தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பண்

  •     

    1.2 பண்

        இசையைப் பண் என்ற பெயரால் குறிப்பிடுவர். பண் என்ற     சொல்லும்     காரணப்     பெயர்ச்சொல்லாகும். பண்ணுதல் என்ற தொழிலடியாகத் தோன்றிய பெயர்ச்சொல்லாகும்.

    • பெருந்தானம் எட்டு (தானம் = இடம்)

        பெருந்தானங்களைப் பேச்சுறுப்புகள் என்பர். இதனைப் பேச்சுத்தாளங்கள் என்றும்    கூறுவர்.     தொல்காப்பியர் பிறப்பியலில் இவ்வுறுப்புகள் எட்டு என்பர். இவற்றை இரண்டு வகையாகப் பிரிப்பர். 1. காற்றறை, 2. செயற்கருவி.

    1) காற்றறை     காற்றறை என்பது,     காற்றுத்தங்கி வெளிப்படும் உறுப்பாகும். தலை, மிடறு, நெஞ்சு என்பனவாகும். நெஞ்சு என்பது நுரையீரலையும், மிடறு என்பது கண்டத்தையும், தலை என்பது கண்டத்தின் மேல்பகுதியையும் குறிக்கும்.

    2) செயற்கருவி     செயற்கருவி ஐந்தாகும். பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் என்ற ஐந்து உறுப்புகளையும் செயற்கருவியாகக் கருதுவர். காற்றறையில் தங்கிய காற்றினால் இச்செயற் கருவிகள் தொழிற்படுதல் காரணமாக வெவ்வேறு வகையான ஒலிகள்     பிறக்கும்     என்பதனைத்     தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.இசை நூலார் இதனைப் பெருந்தானங்கள் எட்டு எனக் குறிப்பிடுவர்.

    • வினைகள் எட்டு

        பெருந்தானத்தால் தோற்றி வைக்கப்படும் ஒலி இசை ஒலிகள் ஆவதற்கு எட்டு விதமான வினைகள் செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. இவற்றைக் கிரியைகள் என்பர்.

        இவை எடுத்தல், படுத்தல், நலிதல் முதலிய எட்டு ஆகும்.     எழுப்பிய குரலை உயர்த்தி ஒலித்தல் எடுத்தலாகும்.     எழுப்பிய குரலைத் தாழ்த்தி ஒலித்தல் படுத்தலாகும்.     எழுப்பிய குரலைப் படிப்படியாகக் தாழ்ந்து ஒலித்தல் நலிதலாகும்.

        இவ்வாறு பெருந்தானம் எட்டானும், எட்டுவகைக் கிரியைகளாலும் பண்ணிப் படுத்தமையால் பண் எனப் பெயர் பெற்றது.

    • பண் வகை

        பண்களைப் பெரும்பண்,பண்ணியல்,திறம், திறத்திறம் என நான்கு வகையாகப் பகுப்பர். சுர அலகுகளின் அமைப்பில் ஏறு நிரலிலும் (ஆரோகணம்) இறங்கு நிரலிலும் (அவரோகணம்) ஏழு சுரங்கள் பெறுவதனைப் பண் என்றும், சம்பூர்ண இராகம் என்றும், மேள கர்த்தா ராகம் என்றும் கூறுவர்.

     1.2.1 சங்க இலக்கியங்களில் பண்கள்

        சங்க இலக்கியங்களில் பண்கள் பற்றிய குறிப்புகள் காணப் பெறுகின்றன. ஆம்பல் பண், காஞ்சிப் பண், குறிஞ்சிப் பண், நைவளம் போன்ற பண்களைப் பற்றிய குறிப்புகள் உள.

    • ஆம்பல்பண்

        ஆம்பல் என்பது ஒருவகைப் பண்ணாகும்.இப்பண்ணைப் பற்றிய செய்திகள் நற்றிணை (123 : 10), ஐங்குறுநூறு (215 : 3-5), குறிஞ்சிப்பாட்டு (221-222)ஆகிய பாடல்களில் காணப் பெறுகின்றன. கோவலர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கின்றனர்.     தட்டை,     தண்ணுமை    போன்ற இசைக்கருவிகளுடன்     மாலைக் காலத்தில் இசைத்து மகிழ்கின்றனர்.

