக் குறிப்பன.

    1.1.2 உலக நாடகத் தோற்றம்

    உலக நாடகத்தின் தோற்றம் எகிப்திலிருந்து தொடங்குவதாக நாடக ஆய்வாளர்கள் கருதுவார்கள். கிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் நாடகம் தோன்றி விட்டது. ஐந்து விதமான எகிப்திய நாடகங்கள் இருந்தன. அவையாவும் கல்லறைகளின் முன்னோ, கோயில்களின் முன்னோ நடிக்கப்பட்டன. எகிப்தின் பிரமிட் நாடகங்கள் என்பன கல்லறைகளின் சுவர்களில் எழுதப்பட்டன. இவை மதகுருக்களாலேயே நடிக்கப்பட்டன. இந்நாடகங்கள் தொடர்ந்து நடிக்கப்பட்டன.

    கிரேக்க நாடகங்கள்

    எகிப்தில் நாடகங்கள் தோற்றம் பெற்றாலும், திட்டவட்டமான தகவல்களுடன் வரலாறு தொடங்குவது கிரேக்க நாடகத்திலிருந்தே எனலாம். பல நூற்றாண்டுகளாகக் கிரேக்க நாடகம் டயோனிஸஸ் (Dionysus) தெய்வத்துக்குச் செய்யும் சடங்குடனேயே தொடர்புற்று இருந்தது. அரிஸ்டாட்டிலின் குறிப்புகளின்படி டயோனிஸஸ் தெய்வத்துக்குப் பாடப்படும் டித்தரம்ஸ் (Dithyrambs) பாடல்களிலிருந்தே கிரேக்க நாடகம் வளர்ந்ததாகக் கருதப்படுகிறது. கிரேக்க நாடகத்தின் முதல்வர்களாக ஐந்து பேரைக் குறிப்பிடலாம். அவர்கள் அஸ்கிலஸ் (524 - 456 கி.மு), சோபோகிளிஸ், ஈரிபிடிஸ், அரிஸ்டோபன்ஸ், மென்டர் என்பவர் ஆவர்.

    இங்கிலாந்து நாடகங்கள்

    கிரேக்க நாடகத் தாக்கத்துடனேயே இங்கிலாந்து நாடகங்களும் படைக்கப்பட்டன. பதினாறாம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்து நாடகங்களில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் நாடகத்திற்குப் புத்துயிர் தரப்பட்டது. துன்பத்தை மையமாகக் கொண்ட பல ‘துன்பியல்’ நாடகங்கள் உருவாயின. தாமஸ் கைட் (Kyd), கிறிஸ்டோபர் மார்லோ, ஜான் லில்லி, வில்லியம் ஷேக்ஸ்பியர் முதலியோர் ஆங்கில நாடக இலக்கியத்தை வளர்ச்சி பெறச் செய்தனர் எனலாம்.

    இரஷ்ய நாடகங்கள்

    கி.பி.பதினெட்டாம் நூற்றாண்டில்தான் இரஷ்ய நாட்டில் நாடகங்கள் தோன்றின. இதற்கு முன் பொம்மலாட்டங்கள், மரபு வழி நடனங்கள் போன்றவை நடைபெற்று வந்தன. முதன்முதல் எழுந்த இரஷ்ய நாடகம் பாலட்ஸ்கி என்பவரால் எழுதப்பட்ட ஊதாரி மகன் என்பதாகும். 18ஆம் நூற்றாண்டில் சுமாராக்கால் என்பவர், தேசியத்தைப் பொருளாக வைத்து இன்பியல், துன்பியல் நாடகங்களை எழுதினார்.

    சீன நாடகங்கள்

    சீன நாடகங்கள் கிறித்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டன. கி.பி.7ஆம் நூற்றாண்டில் நடிப்புக் கலைக்கெனத் தனியாக ஒரு கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்புகள் கிடைக்கின்றன. மிங்-குவாங், சீன நாடகத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார். கி.பி.13ஆம் நூற்றாண்டில் இலக்கியச் செழுமைமிக்க நாடகங்கள் உருவாயின. சீன நாடகத்தில் அக்காலத்தில் ஆண் நடிகர்களே பெண் பாத்திரங்களை ஏற்று நடித்தனர்.

    ஜப்பானிய நாடகங்கள்

    ஜப்பானிய நாடகங்கள் பற்றிக் கி.மு.350இல் இருந்து குறிப்புகள் கிடைக்கின்றன. கி.பி.14ஆம் நூற்றாண்டில் இருந்து நோ நாடக அரங்கு என்னும் நடன நாடக வடிவம் ஜப்பானில் ஆடப்படுகிறது. இது பௌத்த ஆலயங்களிலேயே நிகழ்த்தப்படுகிறது. நோ நாடகங்களை ஐந்து வகையாகப் பிரிப்பர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 21-09-2017 10:47:48(இந்திய நேரம்)