Primary tabs
-
1.3 தமிழ் நாடகங்கள்
தமிழ் நாடகங்கள் பற்றி அறிய இலக்கியங்கள், கல்வெட்டுகள், நம்பிக்கைகள், நாட்டுப்புறச் சமயக் கூறுகள் ஆகியன உதவுகின்றன. பண்டைய கூத்துகள் பற்றியே இலக்கியங்கள் பல செய்திகளைக் கூறுகின்றன. துன்பத்துடன் முடியும் ‘துன்பியல்’ மரபு தமிழில் மிகக் குறைவாகவே உள்ளது. எல்லாம் இன்பமயம் என்னும் பண்பே மேலோங்கி நிற்கிறது. தமிழ் நாடகங்களுக்கும் இது பொருந்தும். மேலும் தமிழ்ப் பண்பாட்டில் நடனம், நாடகம் என இரண்டுமே ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நாடகம், நடனம் என இரண்டுமே ஒரே வகைப் பண்புகளையே கொண்டிருந்தன. பெரும்பாலும் இலக்கியங்களிலே பெண்கள் நடன மகளிர் எனக் குறிப்பிடப்படாமல் நாடக மகளிர் என்றே குறிப்பிடப்படுகின்றனர்.
1.3.1 தொல்காப்பியர் காலத்தில் நாடகம்
இன்று கிடைத்துள்ள நூல்களில் மிகத் தொன்மையானது தொல்காப்பியம். ‘நாடகம்’ என்ற சொல்லை தொல்காப்பியத்திலேயே காண்கிறோம். இந்நூலில் கூறப்படும் செய்திகளைக் கொண்டு, அக்காலத்திலிருந்த சில நாடகங்கள் (கூத்துகள்) பற்றி அறிகின்றோம். தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் என்னும் பகுதியில் கூறியுள்ள பல செய்திகள் நாடகங்களுக்கு ஏற்ற கூறுகளாக உள்ளன. மேலும் தொல்காப்பியர் நாடகத்தை, விளையாட்டு எனப் பொருள்படும் பண்ணை என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.
மறைந்த நாடக நூல்கள்
தொல்காப்பியர் காலத்தை ஒட்டி முன்னும், பின்னும் சில நாடக நூல்கள் இருந்தன. அவை பற்றி உரையாசிரியர்கள் எழுதிய உரைகளின் மூலம் அறிகிறோம். அவ்வாறான நூல்களில் குறிப்பிடத்தக்கவை பன்னிரண்டு. அவை,
(1) முறுவல்
(2) சயந்தம்
(3) குணநூல்
(4) செயிற்றியம்
(5) இசை நுணுக்கம்
(6) இந்திரகாளியம்
(7) பஞ்சமரபு
(8) பரதசேனாபதீயம்
(9) மதிவாணர் நாடகத் தமிழ் நூல்
(10) கூத்த நூல்
(11) செயன் முறை
(12) நூல்என்பனவாகும். இவற்றில் கூத்த நூல், பஞ்ச மரபு ஆகியன இன்று கிடைத்துள்ளன.
கி.பி.250 வரை உள்ள காலத்தைச் சங்க காலம் என்பர் வரலாற்று ஆசிரியர்கள். பெரும்பாலும் தொல்காப்பியர் கூறிய நாடகங்கள் (கூத்துகள்), அவற்றின் வகைகள் பற்றிச் சங்க இலக்கியங்களில் காணலாம். பாணரும், பாடினியும் இசைக் கலையை வளர்த்தனர். பொருநரும், கூத்தரும் நாடகக் கலையைப் போற்றி வளர்த்தனர்.
அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றில் வரும் பாடல்கள் நாடக உரையாடல்கள் போலவே பெரும்பான்மையும் அமைந்துள்ளன. தலைவன் - தலைவி, தலைவி - தோழி, தோழி - பாணன் உரையாடல்கள் நாடகமாகவே விளங்குகின்றன.
வெறியாட்டு என்று சங்க இலக்கியம் கூறும் சடங்கு நிகழ்ச்சி நாடகத் தன்மை பெற்று விளங்குகிறது. காதல் வயப்பட்ட மகள், தாய், வேலன், தோழி என நான்கு பாத்திரங்கள் இந்தச் சடங்கில் முக்கியமானவர்கள். இந்த நான்கு பேருக்கும் இடையில் நடைபெறுகின்ற ‘உரையாடல்’ நாடக மொழிகளாகவே அமைந்துள்ளன.
