Primary tabs
-
5.4 அச்சுவார்க்கும் பொறிகள்
அச்சு வார்க்கும் பொறிகள் இரு வகைப்படும். அவை:
1)தனி எழுத்து அச்சு வார்ப்பு முறை (Mono-type method)
2)தொடர் எழுத்து அச்சு வார்ப்பு முறை (Lino- type method)
என்பனவாகும்.
5.4.1 தனி எழுத்து அச்சு வார்ப்பு முறை
தனி எழுத்து அச்சு வார்ப்பு முறையை டால்பர்ட்டு லான்ஸ்டன் (Tolbert Lanston) என்பவர் வடிவமைத்தார். இந்தப் பொறியில் 276 பொத்தான்கள் (keys) இருக்கும். தட்டச்சுப் பொறியைப் போல இப்பொறியில் தலைப்பு எழுத்துக்கள், சாய்வு எழுத்துக்கள் (Italic) பெரிய எழுத்துக்கள் (Bold-face), எண்கள் (Figures), புள்ளிகள், கால்புள்ளிகள், அரைப்புள்ளிகள், கோடுகள் முதலிய குறிகள், இடநிரப்பிகள் போன்ற பல்வேறு வகையான எழுத்துகளும் இருக்கும்.
இப்பொறியின் ஒரு பகுதி அச்சடிக்கும் பொத்தான்களால் குறியீடு இடும் பகுதியாலும் (Key-code Section), மறுபகுதி அச்செழுத்தை உருவாக்கி வார்க்கும் பகுதியாலும் (Casting Section) இருநிலைகளில் இயங்குவதாக அமைக்கப்பட்டது. தட்டச்சு செய்வதற்கு இணையான எழுத்தை, உருகிவேகும் ஈயத்திலிருந்து புத்தம் புதியதாய் அந்த இயந்திரம் உருவாக்கும். ஒவ்வொரு நாளும் உருவான புதிய எழுத்துகளால் ஆன செய்திகளை அச்சடித்ததும் மறுநாள் அவற்றை அந்த இயந்திர உலையில் கொட்டி உருக்கிவிடுவார்கள். மறுநாள் அதே ஈயத்திலிருந்து புதியதாய் எழுத்துக்களை உருவாக்கி அச்சடிப்பார்கள். இப்பொறியை இயக்குபவர்கள் சிறந்த பயிற்சி பெற்றவர்களாக இருப்பர். தட்டச்சில் ஏதாயினும் பிழை ஏற்பட்டால், பிழையான எழுத்தை மட்டும் அகற்றிவிட்டுப் புதிய சரியான எழுத்தைச் சேர்த்துக்கொள்ள இம்முறையில் வசதியுள்ளது. ஒவ்வொரு தனித்தனி எழுத்தாக உருவாக்குவதால் இது தனி எழுத்து அச்சு வார்ப்பு முறை என்று அழைக்கப்பட்டது. தமிழ் நாளிதழ்களில் முன்பு தினமணி இதழ் 1980-90களில் இந்தத் தனி எழுத்து அச்சு வார்ப்பு முறையிலேயே அச்சிடப்பட்டு வெளிவந்தது.
5.4.2 தொடர் எழுத்து அச்சுவார்ப்புமுறை
தொடர் எழுத்து அச்சு வார்ப்பு முறை வரிவரியாக அச்சுக்கட்டை வார்க்கும் முறையாகும். ஒரு வரியில் சில சொற்கள் அமையும். இந்த முறையை ‘ஒட்மர் மெர்கன்தாலர்’ (Ottmar Merganthalar) என்னும் ஜெர்மானியர் 1889இல் வடிவமைத்தார். இப்பொறி பெரிய அளவில் அமைந்ததாகும். இப்பொறியில் குழாய்களும் நெம்புகளும் பல்சக்கரங்களும் வார்ப்புக்கான அச்சுக்களும் அமைந்திருக்கும்.
