Primary tabs
-
4.5 தொகுப்புரை
சிலப்பதிகாரத்தை உ.வே. சாமிநாைதயர் வெளியிட்ட பின்பு இசைத் தமிழ் ஆய்வு தொடங்கப்பட்டது. தமிழிசை வளம், சிறப்பு, நுட்பம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தஞ்சை ராவ் பகதூர் மு.ஆபிரகாம் பண்டிதர் இவ்வகை ஆய்வை முதலில் மேற்கொண்டார். இசைத் தமிழ் ஆய்வின் தலைமகன் எனப் போற்றப்படுகிறார். இசைத் தமிழ் ஆய்வு மாநாடுகள் நடத்தி அவைகளையெல்லாம் தொகுத்தும் ஆய்ந்தும் கருணாமிர்த சாகரம் என்ற நூலையும், இசைப் பயிற்சிக்குரிய பாடநூல்கள் தமிழில் இல்லாத குறையை நீக்கக் கருணாமிர்த சாகரத் திரட்டு என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். மதுரை நாதசுர விற்பன்னர் பொன்னுச்சாமி .சிலப்பதிகாரத்தின் வாயிலாகத் தெரிந்த செய்திகளை அறிந்த இவர் தமிழிசையில் தாய் இராகங்கள் 22 அல்ல 24 என்பதனை வெளியிட்டார். தமிழர் கண்டுணர்ந்த தனிப்பெரும் இசைக்கருவியான யாழ், கருவியாக மட்டுமல்லாமல் தமிழர் பண்பாட்டின் சின்னமாகவும், தமிழிசை வளம் உரைக்கும் கருவியாகவும் விளங்குவதனை,சிலம்பின் காதையில் யாழ் நூலாசிரியர் அமைதியிற் கூறிய செய்திகள் அடிப்படையில் விபுலானந்த அடிகளார் யாழ் நூல் வெளியிட்டார்.
இசைத் தமிழ் வளத்தைத் தமிழகமெங்கும் பரப்பிய குடந்தை ப.சுந்தரேசன், கு.கோதண்டபாணி , பேராசிரியர் க.வெள்ளை வாரணனார், பேராசிரியர் தனபாண்டியன், பேராசிரியர் வீ.ப.கா.சுந்தரம் ஆகியோர் சிறந்த ஆய்வு நூற்களையும், வரலாற்று நூற்களையும், தமிழிசைக் கலைக் களஞ்சியங்களையும் வெளியிட்டு இசைத் தமிழ் ஆய்வை வளப்படுத்தினர். இவர்களின் ஆய்வுப் போக்கால் இசைத்தமிழ் ஆய்வு இன்று பெருகி வளர்வதோடு எங்கும் தமிழிசை என்ற நிலைமை மேம்பட்டு வருகிறது. தமிழிசை ஆய்வால் தமிழிசை வளத்தை உலகறியும் வாய்ப்பு ஏற்பட்டு வருகிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II