தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- தகவல் ஒழுங்கமைப்பு

  • 2.3 தகவல் ஒழுங்கமைப்பு (Organization of Information)

    சிதறிக் கிடக்கும் தகவல்களை ஒன்றுதிரட்டி அவற்றை முறையாக ஒழுங்கமைக்கும் போதுதான் பயனாளருக்கு அவற்றின் உண்மையான பயன் முழுமையாகப் போய்ச் சேருகிறது. தகவல் திரட்டின் தன்மைக்கேற்ப தகவல் ஒழுங்கமைப்பு முறை மாறுபடுகிறது. செய்தித்தாள், புத்தகம், நூலகம், வலையகம் எனத் தகவல் திரட்டு அமைப்புகள் பல உள்ளன. தகவலைத் தேடிப் பெறுவோர் நாடும் தகவல் திரட்டு அமைப்புகள் சிலவற்றையும் அவற்றில் பின்பற்றப்படும் தகவல் ஒழுங்கமைப்பு முறைகள் பற்றியும் இப்பாடப் பிரிவில் காண்போம்.

    2.3.1 தகவல் திரட்டு அமைப்புகள்

    தகவல் பெற விரும்புவோர் பெரும்பாலும் நாடுவது நூல்களை. ஒரு சொல்லுக்குப் பொருள் தேடலாம். ஒரு பொருளுக்கு விளக்கம் தேடலாம். ஒரு கருத்துரு (Concept) பற்றித் தெளிவுபெற விழையலாம். ஒரு நாட்டைப் பற்றி, நாட்டு மக்களைப்பற்றி அறிய விரும்பலாம். இத்தகைய தகவல் தேடுவோர்க்கு உதவும் தகவல் திரட்டு அமைப்புகளில் மிகவும் முக்கியமானவை:

    (அ)
    அகராதிகள் (Dictionaries)
    (ஆ)
    கலைக்களஞ்சியங்கள் (Encyclopedias)
    (இ)
    புவியியல்-வரலாற்று நூல்கள்

    இவற்றின் தகவல் ஒழுங்கமைப்பில் தகவல் கட்டுமானத்தின் எளிய நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அகராதிகளில் சொற்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப் பட்டுள்ளன? வேறுபாடிண்றி அனைத்து அகராதிகளிலும் சொற்கள் அகர வரிசையிலேயே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. காரணம் அத்தகு ஒழுங்கமைப்பே பயனாளர் தேடுவதற்கு எளிமையானதாகும். கலைக் களஞ்சியங்கள் பல வகைப்படும். ஒவ்வொன்றிலும் அவற்றின் தன்மைக்கேற்ற தகவல் ஒழுங்கமைப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. புவியியல் தகவல்கள் இட அமைப்பு அடிப்படையிலும், வரலாற்றுத் தகவல்கள் கால அடிப்படையிலும் ஒழுங்கமைக்கப் படுகின்றன.

    அடுத்து, தகவல் திரட்டு அமைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை:

    (அ)
    நூலகம்
    (ஆ)
    வலையகம்

    நூல்களெல்லாம் திரட்டி வைக்கப்பட்டுள்ள நூலகம் ஒரு முக்கியமான தகவல் திரட்டு அமைப்பாக விளங்குகிறது. நூலகத்தில் நூல்கள் கருப்பொருள் அடிப்படையில் வகைவாரியாக அடுக்கி வைக்கப்படுகின்றன. உர்மனுக்கு முன்பே தகவல் கட்டுமானத்தின் நுட்பங்களைப் பெருமளவு நடைமுறைப் படுத்தியவர்கள் நூலகர்கள் எனில் மிகையாகாது.

