2.0 பாட முன்னுரை
பாட முன்னுரை
மனிதர்களின் வளர்ச்சியையும், அவர்களின் நடத்தையையும் உறுதி செய்வது மரபும், சூழலும் ஆகும். மாற்ற முடியாதபடி பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளதை மரபு என்றும், காலத்திற்கேற்பத் தொடர்ந்து மாற்றம் பெற்று, விரிவடைந்து காணப்படுவதைச் சூழ்நிலை என்றும் அறிஞர்கள் கருதுவர். மனிதனின் வளர்ச்சி, நடத்தை ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இயற்கையா (மரபு), பராமரிப்பா (சூழ்நிலை) என்பதைப் பற்றி அறிஞர்களிடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மரபுநிலையும், சூழ்நிலையும் இணைந்தே மனித வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன எனலாம். குழந்தையின் உடல், உள்ள வளர்ச்சி, மொழி கற்றலில் ஏற்படும் பின்னடைவிற்கான காரணங்கள், மொழித்திறன் வளர்ச்சி, வாழ்வியல் திறன்களை வளர்த்தல் ஆகியன இவ்வலகின்வழி அறியமுடிகிறது.