தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- சேமிப்பு சாதனங்கள்

  • 4.6 சேமிப்புச் சாதனங்கள் (Storage Devices)

    நிரல்களை எழுதிக் கணினியில் செயல்படுத்துகிறோம். நிரல்களின் விடைகளைத் திரையில் பார்த்துக் கொள்கிறோம். தரவுகளைச் செலுத்தி அவற்றை அலசி அறிக்கைகளைப் பெறுகிறோம். ஆவணங்களைப் பதிவித்து அச்சிட்டுக் கொள்கிறோம். ஆனால் அதே நிரல்களை, விடைகளை, தரவுகளை, அறிக்கைகளை, ஆவணங்களைப் பிறிதொரு நாளில் கணினியிலிருந்து பெறவேண்டும் எனில், அவை கணினியில் நிரந்தரமாகச் சேமிக்கப்பட வேண்டும். பல்வேறு வகைப்பட்ட தகவல்களையும் கணினியில் சேமித்து வைக்க வட்டுகளும், நாடாக்களும் பயன்படுகின்றன. பலதரப்பட்ட சேமிப்பு சாதனங்கள் பற்றிக் காண்போம்.

    4.6.1 நெகிழ்வட்டு (Floppy Disk)

    1970-களின் தொடக்கத்தில் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பிளாஸ்டிக்கால் ஆனது. காந்தப் பூச்சு கொண்டது. சதுரமான பாதுகாப்பு உறைகளில் மூடப்பட்டிருக்கும். தொடக்க காலங்களில் 8 அங்குல, 5.25 அங்குல விட்டமுள்ள நெகிழ்வட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இப்போது 3.5 அங்குல விட்டமுள்ள வட்டுகளே பயன்பாட்டில் உள்ளன. இது 1.44 எம்பி கொள்ளளவு உள்ளது. கணினியில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டுள்ள இயக்ககத்தில் (Drive) நெகிழ்வட்டைச் செருக வேண்டும். செருகியதும் இயக்ககம் மூடப்பட்டு வட்டு வேகமாகச் சுழலும். மின்காந்த முனை (Head) தகவலை வட்டில் பதியும் அல்லது படிக்கும். வட்டில் உள்ள வட்டத் தடங்களின் (Tracks) மின்காந்தப் புள்ளிகளில் இருதிசைக் காந்தப் புலத்தை ஏற்படுத்தி 0 அல்லது 1 எனத் தகவல் பதியப்படுகிறது அல்லது படிக்கப்படுகிறது. ஏராளமான தகவலைப் பதிந்து சட்டைப் பையில் வைத்து எடுத்துச் செல்லலாம். கணினியில் எளிதாகச் செருகி, எடுத்துப் பயன் படுத்தலாம். இவ்வாறு எளிதாகப் பயன்படுத்த ஏற்றவாறு நெகிழ்வுத் தன்மை (Flexibility) கொண்டிருப்பதால் நெகிழ் (Floppy) வட்டு எனச் சுருக்கமாய் அழைக்கப் படலாயிற்று. விரைவில் பழுதாகிப் போவதால் இவ்வட்டுகள் செல்வாக்கிழந்து வருகின்றன. இதைக் காட்டிலும் ஐந்நூறு மடங்கு கொள்ளளவுள்ள குறுவட்டு இதைவிட மலிவாகக் கிடைப்பதும் ஒரு காரணம்.

    4.6.2 நிலைவட்டு (Hard Disk)

    கணினியின் முறைமைப் பெட்டிக்குள் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளதால் இப்பெயர் பெற்றது. ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட தட்டுகளின் (Platters) தொகுதி, தூசு புக முடியாத உலோக உறைக்குள் உட்பொதிக்கப் பட்டிருக்கும். தகவலை எழுதல், படித்தல் நெகிழ்வட்டைப் போன்றதே. ஆனால் ஒவ்வொரு தட்டுக்கும் தனித்தனி எழுது / படிப்பு முனை இருக்கும். கையில் அடங்கும் அளவிலுள்ள நிலைவட்டில் ஏராளமான தகவலைப் பதிய முடியும். 40 ஜிபி கொள்ளளவுள்ள நிலைவட்டுகள் இப்போது பெருமளவு பயன்பாட்டில் உள்ளன. 80 ஜிபி, 120 ஜிபி நிலைவட்டுகளும் கிடைக்கின்றன. 500 ஜிபி கொள்ளளவு கொண்ட நிலைவட்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.

    4.6.3 குறுவட்டு (Compact Disc - CD)

    ஐந்து அங்குல விட்டமுள்ளது. பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டது. அலுமினியப் பூச்சுக் கொண்டது. கண்ணாடித் தட்டுபோல பளபளப்பாக இருக்கும். வட்டமான தடங்களில் லேசர் கதிர்கொண்டு குழிகளை ஏற்படுத்தித் தகவல் எழுதப்படுகிறது. குழிகளிலும், சமதளப் பகுதியிலும் (Pits & Lands) லேசர் கதிரைப் பாய்ச்சி அது பிரதிபலக்கும் கோணத்தைக் கொண்டு 0,1 எனத் தகவல் படிக்கப் படுகிறது. குறுவட்டுகளில், தரவுக் குறுவட்டு (Data CD), கேட்பொலிக் குறுவட்டு (Audio CD), நிகழ்படக் குறுகூட்டு (Video CD), பல்திறன் குறுவட்டு (DVD) எனப் பலவகை உள்ளன. இவற்றுள், ஒருமுறை எழுதிப் படிக்க மட்டும் பயன்படும் (சிடி-ரோம் / டிவிடி - ரோம்) வட்டுகள், அழித்து எழுதிப் பயன்படுத்தக் கூடிய (ஆர்டபிள்யூ - Rewritable) வட்டுகள் என இருவகை உள்ளன. டிவிடி தவிரப் பிற குறுவட்டுகளில் ஒரு புறம் மட்டுமே தகவல் எழுதப்படுகிறது. நெகிழ்வட்டுகளைப் போல எளிதில் பழுதடைவதில்லை. இவற்றில் எழுதப்படும் தகவல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிந்து போகாமல் இருக்கும்.

    4.6.4 காந்த நாடாக்கள் (Magnetic Tapes)

    ஒலி நாடாக்களைப் போன்றதே. ஒலிநாடாப் பேழை போன்று சிறிய அளவில் இருக்கும். திரைப்படச் சுருள் போல, பத்தரை அங்குல விட்டமுள்ள வட்டப் பெட்டிகளிலும் காந்த நாடாச் சேமிப்பகம் உண்டு. நெகிழ்வட்டைப் போலவே தகவல் எழுதி / படிக்கப்படுகிறது. நாடாக் பேழையைக் கணினியில் செருகி, எடுத்துப் பயன்படுத்த நாடா இயக்ககங்கள் (Tape Drives) உள்ளன. நிலைவட்டுகளைப் போல அதிகமாக தகவலைப் பதிய முடியும். வட்டுகளைப் பொறுத்தவரை தேவையான தகவலை அது எழுதப்பட்ட இடத்தை நேரடியாக அணுகி உடனே படித்துவிட முடியும். ஆனால் நாடாவில் தகவலை வரிசையாகவே படிக்க முடியும். நாடாவின் இறுதியிலிருக்கும் தகவலைப் படித்தறிய அதிக நேரம் ஆகும். எனவே நாடாக்கள் நிகழ்நேரப் (Real Time) பணிகளுக்குப் பயன்படுத்தப் படுவதில்லை. கணினித் தகவல்களை நகலெடுத்துப் பாதுகாக்கவே பயன்படுத்தப் படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:48:22(இந்திய நேரம்)