    தகவல் வழங்கும் தளமாக இன்றைக்கு இணையம் முன்னணி இடம் வகிக்கிறது. அனைத்து வகைத் தகவல்களையும் அள்ள அள்ளக் குறையாமல் அள்ளித்தரும் அட்சய பத்திரமாக இணையம் விளங்குகிறது. இணையத்தில் வலையகங்களில் தகவல்கள் திரட்டி வைக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் தத்தம் வலையகங்களில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தகவல்களை ஒழுங்கமைத்து வெளியிடுகின்றன. வலையகங்களில் பின்பற்றப்படும் தகவல் ஒழுங்கமைப்பு முறை மிகவும் நுட்பமானது. இணையத்தின் தகவல் தளங்களான வலையகம் பற்றியும் அவற்றின் தகவல் ஒழுங்கமைப்பு பற்றியும் தனியான பாடப்பிரிவில் காண்போம்.

    பல்வேறு தகவல் திரட்டு அமைப்புகளில் பின்பற்றப்படும் பொதுவான தகவல் ஒழுங்கமைப்பு முறைகள் பற்றி இனிக் காண்போம்.

    2.3.2 தகவல் ஒழுங்கமைப்பு முறைகள்

    அகராதியாயினும் கலைக்களஞ்சியமாயினும் வேறெந்தத் தகவல் திரட்டாயினும் ஒரு தகவலை மிக எளிதாய்த் தேடிக் கண்டறியும் வகையிலேயே அவற்றில் தகவல்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. சரியான தகவல் ஒழுங்கமைப்பு முறை பின்பற்றப்பட வில்லையெனில் தகவலைத் தேடியறிதல் எளிதாக இருக்காது. பொதுவாக, தகவல் ஒழுங்கமைப்பு முறைகளை ஐந்தாக வகைப்படுத்தலாம் என உர்மன் கருதுகிறார். கீழ்க்காணும் ஐந்தினுள் எதேனும் ஒன்றின் அடிப்படையிலேயே தகவல்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பது அவர் கருத்து:

    (1)
    இடம் (Location)
    (2)
    அகரவரிசை (Alphabet)
    (3)
    காலம் (Time)
    (4)
    வகைப்பாடு (Category)
    (5)
    அடுக்கு வரிசை (Hierarchy)

    உலக நாடுகளைப் பற்றிய தகவல் தொகுப்பு எனில் முதலில் கண்டங்களின் அடிப்படையிலும் (Location) பின் ஒவ்வொரு கண்டத்திலுமுள்ள நாடுகளின் அடிப்படையிலும் தகவல்கள் ஒழுங்கமைக்கப்படலாம். நாடுகள் பெயர்களின் அகர வரிசைப்படி (Alphabet) தொகுக்கப்படலாம். கண்டங்கள் அடிப்படையில் இல்லாமல் ஒட்டு மொத்தமாய் நாடுகள் அனைத்தும் அகர வரிசையில் தொகுக்கப்படுதல் இன்னொரு ஒழுங்கமைப்பு முறையாகும்.

    முன்பே கூறியபடி அகராதிகள் அனைத்துமே அகரவரிசைப்படியே (Alphabet) ஒழுங்கமைக்கப்படுகின்றன. கலைக்களஞ்சியங்களில் பெருந்தலைப்புகள் வகைப்பாட்டின் (Category) அடிப்படையிலும், உட்தலைப்புகள் அகர வரிசையிலும் ஒழுங்கமைக்கப்படுதல் இயல்பு. வரலாற்று நூல்களிலும் வாழ்க்கை வரலாறுகளிலும் தகவல்கள் கால (Time) அடிப்படையில் ஒழுங்கமைக்கப்படுகின்றன.

    நூலகங்களில் நூல்களின் ஒழுங்கமைப்பு வகைப்பாட்டின்(Category) அடிப்படையில் அமைகிறது. புத்தகக் கடைகளிலும் இம்முறையே பின்பற்றப்படுகிறது. மிகப்பெரிய சிறப்பங்காடிகளில் பொருட்கள் வகைவாரியாக அடுக்கி வைக்கப்படுகின்றன. அப்போதுதான் வடிக்கையாளர்கள் தாமக்கு வேண்டிய பொருட்களைத் தாமாகவே தேடி எடுத்துக்கொள்ள முடிகிறது. தகவல் ஒழுங்கமைப்பிலும் தகவல் தேடுவோர் தாமாகவே குழப்பமின்றி எளிய முறையில் தகவலைத் தேடிப் பெறுமாறு அமைய வேண்டும் என்பதே தகவல் கட்டுமானத்தின் மிக முக்கிய கோட்பாடாகும்.

