தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.1 கற்பின் இலக்கணம்

  • 2.1 கற்பின் இலக்கணம்

    கற்பு வாழ்க்கை என்பது பொதுநிலையில் திருமணத்துக்குப்
    பின்பு அமையும் கணவன் - மனைவி ஆகியோரின் குடும்ப
    வாழ்க்கை ஆகும். நாற்கவிராச நம்பி கற்பு என்பதை,
    திருமணத்துக்குப் பின் ஏற்படும் மகிழ்ச்சி, ஊடல், ஊடல்
    உணர்த்தல், பிரிவு முதலானவை அமைந்த நிலை என்று
    குறிப்பிடுகிறார். இதனைக் கூறும் நூற்பா :

    பொற்பமை சிறப்பிற் கற்பெனப் படுவது
    மகிழ்வும் ஊடலும் ஊட லுணர்த்தலும்
    பிரிவும் பிறவும் மருவிய தாகும்.

    (நம்பியகப் பொருள் - நூற்பா : 200)

    2.1.1 கற்பிற்குரிய கிளவித் தொகை

    கற்பியலில், தலைவனும் (கணவனும்) தலைவியும் (மனைவியும்)
    சேர்ந்து வாழ்கின்ற நிகழ்வை இல்வாழ்க்கை நிலை என்றும்,
    பிரிந்து வாழ்கின்ற நிகழ்வைப் பிரிவு என்றும், கூறுவர்.

    கற்பு என்ற கைகோளுக்கு உரிய கிளவித் தொகை ஏழு.
    அவை : (1) இல்வாழ்க்கை, (2) பரத்தையர் பிரிவு, (3) ஓதல்
    பிரிவு (4) காவல் பிரிவு (5) தூதுப் பிரிவு (6) துணைவயின் பிரிவு
    (7) பொருள்வயின் பிரிவு. இவற்றைக் குறிப்பிடும் நூற்பா இதோ:

    இல்வாழ்க் கையே பரத்தையிற் பிரிவே
    ஓதற் பிரிவே காவற் பிரிவே
    தூதிற் பிரிவே துணைவயிற் பிரிவே
    பொருள்வயிற் பிரிவெனப் பொருந்திய ஏழும்
    வளமலி கற்பின் கிளவித் தொகையே.

    (நம்பியகப்பொருள் - நூற்பா : 201)

    2.1.2 இல்வாழ்க்கை

    முன்பு காதலன் - காதலியாக வாழ்ந்தவர்கள் தற்பொழுது
    திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கை (குடும்ப வாழ்க்கை)
    நடத்துகின்றனர். இந்த இல்வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக
    இருக்கும். இது கிழவோன் மகிழ்ச்சி, கிழத்தி மகிழ்ச்சி, பாங்கி
    மகிழ்ச்சி, செவிலி மகிழ்ச்சி என்று நான்கு வகைப்படும். இதனை
    நம்பி அகப்பொருள்,

    கிழவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி
    பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சியென்
    றீங்கு நால்வகைத் தில்வாழ்க் கையே.

    என்று குறிப்பிடுகிறது.

    2.1.3 கிழவோன் மகிழ்ச்சி

    கிழவோன் என்பவன் தலைவன். அவன் களவுக் காலத்தில்
    தலைவியுடன் கூடிய பொழுது மகிழ்ச்சி உடையவனாக இருந்தான்.
    ஆனால், அக்களவு ஒழுக்கத்திற்குச் சென்ற பாடத்தில் கூறியது
    போல் பல இடையூறுகள் ஏற்பட்டன. எனவே, அக்களவு
    ஒழுக்கத்தில் மகிழ்ச்சி நிலையற்றதாக இருந்தது. ஆனால்,
    தற்பொழுது இவர்கள் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கை
    நடத்துவதால் முன்னர் ஏற்பட்டது போன்ற இடையூறுகள் ஏற்பட
    வாய்ப்பில்லை. ஆகவே, கணவன் மனைவியுடன் மகிழ்ச்சியோடு
    வாழ்கிறான். இதையே கிழவோன் மகிழ்ச்சி என்று நம்பி
    அகப்பொருள் கூறுகிறது.

    2.1.4 கிழத்தி மகிழ்ச்சி

    கிழத்தி என்பவள் தலைவி. கிழவோன் மகிழ்ச்சியில்
    கூறியவாறே மனைவி கணவனுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறாள்.
    இதையே கிழத்தி மகிழ்ச்சி என்று நம்பி அகப்பொருள் கூறுகிறது.

    2.1.5 பாங்கி மகிழ்ச்சி

    களவுக் காலத்தில் தலைவன் தலைவியாக வாழ்ந்தவர்கள்
    தற்பொழுது இல்வாழ்வில் கணவன் மனைவியாக மகிழ்ச்சியுடன்
    வாழ்வதைக் கண்டு பாங்கி (தோழி) மகிழ்ச்சி உடையவளாக
    இருப்பாள். இதையே பாங்கி மகிழ்ச்சி என்று நம்பி அகப்பொருள்
    குறிப்பிடுகிறது.

    2.1.6 செவிலி மகிழ்ச்சி

    பாங்கி மகிழ்வதைப் போலவே செவிலி (வளர்ப்புத்தாய் -
    தோழியின் தாய்)யும் மகிழ்வாள். இதையே செவிலி மகிழ்ச்சி
    என்று நம்பி அகப்பொருள் கூறுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:29:07(இந்திய நேரம்)