Primary tabs
-
2.2 இல்வாழ்க்கையின் விரி
மகிழ்ச்சிக்கு உரிய இல்வாழ்க்கையை நான்கு வகைப்படுத்திய
நாற்கவிராச நம்பி, அது பத்து வகை விரிகளை உடையது
என்றும்எடுத்துக் கூறுகிறார். அவை:
(1)தலைவன் தலைவி முன் பாங்கியைப் புகழ்தல்(2)தலைவனைப் பாங்கி வாழ்த்தல்(3)தலைவியை வரையும் நாள் அளவும் வருந்தாது
இருந்தமை உரை என்றல்(4)பெருமகள் உரைத்தல்(5)தலைவனைப் பாங்கி வரையும் நாள் அளவும்
நிலைபெற ஆற்றிய நிலைமை வினாவுதல்(6)செவிலிக்கு அன்புற உணர்த்தல்(7)வாழ்க்கை நன்று என்று கூறுதல்(8)செவிலி நற்றாய்க்கு உணர்த்தல்(9)வாழ்க்கைத் தன்மை உணர்த்தல்(10)காதல் அறிவித்தல்- தலைவன் தலைவி முன் பாங்கியைப் புகழ்தல்
இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள தலைவன் பாங்கியை
(தோழியை)த் தலைவியின் முன்னிலையில் புகழ்ந்து கூறுவான்.
- தலைவனைப் பாங்கி வாழ்த்தல்
அவ்வாறு புகழ்ந்து கூறிய தலைவனைப் பாங்கி வாழ்த்திக்
கூறுவாள்.
- தலைவியை வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை
உரை என்றல்
தலைவி, தலைவனை வரைந்து (திருமணம்) கொள்ள பல்வேறு
இடையூறுகள் எழுந்தன. அப்பொழுது தலைவி தலைவனைத்
திருமணம் செய்து கொள்ளும் காலம் வரை மனம் தளராது
இருந்த தன்மையை எடுத்துரைக்குமாறுப் பாங்கி தலைவியிடம்
வேண்டினாள்
- பெருமகள் உரைத்தல்
பாங்கியின் வேண்டுகோளுக்கு ஏற்ப தலைவி, தலைவனை
வரைந்து கொள்ளும் காலம் வரை தான் பொறுமையுடன்
இருந்ததற்கான காரணத்தை எடுத்துக் கூறுவாள்.
- தலைவனைப் பாங்கி வரையும் நாள் அளவும் நிலைபெற
ஆற்றிய நிலைமை வினாவுதல்
தலைவனிடம் பாங்கி, தலைவியை வரைந்து கொள்ளும் காலம்
வரை ஆற்றியிருந்த (பொறுத்திருந்த) தன்மையை
எடுத்துரைக்குமாறு கேட்பாள்.
- செவிலிக்கு அன்புற உணர்த்தல்
தலைவி குடும்பம் நடத்தும் பாங்கை அறிய விரும்பி
செவிலித்தாய் தலைவியின் வீட்டுக்கு வருவாள். அங்ஙனம் வந்த
செவிலித்தாயைப் பாங்கி அன்பு மொழிகள் கூறி வரவேற்பாள்.
- வாழ்க்கை நன்று என்று கூறுதல்
தலைவியின் இல்லற வாழ்க்கையைக் காண வந்த செவிலித்
தாயிடம், தலைவியின் இல்லற வாழ்க்கை நலமுடன் செல்வதைப்
பாங்கி எடுத்துரைப்பாள்.
- செவிலி நற்றாய்க்கு உணர்த்தல்
தலைவியின் இல்லத்திற்குச் சென்று வந்த செவிலித்தாய்
தலைவியின் கற்புத் திறத்தை நற்றாய்க்கு உணர்த்துவாள்.
- வாழ்க்கைத் தன்மை உணர்த்தல்
தலைவியின் இல்லறப் பாங்கை நேரில் கண்டு மகிழ்ந்த
செவிலித்தாய் அப்பாங்கை நற்றாயிடம் எடுத்துக் கூறுவாள்.
- காதல் அறிவித்தல்
தலைவனும் தலைவியும் ஒருவர் மீது ஒருவர் மிக்க காதல்
(அன்பு) கொண்டு வாழ்கின்றனர் என்பதை செவிலித்தாய்
நற்றாயிடம் அறிவிப்பாள்.
இங்ஙனம் இல்வாழ்க்கை என்பது தலைவன் தலைவியர்
ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு செலுத்தி வாழும்
வாழ்க்கையாக அமைந்திருப்பதைக் காணலாம்.
மேற்காட்டியவற்றுள் எண் 1 தலைவன் மகிழ்ச்சிக்குரியது. எண்கள்
2, 3, 5, 6, 7 ஆகியவைப் பாங்கி மகிழ்ச்சிக்குரியன. எண் 4
தலைவி மகிழ்ச்சிக்குரியது. எண்கள் 8, 9, 10 ஆகியவை செவிலி
மகிழ்ச்சிக்குரியன.