தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.4 ஊடல்

  • 2.4 ஊடல்

    பரத்தையர் மீது ஆசை கொண்டு தலைவன் தலைவியைப்
    பிரிந்து சென்றமையால் தலைவன் மீது தலைவி ஊடல் (புலவி)
    கொண்டாள். ஊடல் என்பது தலைவன் தலைவியருள் ஏற்படும்
    சிறுபிணக்கு (மாறுபாடு) அல்லது பொய்யான கோபம் எனலாம்.
    இந்த ஊடல், உணர்த்த உணரும் ஊடல், உணர்த்த உணரா
    ஊடல் என்று இரண்டு வகைப்படும்.

    2.4.1 உணர்த்த உணரும் ஊடற்குரிய கிளவிகள்

    இக்கிளவிகள் பதினொன்று.

    (1)
    பரத்தையர் காரணமாக தலைவன் தலைவியைப்
    பிரிந்து சென்றதைக் கண்டவர்கள் தலைவியின்
    ஊடலுக்கு இதுவே காரணம் என்று கூறுவர்.
    (2)
    பரத்தையர் பொருட்டுத் தலைவன் பிரிந்து சென்று
    விட்டதால் தலைவி தனியே அழுது வருந்துவாள்.
    (3)
    தலைவியின் துன்பம் கண்ட பாங்கி, நீ இவ்வளவு
    துன்பம் கொள்வதற்குக் காரணம் என்ன என்று
    கேட்பாள். அவ்வாறு கேட்ட பாங்கியிடத்து, தலைவன்
    பரத்தையர் நாட்டம் கொண்டு பிரிந்து சென்று
    விட்டான் என்று தலைவி கூறுவாள்.
    (4)
    அவ்வாறு கேட்ட     பாங்கியிடத்து, தலைவன்
    பரத்தையர் நாட்டம் கொண்டு பிரிந்து சென்று
    விட்டான் என்று தலைவி கூறுவாள்.
    (5)
    தலைவன் மீது குற்றம் கூறிய தலைவியைப் பார்த்துப்
    பாங்கி, இவ்வாறு கூறுவது நம் இயல்புக்குப்
    பொருந்தாது என்பாள்.
    (6)
    தலைமகனுக்குத் தலைவியின் பூப்பு உணர்த்துவதற்கு
    அறிகுறியாகப் பாங்கி சிவந்த ஆடைகளை (செவ்வணி)
    மற்றும் அணிகலன்களை அணிந்து பரத்தையர்
    இல்லத்திற்குச் செல்வாள்.
    (7)
    செவ்வணி பூண்டு வந்த பாங்கியைக் கண்டு,
    பரத்தையர் பழித்தும் இழித்தும் பேசுவர்.
    (8)
    தலைவன் தலைவியோடு சேர்ந்து வாழ்வதே உலக
    நடைமுறை என்று     கருதி பரத்தையானவள்
    தலைவனைத் தலைவியிடம் செல்லுமாறு அனுப்பி
    வைப்பாள்
    (9)
    பரத்தையரிடமிருந்து மீண்டு வருகின்ற தலைவனைக்
    கண்டு மகிழ்ந்த வாயில்கள் அச்செய்தியைப்
    பாங்கிக்குக் கூற, பாங்கி அச்செய்தியைத் தலைவிக்குக்
    கூறுவாள்.
    (10)
    பரத்தையரிடமிருந்து தலைவன் மீண்டு தம்மிடம்
    வந்துவிட்டமையால் தலைவி     ஊடல் நீங்கப்
    பெறுவாள். பிறகு தலைவனை எதிர் கொண்டு
    பணிவாள்.
    (11)
    தலைவனோடு தலைவி கூடி மகிழ்வாள்.

    2.4.2 உணர்த்த உணராத ஊடற்குரிய கிளவிகள்

    இக்கிளவிகள் பதினான்கு.

