Primary tabs
-
1.5 தொகுப்புரை
இயல் இசை நாடகம் என்ற முக்கூறுகளைக் கொண்ட தமிழ் மொழியில் இசைத் தமிழும் ஒன்றாகும். தொன்மையும், சிறப்பும், நுட்பமும் கொண்டதாகும். இதன் இசையமைதி பல்கிப் பெருகியுள்ளது . இசைக் குறியீடுகள் உலக இசையோடு ஒருங்கிணைந்து செல்கின்றன.
இசை பண், தாளம் என்ற இருபகுதிகளைக் கொண்டுள்ளது. பண் காரணப் பெயராகும். சங்க இலக்கியங்களில் பண்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பண்சுமந்த பாடல்களாகத் தேவாரப்பாடல்கள் உள்ளன. மூவர் முதலிகளின் தேவாரப் பாடல்கள் பண்ணாங்க அமைதியிலும்வகுக்கப்பட்டுள்ளன.
தாளம் என்பது பாட்டின் நடையோட்டத்தை வரையறுக்கும் செய்கையாகும். பல பெயர்களால் இது அழைக்கப்படுகிறது. இவைகளில் தூக்கு என்பதும் ஒன்றாகும்.ஏழுவகையான தூக்குகள் உள்ளன.தாளத்தின் உயிர்நிலைகள் பத்து என்பதனை அறிகிறோம். தாள உறுப்புகள் தாளவேந்தர், தாளச் செல்வர் பற்றிய கருத்துகளும் விளக்கப்பட்டுள்ளன.
இசைக் கருவிகள் தோல், துளை,நரம்பு, கஞ்சக் கருவிகளாக வகைப்படும் திறனையும், பறை, குழல்,வீணைக் கருவிகளின் அமைப்பையும்இப்பாடப்பகுதி விளக்கியுள்ளது.
இந்நிலையில் அடுத்து வரும் இரண்டாவது பாடத்தில் மங்கல இசை பற்றிய செய்திகள் எடுத்துரைக்கப்படுகின்றன.