    ஆம்பலங் குழலின் ஏங்கி          (நற்றிணை : 123: 10)
    • காஞ்சிப்பண்

        காஞ்சிப் பண் துயருறும் மக்களின் துயரம் போக்கப் பயன்படுத்தப்பட்டு்ள்ளது. விழுப்புண் பட்டவர்கள், பேய் பிடித்தவர்களின் வருத்தம் தீர இப்பண்ணினைப் பாடிய குறிப்பு, புறநானூறு 296-யில் காணப்பெறுகிறது.

    • குறிஞ்சிப் பண்

        மலையுறை    தெய்வங்களை மகிழ்விக்க, கூத்தரும் விறலியரும் குறிஞ்சிப் பண்ணைப் பாடியதாக மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.

    • நைவளம்

        நைவளம் எனும் பண்ணைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டு (146), சிறுபாணாற்றுப்படை (36-38), பரிபாடல் (18-20-21) வரிகளில் குறிப்புகள் உள. இப்பண் பகற்பொழுதில் இசைக்க வேண்டிய பண் என்றும், பாணன் யாழிசையுடன் பாடினான் என்றும், இப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. மேலும் குறிஞ்சி, செவ்வழி, பஞ்சுரம், படுமலை, பாலை, மருதம், விளரி என்ற பண்களைப்     பற்றிய குறிப்புகளும்     காணப்படுகின்றன. இப்பண்கள் இசைக்கும் காலம், நிலம், இப்பண்கள் தரும் உணர்வுகள் பற்றியும் தமிழர் இசை எனும் நூலில் ஏ.என். பெருமாள் குறிப்பிட்டுள்ளார். (ப.79) அவை வருமாறு.

        

    வ. எண்
    பண்
    காலம்
    நிலம்
    உணர்வு
    1.
    ஆம்பல்
    மாலை, முன்னிரவு
    முல்லை
    ஏக்கம்
    2.
    காஞ்சி
    ----
    ----
    துன்பம்
    3.
    காமரம்
    ----
    மருதம்
    இன்பம்
    4.
    குறிஞ்சி
    நள்ளிரவு
    குறிஞ்சி
    அச்சம்
    5.
    செவ்வழி
    மாலை
    முல்லை, நெய்தல்
    இரக்கம்
    6.
    நைவளம்
    பகல்
    ----
    இன்பம்
    7.
    பஞ்சுரம்
    ----
    பாலை
    அச்சம்
    8.
    படுமலை
    ----
    ----
    இன்பம்
    9.
    பாலை
    நண்பகல்
    பாலை
    இன்பம்
    10.
    மருதம்
    காலை
    மருதம்
    இன்பம்
    11.
    விளரி
    ----
    நெய்தல்
    ஏக்கம்
    1.2.2 தேவாரப் பண்கள்

        பக்தி இலக்கியங்களான தேவாரப் பாடல்கள் பண் சுமந்த பாக்களாக உள்ளன.தெய்வம் சுட்டிய வாரப் பாடல் தேவாரம் என்றழைக்கப்படுகிறது. இதனைத் தேவபாணி எனவும் கூறுவர். இறைவனைத் தேவாரத்தேவர் என்றும், தேவாரப் பாடல் பாடுவதனைத் திருப்பதியம் விண்ணப்பித்தல் என்றும், தேவாரம் பாடுபவரை பிடாரர், ஓதுவார் என்றும்    கூறுவர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய பாடல்களைப் பொதுவாகத் தேவாரம் என்றழைப்பர்.இவைகள் பண் சுமந்த பாடல்கள் ஆகும்.

    • திருஞானசம்பந்தர் தேவாரம்

        திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களைத் திருமுறையாக வகுத்தவர்கள் பண் அடிப்படையில் முதல் மூன்று திருமுறைகளாக வகுத்தனர். இவை பின்வருமாறு :