கூத்தோடு சம்பந்தப்பட்டவர்களாகக் கோடியர், வயிரியர், கண்ணுளர், பாணர், அகவுநர் என்ற தொழில்முறைக் கலைஞர்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. குறிப்பாக மலைபடுகடாம் எனும் நூல் நாடகக் கலைஞர்களாகிய கூத்தர்களை ஆற்றுப்படுத்துவதாகவே (வழி காட்டுவதாகவே) அமைகிறது.
புறநானூறு, 28ஆம் பாடல் கூத்தர் ஆடுகளம் எனக் கூத்து நடைபெறும் இடத்தைக் குறிக்கிறது. பரிபாடலில் வரும்,
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்
களி நாள் அரங்கின் அணிநலம் புரையும்(பரிபாடல் - 14)
என்ற அடிகள் ஆடல் அரங்குகளைப் பற்றிக் கூறுகின்றன.
சங்க காலத்திற்குப் பின்னும், பல்லவர் காலத்திற்கு முன்னும் உள்ள காலம் சங்கம் மருவிய காலம் எனப்படும். இது கி.பி.250 முதல் 600 முடிய உள்ள காலமாகும். சிலப்பதிகாரமும், மணிமேகலையும், பதினெண் கீழ்க்கணக்கு என்று வகுக்கப்படும் நீதிநூல்களும் இக்காலத்தின் எல்லையில்தான் தோன்றின. இந்நூல்கள் நாடக இலக்கியம் பற்றிய பல செய்திகளைக் கொண்டுள்ளன.
திருக்குறளில் நாடகம்
திருக்குறள் மக்களுக்கு நீதி கற்பிக்க வந்த நூலாயினும், நாடகம் பற்றிய செய்திகளையும் கூறுகின்றது. நீண்ட நாடகங்கள் போலில்லாமல், ஒரு பகுதியை மட்டும் நடித்துக் காட்டுவது ஓரங்க நாடகம் ஆகும். இது கதையின் கட்டுரைப் பொருள், கதையின் நிகழ்ச்சி, உறுப்பினர்கள், காலம், செயல், இட ஒருமைப்பாடுகள், உரையாடல் என அமையும். ஓரங்க நாடகத்திற்கான அத்துணைக் கூறுகளும் திருக்குறளின் பல குறட்பாக்களில் அமைந்துள்ளன. ஆறு, அழகப்பன் என்பவர் புலவி நுணுக்கம் என்னும் அதிகாரத்தை வைத்து ஓர் ஓரங்க நாடகத்தைப் படைத்துள்ளார்.
நாடகத்தில் ‘தனிமொழி’ என்பது ஒரு கூறாகும். ஒருவன் தனிமையிலோ, தன் நெஞ்சத்தை நோக்கியோ, தானே தனியே பேசுவது தனிமொழியாகும். இது பல குறட்பாக்களில் நாடகப்பாங்கில் அமையக் காணலாம்.
சிலப்பதிகாரத்தில் நாடகம்
நாடகக் காப்பியம் என்றழைக்கப்படும் சிலப்பதிகாரம் தமிழின் முதற் காப்பியம். இது இன்று திரைப்படமாக எடுக்கப்பட்டும், நாடக, நாட்டிய வடிவமாக நடத்தப்பெற்றும் உள்ளது. ஒரு நாடக வடிவம் கொள்ளுதற்குரிய கட்டுக்கோப்பைச் சிலப்பதிகாரம் முழுமையாகப் பெற்றுள்ளது.
நாடகமேத்தும் நாடகக் கணிகையொடு
வால சரிதை நாடகங்களும்என நாடகம் என்ற சொல்லை, நடனமில்லாமல் நாடகம் என்ற பொருளிலேயே சிலம்பு வழங்குகிறது.
