Primary tabs
-
2.0 பாட முன்னுரை
தகவலைத் தேடியலைந்த காலம் முற்றிலுமாய் மாறிவிட்டது. இன்றைய தகவல் யுகத்தில் தேவைக்கும் அதிகமாகவே தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றின் பயன் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டுமெனில் அவை முறைப்படி ஒழுங்கமைக்கப்பட வேண்டும். தகவலை நுகர்வோர் பெருமுயற்சி ஏதுமின்ற மிக இலகுவாகத் தங்களுக்குத் தேவையான தகவலைத் தேடிப்பெறுமாறு அவை ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
ஒரு பெரிய சிறப்பங்காடிக்குள் நுழைகிறீர்கள். உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்களாகவேதான் தேடியெடுக்க வேண்டும். பொருட்கள் வகைவாரியாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தால்தான் நீங்கள் சிரமமின்றி எடுத்துக் கொள்ளமுடியும். ஒட்டுமொத்தமாய் குவிக்கப்பட்டிருந்தால் தேவையான பொருளைத் தேடி எடுக்க முடியுமா?
நூலகத்துக்குச் செல்கிறோம். அலமாரிகளில் அரசியல், பொருளாதாரம், அறிவியல் இலக்கியமெனப் பொருள்வாரியாக நூல்கள் அடுக்கிவைக்கப் பட்டுள்ளன. எந்த வகைப்பிரிவும் இல்லாமல் ஒட்டுமொத்தமாய் அடுக்கப் பட்டிருப்பின் எவரும் நூலகத்தைப் பயன்படுத்த முடியாமல் போகும்.
காலையில் எழுந்ததும் செய்தித் தாளைப் பிரிக்கிறோம். விளையாட்டுச் செய்திகளைப் படிக்க நினைக்கிறோம். அவை எந்தப் பக்கததில் இடம்பெற்றருக்கும் என்று நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்தந்தப் பக்கத்தில் இன்னின்ன செய்திகள்தாம் இடம்பெற வேண்டும் எனத் திட்டமிட்டுச் செய்தித் தாளை வடிவமைக்க வேண்டும். அந்த வடிவமைப்பைத் தொடர்ந்து பின்பற்றி வரவேண்டும். இல்லையேல் இருபதுக்கும் மேற்பட்ட பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டி நமக்கு வேண்டிய செய்தியைத் தேடிப் படிக்க வேண்டியிருக்கும். அப்படியிருப்பின் அத்தகு செய்தித்தாளை எவரும் விரும்பார்.
ஆக, தகவலை நுகர்வோர் அதன் பயனை எளிதில் துய்க்க வேண்டுமெனில், நுகர்வோருக்குப் புரியும் வகையில் குறிப்பிட்ட கட்டமைப்பில் தகவலை முறைப்படுத்தி ஒழுங்கமைத்து வழங்க வேண்டியது இன்றயமையாத தேவையாகும்.
தகவல் கட்டுமானம் என்பதன் பொருள்விளக்கத்தையும், தகவல் கட்டுமானத்தின் தேவை பற்றியும், தகவல் கட்டுமானியின் கடமை பற்றியும், தகவல் வெளியீட்டு அமைப்புகள், தகவல் கட்டமைப்புகள் மற்றும் தகவல் ஒழுங்கமைப்பு முறைகள் பற்றியும், வலையக வடிவாக்கத்தில் தகவல் கட்டுமானத்தின் முக்கியத்துவம் பற்றியும் இப்பாடத்தில் காண்போம்.