    பள்ளி மாணவர்களின் மதிப்பெண்கள், தேர்வு முடிவுகள் மற்றும் பிற தகவல்கள் வகுப்பு வாரியாக ஒழுங்கமைக்கப்படுகின்றன. சிறிய வகுப்பு தொடங்கிப் பெரிய வகுப்பு வரையிலோ பெரிய வகுப்பு தொடங்கிச் சிறிய வகுப்பு முடியவோ தகவல்கள் ஒழுங்கமைக்கப்படுவதுண்டு. இத்தகைய ஒழுங்கமைப்பு முறை அடுக்கு வரிசை (Hierarchy) முறை எனப்படுகிறது. நாடுகளின் தகவல்கள் மக்கள்தொகை, இடப் பரப்பளவு, தனிநபர் வருமானம் அல்லது எழுத்தறிவு அடிப்படையில் தொகுக்கப்படுமாயின் அது இந்த ஒழுங்கமைப்பு முறையையே சாரும்.

    இவற்றுள் எது சிறந்த முறை? எதன் அடிப்படையில் தகவல் ஒழுங்கமைப்பு முறையைத் தேர்ந்தெடுப்பது? ஒரு தகவல் தொகுப்பில் பயனாளர் இயல்பாக எந்த முறையில் தேட முனைவார் என்பதைக் கருத்தில் கொண்டு தகவல் ஒழுங்கமைப்பு முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    2.3.3 திட்டமுறைகளும் கட்டமைவுகளும் (Schemes and Structures)

    ஒழுங்கமைப்பு முறைகள் (Organizational Systems) ஒழுங்கமைப்புத் திட்டமுறைகளை யும் (Organizational Schemes) ஒழுங்கமைப்புக் கட்டமைவுகளையும் (Organizational Structures) உள்ளடக்கியதாகும். ரோசன்ஃபெல்டும், மார்வல்லியும் இவைபற்றித் தெளிவாக விளக்கியுள்ளனர். திட்டமுறை (Scheme) என்பது தகவல் தொகுப்பின் உள்ளடக்க விவரங்களுக்கு இடையேயான பொதுவான பண்பியல்புகளை (shared characteristics of content items) வரையறுக்கிறது. அவையே விவரங்களின் தருக்கரீதியான வகைப்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. கட்டமைவு (Structure) என்பது உள்ளடக்க விவரங்களுக்¢கு இடையேயான உறவுநிலைகளின் வகைகளை (types of relationships between content items) வரையறுக்கிறது.

    ஒழுங்கமைப்புத் திட்டமுறைகள்:

    ஒழுங்கமைப்புத் திட்டமுறைகளை இரண்டாக வகைப்படுத்தலாம்:

    (அ)
    துல்லியமானவை (Exact)
    (ஆ)
    துல்லியமற்றவை (Ambiguous)

    துல்லியமான ஒழுங்கமைப்புத் திட்டமுறை தகவல்களை நன்கு வரையறுக்கப்பட்ட (well defined) ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத (mutually exclusive) பிரிவுகளாகப் பிரிக்கிறது. அகரவரிசை, காலவரிசை மற்றும் புவியிடம் அடிப்படையில் தகவல்கள் ஒழுங்கமைக்கப்படுவதை துல்லியத் திட்டமுறைக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

    சில வேளைகளில் தகவல்களை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பிரிவுகளாகப் பிரிக்க முடியாமல் போகலாம். ஒரு பிரிவிலுள்ள சில தகவல்கள் வேறு பிரிவுகளிலும் இடம்பெறலாம். கருப்பொருள் அடிப்படையில் தொகுக்கப்படும் தகவல்களை எடுத்துக் கொள்வோம். இருவேறு கருப்பொருள்களுக்கு இடையே சில பொதுவான தகவல்கள் இருக்க முடியும். அவற்றை இரு பிரிவுகளிலும் சேர்க்க வேண்டும். மின்னியல், மின்னணுவியல், கணிப்பொறியியல், தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் இவற்றை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துறைகளாகக் கருத முடியுமா? இத்தகைய தகவல் ஒழுங்கமைப்புத் திட்டமுறைகளைத் துல்லியமற்ற வகையில் சேர்க்கலாம்.

