Primary tabs
-
5.8 தொகுப்புரை
முற்காலத்தில் அச்சுக்கலை சமயம் பரப்பவே ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. அச்சுக்கலை முதன்முதலில் சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. தகடு, செம்பு, கல்வெட்டு, மர எழுத்து, நெசவுத் துணி போல்வன அச்சுக்கலை வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருள்கள் ஆகும். அச்சுக்கலை வளர்ச்சியில் ‘காகித நாணயம்’ ஒரு முக்கியமான தூண்டுகோலாக அமைந்தது. வழிபாட்டுப் படங்கள் அச்சடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மண்ணால் ஆன எழுத்துகளைத் தீயிலிட்டுச் சுட்டுப் பயன்படுத்தினர். மரத்தாலான தனித்தனி எழுத்துக்கள், உலோக எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலை அச்சிடுதலின் முக்கிய வளர்ச்சி நிலையாகும். ஜான் கூட்டன் பர்க் அச்சுக்கலையின் தந்தை என்றழைக்கப்படுகிறார். தமிழ் வரிவடிவங்களில் பல மாறுதல்களைச் செய்ததால் வீரமாமுனிவர் தமிழ் வரிவடிவின் தந்தை என்று அழைக்கப்பட்டார். இந்தியாவில் கோவா, தமிழ்நாட்டில் தரங்கம்பாடி ஆகிய ஊர்கள் அச்சுக்கூடம் முதலில் நிறுவப்பட்ட இடங்கள் ஆகும். அச்சிடுவதில் காலால் மிதித்து அச்சடிக்கும் இயந்திரம், உருளை அச்சு இயந்திரம், சுழல் அச்சு இயந்திரம், ஆப்செட் அச்சிடும் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் பயன்பட்டு வந்தன. டெலி டைப் செட்டர், டெலக்ஸ், போட்டோ டைப் செட்டிங் போன்ற முறைகளும் தற்கால அச்சிடும் முறைகளாக உள்ளன. கணினி கண்டுபிடிப்பு அச்சிடும் முறையில் அதிநவீன வசதிகளை உருவாக்கியுள்ளது. பக்க அமைப்பு, அழகூட்டுதல், அச்சிட்டு மடித்து எண்ணி அடுக்குதல் போன்ற பல்வேறு பணிகளைக் கணினியின் துணைகொண்டு செய்ய முடிகிறது. அச்சிடுவதற்குப் பயன்படுத்தக் கூடிய எழுத்துக்களில் பல வகைகள் உள்ளமையும் புதிய முறைகளில் அச்சிட உதவி வருகின்றன.