பொதுமக்கள் காணும்படியான நாடகங்கள் பொதுவியல் என்றழைக்கப்பட்டன. அரசவை உயர்குடியினர் காணும்படி நடந்த நாடகங்கள் வேத்தியல் என்று அழைக்கப்பட்டன. சிலப்பதிகாரம் இருநிலைப்பட்ட மக்களுக்கான கலைகளையும் கூறுகிறது. நகர்ப்புற மக்களுக்கான கலைகளை,
(1) அரங்கேற்று காதை
(2) இந்திர விழவூரெடுத்த காதை
(3) நீர்ப்படைக் காதை
(4) கடலாடு காதை
(5) வேனிற் காதைஆகிய காதைகளில் இளங்கோவடிகள் காட்டுவார். நாட்டுப்புற மக்களின் கலைகளை,
(1) வேட்டுவ வரி
(2) குன்றக் குரவை
(3) ஆய்ச்சியர் குரவைஆகிய காதைகளில் காட்டுவார்.
மாதவி ஆடிய பதினொரு ஆடல்கள், சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் வருகின்றன. அவை புராணக் கதைகளை நடித்துக் காட்டும் தன்மையுடன் விளங்குகின்றன.
‘நாடக மேடை’ என இக்காலத்து வழங்கப்படும் இடம் சிலப்பதிகாரத்தில், ஆடுகளம், ஆடரங்கு, ஆடிடம் என்ற சொற்களால் குறிக்கப்படுகிறது. அரங்கம் அமைக்கப்படும் அளவுகளும் கூறப்பட்டுள்ளன. இவற்றில் கூத்துகள் இரவில் நடக்கும்போது பெரும்விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. எதிரில் அமர்ந்து கூத்துக் காண்போரின் இருக்கை அம்பலம் என்ற பெயரால் விளங்கியது.
ஆடரங்கில் மூவகைத் திரைகள் கட்டப்பட்டிருந்தன. எழினி என்ற சொல் திரையைக் குறித்தது. மூவகை எழினிகள் இருந்தன. அவை,
(1) ஒருமுக எழினி
(2) பொருமுக எழினி
(3) கரந்து வரல் எழினிஎன்று அழைக்கப்பட்டன.
நாடகம் தொடங்குவதற்குச் சற்றுமுன் அந்தரக்கொட்டு என்னும் ஒருவகைக் கூத்து ஆடுவது வழக்கம் என்பதைச் சிலப்பதிகாரம் கூறும். மக்களின் மனத்தைக் கவர்வதற்கும், கூட்டத்தைக் கூட்டுவதற்கும் இது ஆடப்பட்டிருக்கலாம்.
மணிமேகலையில் நாடகம்
மணிமேகலை ஒரு துறவுக் காப்பியம். ஆனாலும் இதனுள் நாடகம், நாடகக் காப்பியம், யாழ், தண்ணுமை, குழல் போன்ற செய்திகள் கூறப்படுகின்றன. மணிமேகலைக் காப்பியம் எழுந்த காலத்தில் குடும்பப் பெண்கள் ஆடல்பாடல் நிகழ்த்துவதில்லை. அதற்கென இருந்த பாணர் மகளிரும், விறலியரும், கணிகையருமே இக்கலைகளைப் பயின்று ஆடியும் பாடியும் வந்தனர் என்பதை அறிகிறோம். கதை தழுவாக் கூத்து, கதை தழுவி வரும் கூத்து என இருவகைக் கூத்துகள் இருந்ததை மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் காட்டுகிறார்.
1.3.4 பிற காப்பியங்களில் நாடகம்
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய சமணக் காப்பியம் பெருங்கதை ஆகும். இந்நூலில் கோயிலில் நாடகம் நடத்துவதற்கெனத் தனிக்குழுக்கள் இருந்ததாக, இதன் ஆசிரியர் கொங்குவேளிர் சுட்டிக்காட்டுவார்.
மணநூல் என்றழைக்கப்படும் சீவகசிந்தாமணியில் கதை தழுவிய கூத்துகள் நடந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. இக்காப்பியத்தில் ஐம்பது இடங்களில் நாடகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. காப்பியத் தலைவன் சீவகன் ஒரு வீரனாகவும், கலைஞனாகவும் காட்டப்படுகிறான். நாடகங்களையும், நடனங்களையும் காண்பது அவன் பொழுது போக்குகளாகக் காட்டப்பட்டுள்ளன. நாடகங்களைக் காண்பதற்கு மக்கள் பெரும் கூட்டமாக வந்தனர் என்றும் சிந்தாமணி கூறும்.