    ஒன்றுக்கு மேற்பட்ட திட்டமுறைகள் கலந்த ‘கலப்புத் திட்டமுறையும்’ (Hybrid Scheme) சாத்தியமே. ஆனால் அப்படிப்பட்ட திட்டமுறை பயனாளர்களைக் குழப்பவே செய்யும். குறிப்பிட்ட தகவல் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் இங்கும் அங்கும் தேடி நேரத்தை வீணாக்க வேண்டியிருக்கும். இன்றைக்குப் பல வலையகங்களில் இப்படிப்பட்ட குழப்பமான ஒழுங்கமைப்பே நிலவுகிறது என ரோசன்ஃபெல்டும், மார்வல்லியும் குறிப்பிடுகின்றனர்.

    ஒழுங்கமைப்புக் கட்டமைவுகள்:

    ஒழுங்கமைப்புக் கட்டமைவுகள் பல்வகைப்படும். அவற்றுள் முக்கியமானவை:

    (1)
    அடுக்கு வரிசைகள் (Hierarchies)
    (2)
    பிணையங்கள் (Networks)
    (3)
    தரவுத்தளம் சார்ந்த மாதிரியங்கள் (Database-oriented Models)

    உலக அறிவுக் களஞ்சியம் முழுவதையும் வகைப்பாடுகளாகவும் ஒவ்வொரு வகைப்பாட்டையும் பல உள்-வகைப்பாடுகளாகவும், ஒவ்வொரு உள்-வகைப்பாட்டையும் மேலும் பல உள்-வகைப்பாடுகளாகவும் பிரித்து ஒழுங்கமைக்கும் முறையே ‘அடுக்குமுறைக் கட்டமைவு’ எனப்படும்.

    பிணையம் என்பது பல கணுக்களைக் (Nodes) கொண்டது. கணுக்கள் தொடுப்புகளால் (Links) பிணக்கப்பட்டிருக்கும். பிணையக் கட்டமைவுக்குச் சரியான எடுத்துக்காட்டு இணையம் (Internet) ஆகும். இணையத்திலுள்ள வலையகங்களும் வலைப் பக்கங்களும் கணுக்களாகும். மீத்தொடுப்புகள் (Hyper Links) அவற்றை இணைக்கும் பாதைகளாகும். வலையகம், வலைப்பக்கம், மீத்தொடுப்புகள் பற்றி அடுத்த பாடப் பிரிவில் விரிவாகப் படிக்க இருக்கிறோம்.

    தரவுத்தளம் என்பது ஏராளமான தகவல் துணுக்குகளைக் கொண்டது. தகவல் துணுக்குகளைத் ‘தரவு’ (Data) என்கிறோம். தரவுகள், புலங்களில் (Fields) சேமிக்கப்படுகின்றன. தொடர்புடைய புலங்களின் தொகுப்பு ‘ஏடு’ (Record) எனப்படும். தொடர்புடைய ஏடுகளின் தொகுப்பு ‘அட்டவணை’ (Table) ஆகும். தொடர்புடைய அட்டவணைகளின் தொகுப்பு ‘தரவுத்தளம்’ (Database) எனப்படும். உலகத்து நிறுவனங்கள் அனைத்தும் அவற்றின் தகவல்களை தரவுத்தளங்களிலேயே சேமித்து வைத்துள்ளன. எத்தகைய சிக்கலான தகவல் குறிப்பையும் மிக எளிதான கட்டளை மூலம் தேவையானபோது மீட்டெடுத்துக்கொள்ள முடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:45:43(இந்திய நேரம்)