Primary tabs
4.5 முறைமைப் பொருள் கூறுகள் (System Components)
கணினி செயல்படுவதற்குரிய முக்கியமான உறுப்புகள் முறைமைப் பெட்டியின் (System Box) உள்ளே பொருத்தப்பட்டுள்ளன. மையச் செயலகம் (Central Processing Unit - CPU) என்பது இந்தப் பெட்டியின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள முதன்மையான பாகம். எனினும், இந்தப் பெட்டியையே ‘சிபீயூ’ (CPU) எனப் பலரும் அழைக்கின்றனர். முறைமைப் பெட்டியின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள கணினியின் பல்வேறு வன்பொருள் உறுப்புகளைக் காண்போம்.
4.5.1 தாய்ப் பலகை (Mother Board)
கணினியின் உறுப்புகளிலேயே உயிர் நாடியான உறுப்பு இது. பல்வேறு மின்னணுப் பொருள்கூறுகள் (Components) ஒரு பலகையில் பொருந்தப்பட்டு பாட்டை (Bus) எனப்படும் மின் இணைப்புத் தொகுதிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தாய்ப் பலகையில் பொருத்தப்பட்டுள்ள உறுப்புகளிலேயே முக்கியமானது நுண்செயலி (Micro Processor) ஆகும். நுண்செயலி செயல்படுவதற்குத் துணைபுரியும் பிற சார்புச் சில்லுகளும் பொருத்தப்பட்டிருக்கும். உள்ளீடு, வெளியீடுகளுக்குத் துணைநிற்கும் ‘பயாஸ்’ (BIOS) சில்லு தாய்ப் பலகையோடு இணைந்திருக்கும். இவை தவிர, பிற சில்லுகளையும், மின்னணு அட்டைகளையும் செருகுவதற்கு ஏற்ற விரிவாக்கச் செருகுவாய்கள் (Expansion Slots) தாய்ப்பலகையில் பிணைக்கப்பட்டிருக்கும். ரேம் (RAM) நினைவகச் சில்லுகள் இத்தகைய செருகுவாய்களில் பொருத்தப் பட்டிருக்கும். சில கணினிகளில் ஒலி அட்டை (Sound Card). வரைகலைத் தகவி அட்டை (Graphics Adapter Card), இணக்கி அட்டை (Modem Card), பிணைய இடைமுக அட்டை (Network Interface Card), தொலைக்காட்சி அலைவாங்கி அட்டை (TV Tuner Card) போன்ற அட்டைகள் இந்த விரிவாக்கச் செருகுவாய்களில் பொருத்தப் பட்டிருக்கலாம். உள்ளீட்ட / வெளியீட்டுச் சாதனங்களைக் கணினியில் இணைப்பதற்கான துறைகள் (Ports) தாய்ப்பலகையில் பொருத்தப்பட்டிருக்கும்.
4.5.2 நுண்செயலி ( Microprocessor)
நுண்செயலி என்பது கட்டுப்பாட்டகம் (Control Unit - CU) கணக்கீட்டுத் தடுக்ககம் (Arithmatic Logic Unit - SLU), இடைமாற்று நினைவகம் (Cache Memory), பதிவகங்கள் (Registers) ஆகியவை ஒருங்கிணைந்த ஒற்றைச் சில்லாகம். தரவுகளைப் படிப்பது / எழுதுவது, கணக்கீடுகளைச் செய்வது, நிரல்களின் ஆணைகளை ஒவ்வொன்றாய் ஏற்று நிறைவேற்றுவது ஆகிய பணிகளை, உள்ளிணைக்கப்பட்ட துடிப்பியின் (Clock) துடிப்புகளின் (Pulses) அடிப்படையிலே நிறைவேற்றுகிறது. துடிப்பியானது எவ்வளவு வேகமாகத் துடிக்கிறதோ அவ்வளவு விரைவாக நுண்செயலி செயல்படும். தொடக்கக் காலச் செயிலகளின் வேகம் 4MHZ, 8MHZ அளவிலேயே இருந்தன. அதன்பிறகு 400MHZ, 500MHZ செயலிகள் வந்தன. இப்போது 2. 4GHZ, 2.8GHZ நுண்செயலிகள் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளன. இன்டெல், ஏபம்பி, ஐபிஎம், டெக்சன் போன்ற நிறுவனங்கள் கணினிக்கான நுண்செயலிகளை உற்பத்தி செய்கின்றன.