தொடர் அச்சுப்பொறியும் இருபகுதிகளாக அமைந்துள்ளது. ஆனால் இவ்விரு பகுதிகளும் தனி எழுத்து அச்சு வார்த்தல் முறை போல் தனித்தனியாக இல்லாமல், இயந்திரத்தின் உள்ளேயே இரண்டு நிலையும் இணைந்து செயல்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. செய்திகளை இதில் தட்டச்சு செய்யும்போது உள்ளே உருவாகும் குறியீடுகளுக்கு இணையான எழுத்துக்கள் வார்க்கப்படும். எழுத்துக்கள் சொற்களாகி வரிவரியாக, உருகிவேகும் ஈயத்திலிருந்து புத்தம்புதிய அச்சு வரிகளை அந்த இயந்திரம் உருவாக்கும். ஒவ்வொரு நாளும் உருவான செய்திகளை அச்சடித்ததும் மறுநாள் அவற்றை அந்த இயந்திர உலையில் கொட்டி உருக்கிவிடுவார்கள். மறுநாள் அதே ஈயத்திலிருந்து புதிதாய் வரிகளை உருவாக்கி அச்சடிப்பார்கள்.
இப்பொறியின் அமைப்பு கீழ்க்காணுமாறு அமைந்துள்ளது.
1)பொத்தான் அமைப்பு (Key Board)
2)சக்தியூட்டி (Magazine)
3)அச்சுவார்க்கும் பொறி (Casting Machinery)
4)அச்சுக்களை வெளியிடும் பொறி (Distributing Machinery)
• அச்சு வார்க்கும் பொறி
பொத்தான்கள் அழுத்தப்படுவதற்கு ஏற்பப் பல்வேறு எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து வார்த்தை வரிகளாகி, அவ்வரிகள் இப்பகுதியில் புத்தம் புதியனவாக வார்க்கப்படும். வெள்ளை ஈயத்தாலான இவ்வரிகள் வெள்ளி ‘பிஸ்கெட்’ போல மினுமினுக்கும். செய்தித்தாளின் ஒரு ‘கால’ (Column) அளவில் இந்த வாசகங்கள் வரிவரியாகத் தனித்தனியே பிரித்தெடுக்கும் வகையில் உருவாகும்.
• அச்சுக்களை வெளியிடும் பொறி
அழுத்தப்பட்ட வரிகள் கொதிக்கும் ஈய உலோகத்திலிருந்து உருவாவதால், மிகவும் சூடாக இருக்கும். வார்க்கப்பட்ட இந்தச் சூடான வரிகளின் மீது குளிர்ந்த தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டுக் குளிரூட்டப்படும். குளிரூட்டப்பட்ட வரிகளை இப்பொறி வெளியிடும் வேலையைச் செய்கிறது. வரிகள் முறையான பத்திகளாக அடுக்கப்பட்டு அச்சடிக்க ஏதுவாக எல்லா ஏற்பாடுகளையும் இந்தப் பொறி உருவாக்கித் தருகிறது.
இம்முறையில் ஒரு வரியில் ஒரே எழுத்து மட்டும் பிழையாகத் தவறுதலாக வந்துவிட்டால் அந்த எழுத்தை மட்டும் மாற்ற முடியாது. அந்த வரி முழுவதும் பயனற்றதாகிவிடும். அந்த வரியையே திரும்ப உருவாக்க வேண்டியிருக்கும். தனி எழுத்து முறையில் எழுத்துக்கள் சரிந்துவிட்டால் ஒன்று சேர்க்க முடியாதது போன்ற சிக்கல் இதில் இல்லை. சரிந்தாலும் வரிவரியாக இருப்பதால் பிஸ்கெட்டை அடுக்குவதுபோல எளிதில் ஒன்று சேர்த்துவிடலாம். இதுவே இம்முறையிலுள்ள பெரிய வசதி. தனித்தனி எழுத்தாக இல்லாமல், தொடர் எழுத்துக்களைக் கொண்ட வரியாக வளர்க்கப்படுவதால் இது தொடர் எழுத்து அச்சு வார்ப்பு முறை என்று அழைக்கப்படுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் 1980-90களில் இந்தத் தொடர் எழுத்து அச்சு வார்ப்பு முறையிலேயே அச்சிடப்பட்டு வெளிவந்தது.