    (1)
    வெண்மை நிறம் உடைய ஆடை முதலியவற்றை
    அணிந்து கொண்டு பாங்கியானவள் பரத்தையர்
    வீட்டில் இருக்கும் தலைவனிடம் சென்று தலைவிக்குக்
    குழந்தை பிறந்துள்ளதைக் கூறி வீட்டிற்கு வா என்று
    அழைப்பாள்.
    (2)
    குழந்தை பெற்ற தலைவியானவள் உறவினர்கள் சூழ
    எண்ணெய்த் தேய்த்துக் (நெய்யாகும்) குளித்த
    செய்தியைத் தலைவனிடம் எடுத்துக் கூறி வீட்டிற்கு
    வா என்று அழைப்பாள்.
    (3)
    தலைவி குழந்தை பெற்று நெய்யாடிய செய்தியைக்
    கேட்ட தலைவன் மகிழ்ச்சி அடைவான்.
    (4)
    மகிழ்ச்சியுடன் தலைவன் தலைவியைக் காண
    வருவான். அவன் வருகையைப் பாங்கி தலைவியிடம்
    கூறுவாள்.
    (5)
    வந்த தலைவனை மகிழ்வுடன் வரவேற்காமல் தலைவி
    அவனிடத்து ஊடல் காட்டுவாள்.
    (6)
    ஊடிய தலைவியிடத்துப் பாணன் முதல் பாங்கன்
    முடிய பலரும் வாயில் வேண்டுவர். அவர்களிடத்துத்
    தலைவி மறுத்துக் கூறுவாள்.
    (7)
    ஊடல் தீர்க்கும் வாயில்களைத் தலைவி மறுத்து
    விட்டாள். விருந்தினரை அழைத்துச் சென்றால்
    தலைவியின் ஊடல் தீர்ந்துவிடும் என்று கருதி
    தலைவன் விருந்தினரோடு செல்வான். தலைவியும்
    ஊடலை மறைத்து விருந்தினருக்கு வேண்டுவன
    செய்வாள். அதனைக் கண்ட தலைவன், தலைவியின்
    ஊடல் தீர்ந்துவிட்டதாக எண்ணி மகிழ்வான்.
    (8)
    தலைவியின் ஊடல் நீங்கியது என்று நினைத்து
    தலைவன் தலைவியைக்     கூட முயல்வான்.
    அப்பொழுது தலைவி ஊடலை வெளிக்காட்டுவாள்.
    தலைவியின் ஊடலைக் கண்ட தலைவன் அவளின்
    அழகிய அடிகளை வணங்குவான்.
    (9)
    நீ என் அடிகளை வணங்குவதைப் பரத்தையர்
    கண்டால் நன்றாக இருக்கும் என்று தலைவி
    தலைவனிடம் கூறுவாள்.
    (10)
    பரத்தையர் எவரையும் எனக்குத் தெரியாது என்று
    தலைவன் தலைவியிடம் கூறுவான்.
    (11)
    தான் காமக்கிழத்தியைக் கண்டதாகத் தலைவி
    தலைவனிடம் கூறுவாள். (காமக்கிழத்தி - ஒருவருக்கே
    உரிய பரத்தை)
    (12)
    தலைவியின் ஊடலைத் தோழி போக்க முயல்வாள்.
    (13)
    தலைவியின் ஊடல் நீங்காமை கண்டு தலைவன்
    தலைவியிடத்து ஊடல் கொள்வான்.
    (14)
    ஊடல் தணியாத தலைவியை ‘நீ அன்பு இல்லாத
    கொடியவள்’ என்று பாங்கி இகழ்ந்து பேசுவாள்.
    மேலே கூறிய பதினான்கும் சிறப்பு மிக்க
    ஊடலாகும். இவைபோல அத்துணைச்
    சிறப்பு இல்லாத நான்கு ஊடலையும்
    நம்பி அகப்பொருள் கூறுகிறது. அவை :
    (1)
    தன் மகனும், ஆற்றாமையும் (தாங்கமுடியாத
    தன்மை) வாயில்களாக அமைய, தலைவி தலைவனை
    எதிர்கொள்வாள்.
    (2)
    தலைவி, தலைவனைக் கூடி நீங்கியபின் வந்த
    பாங்கியிடம் தன் மகனைப் புகழ்ந்து பேசுவாள்.
    (3)
    தலைவி தலைவனைப் புகழ்ந்து பேசுவாள்.
    (4)
    தோழி தலைவியைப் புகழ்ந்து பேசுவாள்.

    2.4.3 பிற பிரிவுகள்

    இல்வாழ்க்கையில் பரத்தையர்ப் பிரிவு, ஓதல் பிரிவு, காவல்
    பிரிவு, தூதுப் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு
    என்ற ஆறு வகைப் பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. இவற்றுள்
    பரத்தையர்ப் பிரிவு மட்டும் தலைவனின் காம இன்பம் நோக்கி
    அமைந்தது ஆகும். இப்பிரிவை மட்டும் நம்பி அகப்பொருளின்
    கற்பியல் விரித்துரைக்கிறது. எஞ்சிய ஐந்து வகைப் பிரிவுகளை
    ஒரே ஒரு நூற்பாவில் அவ்வியல் குறிப்பிடுகிறது. அந்நூற்பா :

    பிரிவறி வுறுத்தல் பிரிவுடன் படாமை
    பிரிவுடன் படுத்தல் பிரிவுடன் படுதல்
    பிரிவுழிக் கலங்கல் வன்புறை வன்பொறை
    வருவழிக் கலங்கல் வந்துழி மகிழ்ச்சியென்
    றொருமையிற் கூறிய வொன்பது வகைய
    கல்வி முதலா வெல்லாப் பிரிவும்

    (நம்பியகப் பொருள் - நூற்பா : 209)

  • ஓதல் பிரிவு


  • தலைவன் கல்வி கற்கும் பொருட்டுப் பிரிந்து செல்லும் பிரிவு.


  • காவல் பிரிவு


  • தலைவன் காவல் காக்கும் பொருட்டுப் பிரிந்து செல்லும்
    பிரிவு.

  • தூதுப்பிரிவு


  • தலைவன் தூது (இருவரிடையே பேச்சு நிகழ்வதற்கு உதவியாக
    இருப்பவர்) செல்லும் பொருட்டுப் பிரிந்து செல்லும் பிரிவு.

  • துணைவயின் பிரிவு


  • பிறருக்குத் துணையாகச் செல்லும் பொருட்டுத் தலைவன்
    பிரிந்து செல்லும் பிரிவு.

  • பொருள்வயின் பிரிவு


  • பொருள் சேர்த்தல் பொருட்டுத் தலைவன் பிரிந்து செல்லும்
    பிரிவு.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:29:19(இந்திய நேரம்)