    திருஞான சம்பந்தர் பாடல்களில் பண்கள்
    வ. எண்
    பண்கள்
    மொத்த பதிகம்
    பதிக எண்கள்
    முதல் திருமுறை
    இரண்டாம் திருமுறை
    மூன்றாம் திருமுறை
    1.
    நட்டபாடை
    1-22
    22
    ---
    ---
    2.
    தக்கராகம்
    23-46
    24
    ---
    ---
    3.
    பழந்தக்க ராகம்
    47-62
    16
    ---
    ---
    4.
    தக்கேசி
    63-74
    12
    ---
    ---
    5.
    குறிஞ்சி
    75-103
    29
    ---
    ---
    6.
    வியாழக் குறிஞ்சி
    104-128
    25
    ---
    ---
    7.
    மேகராகக் குறிஞ்சி யாழ்முரி
    129-135 136
    7 1
    ---
    ---
    8.
    இந்தளம்
    1-39
    ---
    39
    ---
    9.
    சீகாமரம்
    40-53
    ---
    14
    ---
    10.
    காந்தாரம்
    54-82
    ---
    29
    ---
    11.
    பியந்தைக் காந்தாரம்
    83-96
    ---
    14
    ---
    12.
    நட்டராகம்
    97-112
    ------
    16
    ---
    13.
    செவ்வழி
    113-122
    ---
    10
    ---
    14
    காந்தார பஞ்சமம்
    1-24
    ---
    ---
    24
    15.
    கொல்லி
    25-41
    ---
    ---
    17
    16.
    கொல்லிக் கௌவாணம்
    42
    ---
    ---
    1
    17.
    கௌசிகம்
    43-56 117
    ---
    ---
    15
    18.
    பஞ்சமம்
    57-66
    ---
    ---
    10
    19.
    சாதாரி
    67-99
    ---
    ---
    33
    20.
    பழம் பஞ்சுரம்
    100-116
    ---
    ---
    17
    21.
    புறநீர்மை
    118-123
    ---
    ---
    6
    22.
    அந்தாளிக் குறிஞ்சி
    124-125
    ---
    ---
    2
    ---
    ஆக
    ---
    136
    122
    125

         திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பண் அடிப்படையில் பகுக்கப்பட்டிருப்பதனை இப்பட்டியல் சுட்டுகிறது. இக்காலத்திலும் இப்பண்ணமைவோடே பாடப் பெறுகின்றன. பண்களைப் பற்றித் தேவாரப் பாடல்களில் பல செய்திகள் காணப்படுகின்றன. சம்பந்தர் இறைவனைப் பண்ணிலாவும் மறை பாடலினால் (2.3.1) என்று குறிப்பிடுகிறார். தமது பாடல்களைப்‘பண்ணோடு இசைப்பாடிய பத்தும்’ என்று குறிப்பிடுகிறார்.பண்ணுடைய பாடல் நன்று என்றும், அத்தகைய பாடல் தவழும் ஊர் நல்ல ஊர் என்றும், இத்தகைய இசை வல்லவர்களைப் பண்ணார் என்றும், பண்ணினைப் பாடி ஆடினால் இறையருளை எளிதில் பெறமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

        தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றான திருவீழிமிழலைப் பதிகத்தில் பண்பற்றியும், பண்ணிசை பற்றியும் பண்மூலம் எழும் பல்வேறு ஓசை பற்றியும், அப்பண்ணின் மூலம் எழும் சுவை பற்றியும்,அவைகளின்ஊடே அமையும் தாள ஒலி பற்றியும் குறிப்பிடுகிறார்.

    பண்ணும்பத மேழும்பல வோசைத் தமிழவையும் உண்ணின்றதொர் சுவையுமுறு தாளத்தொலி பலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானானிடம் வீழிம் மிழலையே
    (பண் : நட்டபாடை, திருஞானசம்பந்தர்)
    • திருநாவுக்கரசர் தேவாரம்

        திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களை நான்கு, ஐந்து,ஆறு திருமுறைகளாக வகுத்துள்ளனர். நான்காம் திருமுறை பண் அடிப்படையிலும், ஐந்து,    ஆறு திருமுறைகள்    யாப்பு அடிப்படையிலும் பெயரிடப் பெற்றுள்ளன. நாவுக்கரசர் பாடியவைகளில் பத்துப் பண்கள் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு :

    திருநாவுக்கரசர் பாடல்களில் பண்கள
    வ.எண்
    பண்
    திருப்பதிகங்கள்
    மொத்தம்
    1.
    கொல்லி
    திருப்பதிகம் திருநேரிசை 22 முதல் 79 வரை 58 திருவிருத்தம் 80 முதல் 113 வரை 34
    93
    2.
    காந்தாரம்
    2 முதல் 7 வரை
    6
    3.
    பியந்தைக் காந்தாரம்
    8
    1
    4.
    சாதாரி
    9
    1
    5.
    காந்தார பஞ்சமம்
    10-11
    1
    6.
    பழந்தக்க ாகம்
    12-13
    2
    7.
    பழம் பஞ்சுரம்
    14-15
    2
    8.
    இந்தளம்
    16-18
    3
    9.
    சீகாமரம்
    19-20
    2
    10.
    குறிஞ்சி
    21
    1
    ---
    ஆக
    ---
    113

        “தமிழோடு இசைபாடல் மறந்தறி” யாத திருநாவுக்கரசர் பாடிய பண்களில் பத்து நமக்குக் கிடைத்துள்ளன. இதில் முதல் பண்ணாகக் கொல்லிப் பண் அமைந்துள்ளது.

