தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

 • குவளை மலர்

  மூலிகை வேதிமங்களும் மருத்துவப் பயன்களும்


  முனைவர் வீ.இளங்கோ,
  உதவிப்பேராசிரியர்,
  சித்த மருத்துவத்துறை


  செங்கழுநீர், உத்பலம், குவளையம் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் குவளை மலர் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டது. தேரன் வெண்பா மற்றும் அகத்தியர் குணவாகடம் ஆகிய தமிழ்மருத்துவ நூல்கள் பல்வேறு மருத்துவப் பயன்களை உரைக்கின்றன.

  மூலிகை வேதிமச் செயற்பண்புக் கூறுகள்

  குவளை மலரின் வடிச்சாற்றில் பல்வேறு பிளவனாய்டுகள் மற்றும் பாலிபினாய்கள் உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பைசெட்டின், ரூட்டினோசைடு என்ற பினவனாய்டும், குவர்செட்டின், ஆலாம்னோசைடு என்ற கிளைக்கோசைடும் உள்ளதென்பதைப் புறஊதா மற்றும் அணுஉட்கரு நிறைமாலை அளவீட்டு ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. இம்மலரின் குறியீட்டு மூலிகை வேதிமமாக ‘நிம்வால்’ எனம் பிளவனால் விளங்குகிறது. இதனுடன் காம்பெரால், குவர்சிடின் ஆகிய பிளவனாய்டுகளும், காலிக் அமிலம் போன்ற பீனாலிக் அமிலங்களும் செயற்பண்புக் கூறுகளாக விளங்குகின்றன.

  மருத்துவப் பண்புகள்

  இம்மலர் நீர் வேட்கையையும், உடற்சூட்டையும் நீக்கவல்லது. பல்வேறு பாடான மருந்துகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. மேக நோய்களில் உண்டாகும் குறைகளை நீக்கும் மூலாதார உயிர்நிலையைப் பாதுகாக்கும் மருந்தாக்க் குவளைமலர் பயன்படுகிறது.

  அழகியல் பொருட்களில் கூந்தல் தைலங்கள் தயாரிக்க சிறப்பாகப் பயன்படுகிறது. இதன் மலர், இலை மற்றும் கிழங்கு மருத்துவப் பயனுடையவை. கோழை அகற்றுதல், இரத்தக் கொதிப்பைத் தணித்தல், மற்றும் திசுக்களை இறுகச் செய்தல் ஆகிய மருத்துவப் பண்புகள் உடையது. வயிற்றுப் போக்கு, இரத்த மூலம், இருமல், கண்ணெரிச்சல் ஆகிய நோய்களைப் போக்குகிறது.


  ஆண்களின் உயிரணுக்களில் எண்ணிக்கையைப் பெருக்க குவளை மலரின் விதைப்பொடி பயன்படுகிறது. இதன் கிழங்கு முகத்திற்கான அழகியல் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுகிறது.

  அறிவியல் ஆய்வுகள்

  குவளை மலரின் வடிசாறு கார்பன்டெட்ரா குளோரைடு மூலம் தூண்டப்பட்ட கல்லீரல் நோயைப் போக்கும் திறனுடையது என்பதை மருந்தியல் மற்றும் நோய் குறியியல் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்லீரல் நோயில் உண்டாகும் செல்களின் சிதைவைத் தடுப்பதுடன், புதிய செல்கள் உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அதிகரித்த இரத்த பித்தம், அதிகரித்த வளியேற்றம், நோய் நிலைகளை மாற்றும் செயல்திறன் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகச் சித்த மருத்துவத்துறை ஆய்வுகளின் மூலம் அலாக்ஸான் கொண்டு தூண்டப்பெற்ற நீரிழிவு நோயை அதி சர்க்கரை மற்றும் அதிகரிக்கப்பட்ட வளியேற்றம் ஆகிய நோய்நீக்கும் செயல்திறன் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நீரிழிவு நோயில் தோன்றும் பல்வேறு கல்லீரல் நொதி மாற்றங்களைச் சரிசெய்யும் செயல்திறன் பெற்றுள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:11:15(இந்திய நேரம்)