கம்பர் எழுதிய கம்பராமாயணம், ‘கம்பர் நாடகம்’ என்றே அழைக்கப்படுகிறது. கம்பன் காலத்தில் நாடக நடிகர்கள் மதங்கியர் - கண்ணுனர் என்று அழைக்கப்பட்டனர்.
பக்தி இலக்கியங்களில் நாடகம்
பல்லவர் காலத்தில் சைவமும், வைணவமும் எழுச்சி பெற்றன. சைவப் பெரியோர்களான நாயன்மார்களும், வைணவப் பெரியோர்களான ஆழ்வார்களும் பக்திப் பாடல்களைப் பாடினர். இவர்களின் பாடல்களில் பெரும்பாலும் இசைக்கலை பற்றிய குறிப்புகளே அதிகம் கிடைக்கின்றன. இன்னிசைக் கருவிகள் கொண்டு ஆடல் பாடல் நிகழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. காலத்தால் பிற்பட்டவராகக் கருதப்படும் மாணிக்கவாசகர், ''நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து.....'' என்று பாடுவதன் மூலம், அக்காலத்தில் நாடகம் பெருவழக்காய் இருந்தது தெரிய வருகின்றது. நாடகம் என்ற சொல்லினை நம்மாழ்வார் நாட்டியம் என்ற பொருளிலேயே கூறுகின்றார்.
பிற இலக்கியங்களில் நாடகம்
சேக்கிழார் பாடிய பெரிய புராணம் நாடகத் தொடர்பான பல செய்திகளைக் கூறுகின்றது. மதுரையைக் குறிக்கும் பொழுது ‘முத்தமிழும்’ சிறந்த மதுரை என்று கூறும். காஞ்சியில் அக்காலத்தில் நாடக மகளிர்க்கெனத் தனித் தெருக்கள் இருந்த செய்தியையும் பெரிய புராணம் மூலம் அதன் ஆசிரியர் சேக்கிழார் காட்டுவார்.
அடியார்க்கு நல்லாரின் உரைகள் கலைக்கு விளக்கமாக அமைகின்றன. அவர் காலத்து நாடகம், இன்றைய வடிவில் இல்லாமல் ஆட்ட வடிவில் அமைந்திருந்ததை அடியார்க்கு நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது.
சிற்றிலக்கியங்களை நாடகம் என்னும் அடிப்படையில் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் மதிப்பிடுவார்கள். நாடகக் கூறுகள் அமைந்த சிற்றிலக்கியங்கள், நாடகத்திற்குப் பெரும் ஊக்கம் தந்தன.
கல்வெட்டுகளில் நாடகங்கள்
கி.பி.பத்தாம் நூற்றாண்டிலிருந்து வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் நாடகம் பற்றியும், அந்நாடகமாகிய கூத்தை ஆடிய கலைஞர்கள் பற்றியும் பல தகவல்கள் காணப்படுகின்றன.
தஞ்சைப் பெரிய கோயிலில் காணப்படும் முதலாம் இராசேந்திரன் காலக் கல்வெட்டொன்று, சாந்திக் கூத்தனாலும், அவன் குழுவினராலும், சிறப்பு நாடகம் ஒன்று தஞ்சைக் கோயிலில் நடத்தப் பெற்றதாகக் கூறுகின்றது.
இரண்டாம் இராசேந்திரன் காலத்திய கல்வெட்டு, தஞ்சைக் கோயிலில், ‘இராச இராசேசுவர நாடகம்’ வைகாசித் திருவிழாவில் ஆடப் பெற்றதென்றும், அதற்கு நிவந்தங்கள் (நன்கொடைகள்) அளிக்கப்பட்டன என்றும் குறிப்பிடுகின்றது.
தஞ்சையில் மானம்பாடி என்னுமிடத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்று வீரநாராயணபுரத்தில் கைலாசமுடி மகாதேவரின் கோயிலில் சித்திரைத் திருவிழாவின்போது ஐந்து முறை தமிழ்க்கூத்து ஆடப்பட்டதாகத் தெரிவிக்கின்றது.