        ‘கூற்றாயின வாறு விலக்கலீர்,’ எனும் பதிகம்கொல்லிப் பண்ணினால்     அமைந்தது. கொல்லிப்பண் பகைமையைக் கொல்லும் பண் ஆகும். தேவாரத்தில் அதிகமான பதிகங்களில் இப்பண் பயன்படுத்தப் பெறுகின்றது. இறைவன் இப்பண்ணை விரும்பி ஏற்பான் என்பதை, ‘கொல்லியாம் பண்ணுகந்தார் குறுக்கை வீரட்டனாரே’ என்று நாவுக்கரசர் போற்றுகிறார்.

    • சுந்தரர் தேவாரம்

        சுந்தரர் பாடிய பாடல்களைத் திருப்பாட்டு என்பர். இதனையும் தேவாரம் என்ற பெயரால் அழைப்பர். இவர் பாடிய பாடல்கள் பண் சுமந்த பாடல்கள் ஆகும். இவர் பாடிய பதிகங்களில் 100 கிடைத்துள. இவை பதினேழு பண்களில் அமைந்துள.

    சுந்தரர் பாடல்களில் பண்கள்
    வ. எண்
    பண்
    பதி
    பதிக எண்கள்
        1.
    இந்தளம்
    12
    1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12
    2.
    காந்தாரபஞ்சமம்
    1
    77
    3.
    காந்தாரம்
    5
    71, 72, 73, 74, 75
    4.
    குறிஞ்சி
    4
    90, 91, 92, 93
    5.
    கொல்லி
    7
    31, 32, 33, 34, 35, 36, 37
    6.
    கொல்லிக் கௌவாணம்
    9
    38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46
    7.
    கௌசிகம்
    1
    94
    8.
    சீகாமரம்
    4
    86, 87, 88, 89
    9.
    செந்துருத்தி
    1
    95
    10.
    தக்கராகம்
    4
    13, 14, 15, 16
    11.
    தக்கேசி
    17
    54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70
    12.
    நட்டபாடை
    5
    78, 79, 80, 81, 82,
    13.
    நட்டராகம்
    14
    17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30
    14.
    பஞ்சமம்
    7
    96, 97, 98, 99, 100
    15
    பழம்பஞ்சுரம்
    7
    47, 48, 49, 50, 51, 52, 53
    16
    பியந்தைக் காந்தாரம்
    1
    76
    17
    புறநீர்மை
    3
    83, 84, 85

    சுந்தரர் பாடிய     பண்களில் செந்துருத்திப் பண் மிகவும் சிறப்பானதொரு     பண்ணாகும்.     இப்பண்ணை ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும்     பாடவில்லை. மீளா அடிமை என்று தொடங்கும் பாடலில் (பதி-95) இப்பண் இடம் பெறுகிறது. இது ஒரு மங்கலகரமான பண்ணாகும். அரங்கிசை இறுதியில் இப்பண் இசைக்கும் மரபு இருந்துள்ளது.

        தேவாரப் பண் இந்தியத் திருநாடு முழுவதும், போற்றப் பெற்றது. தஞ்சையில் இராசராசசோழன் தஞ்சைப் பெரிய கோயிலில் தேவாரம் விண்ணப்பிக்கச் செய்தமையைக் கல்வெட்டு மூலம் அறிகிறோம்.

     

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    இசை என்ற சொல் தரும் பொருள்களில் நான்கினைக் குறிப்பிடுக.
    2.
    இசைக் கற்றூண்கள் எங்கு உள்ளன?
    3.
    பண்களை எப்படிப் பிரித்துரைப்பர்?
    4.
    தேவாரம் பாடுபவர்களை எவ்வெப் பெயர்களால் அழைப்பர்?
    5.
    பேச்சுறுப்புக்கள் யாவை?
    6.
    திருநாவுக்கரசர் பாடல்களில் இடம் பெற்றுள்ள பண்கள் எத்தனை?
    7.
    சுந்தரர் மட்டும் பாடிய தேவாரப் பண் எது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:48:03(இந்திய நேரம்)