4.5.3 அழியா நினைவகமும் நிலையா நினைவகமும்
முறைமைப் பொருள் கூறுகளிலுள்ள அழியா நினைவகம் என்றால் என்ன, நிலையா நினைவகம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
அழியா நினைவகம் (ரோம் பயாஸ்)
அடிப்படை உள்ளீட்டு / வெளியீட்டு முறைமை (Basic Input Output Syster - BIOS) என்று அழைக்கப்படும். இந்த நினைவகம் படிக்க மட்டுமே ஆன நினைவகம் (Read Only Memory - ROM) ஆகும். அதாவது இதில் ஒருமுறை பதியப்பட்ட விவரங்களைப் பிறகு அளிக்கவோ, திருத்தி எழுதவோ முடியாது. கணினியின் இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் நிரலும் உள்ளீட்டு / வெளியீட்டுப் பணிகளுக்கு உதவும் நிரல்களும் இந்தச் சிலலுவில் நிரந்தரமாகப் பதியப்பட்டிருக்கும்.
நிலையா நினைவகம் (ரேம்)
குறிப்பிலா அணுகுமுறை நினைவகம் (Random Access Memory - RAM) என்று அழைக்கப்படும். இதுதான் கணினியின் மூளை போன்ற பகுதி. இது இல்லையேல் கணினியின் செயல்பாடே இல்லை எனலாம். உள்ளீட்டு விவரங்களை இதில் எழுதப்பட்ட பிறகே செயலி படிக்கிறது. வெளியீட்டு விவரங்கள் இதில் எழுதப்பட்ட பிறகே பயனருக்குக் கிடைக்கிறது. கணினியை இயக்கி வைக்கும் மென்பொருள் இதில் ஏற்பட்ட பிறகே கணினி இயங்குகிறது. நிரல்கள் இதில் எழுதப்பட்ட பிறகே செயல்படுத்தப் படுகிறது. பல்வேறு தரவுச் செயலாக்கங்கள் இங்குதான் நிகழ்த்தப்படுகின்றன. நாம் அழித்தெழுதிக் கணக்கீடுகளைச் செய்து பார்க்கும் சிலேட்டைப் போலப் பயன்படுகிறது. கணினியில் மின்சாரம் இருக்கும் வரைதான் இதில் பதியப்பட்ட விவரங்கள் இருக்கும். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அனைத்து விவரங்கள் அழிந்து போகும்.
பிறகூறுகளான மின் வழங்கி பற்றியும் வட்டு இயக்கங்கள் பற்றியும் பார்ப்போம்.
மின்வழங்கி
கணினியின் மின்னணுப் பாகங்கள் இயங்க நேர்நிலை மின்சாரம் (Direct Current - DC) தேவை. ஆனால் நாம் பயன்படுத்தும் மின்சாரம் ‘மாறுநிலை மின்சாரம்’ (Alternate Current - AC) ஆகும். எனவே, மாறுநிலை மின்சாரத்தை நேர்நிலை மின்சாரமாக மாற்றித் தரும் கருவி கணினியின் முறைமைப் பெட்டியில் பொருத்தப் பட்டுள்ளது. ‘தொடர்புறு பாங்கு மின்வழங்கி’ (Switched Mode Power Supply - SMPS) என்று இதற்குப் பெயர். நாம் கணினிக்குத் தரும் 230 வோல்ட் ஏசி மின்சாரத்தை +5, -5, +12, -12 வோல்ட் டிசி மின்சாரமாக மாற்றிப் பல்வேறு உறுப்புகளுக்கும் வழங்குகிறது.
வட்டு இயக்ககங்கள் (Disk Drives)
நெகிழ்வட்டு (Floppy), குறுவட்டு (Compact Disk) ஆகியவற்றை வைத்து இயக்குகின்ற இயக்ககங்களைப் பொருத்துவதற்கென முறைமைப் பெட்டியில் இடம் இருக்கும். இரண்டு அல்லது மூன்று இயக்ககங்களைப் பொருத்திக் கொள்ள முடியும்.