தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.3 பிரிவு

  • 2.3 பிரிவு

    இல்வாழ்க்கையில் தலைவனும் தலைவியுமாய் சேர்ந்து
    மகிழ்வுடன் வாழ்ந்து வருவர். அவ்வாழ்க்கையில் காலப்போக்கில்
    தலைவன், தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டிய சூழலும்
    ஏற்படும். அவ்வாறு தலைவன் தலைவியை விட்டு விலகி வாழ்தல்
    பிரிவு எனப்படும். இப்பிரிவு ஏற்படுவதன் காரணத்தை
    அடியொட்டி ஆறு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அப்பிரிவுகள்
    பரத்தையர் பிரிவு, பிறபிரிவுகள் என்று இரண்டு தலைப்புகளில்
    விவரிக்கப்படுகின்றன.

    2.3.1 பரத்தையர்ப் பிரிவு

    பரத்தை என்பவள் பொதுமகள். பொருள் ஆசை கொண்டுப்
    பல ஆடவரைக் கூடுபவள். தலைவியுடன் இல்லற வாழ்வு நடத்தி
    வருகின்ற தலைவன் பரத்தையர் மீது ஆசை கொண்டுத்
    தலைவியைப் பிரிதல் உண்டு. இதனைப் பரத்தையர்ப் பிரிவு என்று
    நம்பி அகப்பொருள் கூறுகிறது. இப்பரத்தையர்ப் பிரிவு நான்கு
    வகைப்படும்.

    2.3.2 வாயில் வேண்டல்

    பரத்தையர் மீது நாட்டம் கொண்டுத் தலைவியைப் பிரிந்து
    சென்ற தலைவன் மீண்டும் தலைவியைக் காண்பதற்காக வீட்டுக்கு
    வருவான். தலைவன் சென்ற இடத்தை அறிந்து கொண்ட தலைவி
    அவனை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டாள். தன்னை வீட்டுக்குள்
    அமைதிக்குமாறு தலைவன் தலைவியிடம் பல காரணங்களைக்
    கூறி வற்புறுத்துவான். இதை வாயில் வேண்டல் என்பர்.

    2.3.3 வாயில் மறுத்தல்

    தலைவன் எவ்வளவு வற்புறுத்திக் கூறியும் தலைவி அவனை
    வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டாள். இதை வாயில் மறுத்தல்
    என்பர்.

    2.3.4 வாயில் நேர்வித்தல்

    தலைவனைத் தலைவி வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கின்ற
    நிலையில் பாங்கி முதலியோர் தலைவனிடம் அவன் செய்த
    தவறைச் சுட்டிக்காட்டி இது முறையற்றது என்று வற்புறுத்திக்
    கூறுவர். அவர்களிடம் தலைவன், நான் இனி இது போல செய்ய
    மாட்டேன் என்று உறுதி கூறுவான். அதனடிப்படையில்
    வாயில்களாக செயல்படும் பாங்கி முதலியோர் தலைவியிடம்
    தலைவனுக்கு ஆதரவாகப் பேசி அவனுக்கு வாயில்
    நேர்விப்பார்கள் (தலைவியோடு உடன்படுத்துவார்கள்). இது
    வாயில் நேர்வித்தல் எனப்படும்.

    2.3.5 வாயில் நேர்தல்

    பரத்தையர் மீது ஆசை கொண்டு தம்மைப் பிரிந்த தலைவன்
    மீது மிகுந்த கோபம் கொண்டிருந்த தலைவி, பாங்கி
    உள்ளிட்டோரின் வேண்டுகோளை ஏற்று தலைவனைத் தன்னுடன்
    சேர்த்துக் கொள்வாள். இதற்கு வாயில் நேர்தல் என்று பெயர்.

    1.
    கற்பிற்குரிய கிளவித் தொகை எத்தனை?
    2.
    இல்வாழ்க்கையின் விரி ------- வகைப்படும்.
    3.
    பரத்தை என்பவள் யார்?
    4.
    வாயில் மறுத்தல் என்றால் என்ன?
    5.
    தலைவியின் மகிழ்ச்சியே கிழத்தி மகிழ்ச்சி என்று
    அழைக்கப்படுகிறது - சரியா? தவறா?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:29:15(இந்திய நேரம்)