தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
---|
|
2.2 மொழி கற்பித்தலில் உளவியல் கோட்பாடுகள்
மொழி கற்பித்தலில் உளவியல் கோட்பாடுகள்
அனைத்து மாணவர்களும் ஒரே அளவில் மொழியைக் கற்பதில்லை. மாறாக அவர்களின் உள்ளார்ந்த திறன்களின் அடிப்படையில் அவர்களின் கற்கும் ஆற்றல் இருக்கும். அத்திறன்களைக் கண்டறிந்து மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவது பற்றி ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும். அத்திறன்களை அறிவதற்கு உளவியல் கோட்பாடுகள் ஆசிரியர்களுக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.
1963ஆம் ஆண்டு ஜெரோம் புரூணர் முதன்முதலில் கற்பித்தல் கொள்கைகள் என்ற சொல்லை உருவாக்கினார். பின்னர் 1965இல் இச்சொல் பிரபலமடையத் தொடங்கியது. கற்பித்தல் வளர்ச்சிக்குக் கற்பித்தலுக்கான உளவியல் கொள்கைகள் அடித்தளமிட்டுள்ளன. மனிதனின் நடத்தையில் கல்வியால் மட்டுமே மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். கல்வியும், கற்றலும் பிரிக்க இயலாதவை. எனவே கற்பித்தலுக்கான உளவியல் கொள்கைகளை ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
பேட்டர்சன் என்பவரின் கூற்றுப்படி கற்பித்தலில் ஒருங்கிணைப்பை உளவியல் கொள்கைகளே அளிக்கின்றன. கற்பித்தலுக்குத் தேவையான முறைகளைக் கையாள உதவுகின்றன. ஆராய்ச்சிக்கும் அவையே படிநிலைகளை அமைத்துக் கொடுக்கின்றன. ஆசிரியப்பயிற்சி மாணவர்களுக்குக் கற்பித்தல் நுட்பங்களை உளவியல் கொள்கைகளே உணர்த்துகின்றன. பல உளவியலறிஞர்கள் கற்பித்தலுக்கான கொள்கைகளை வகுத்துள்ளார்கள். அவர்களுள் காக்னே, புரூணர், பியாஜே ஆகியோருடைய கற்பித்தலுக்கான உளவியல் கொள்கைகள் இங்கு ஆராயப்படுகின்றன.
காக்னே அவருடைய “கற்றலுக்கான சூழல்” என்னும் நூலில், கற்றலில் ஏற்படக்கூடிய எட்டுவகையான கற்றல் மாற்றங்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளதையும் கண்டறிந்தார்.
இராபர்ட் எம்.காக்னே கற்றலை எட்டு வகையாகப் பிரித்துள்ளார். எளிமையான கற்றலில் தொடங்கிச் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்க்கக் கற்றுக்கொள்ளுதல் வரை வரிசைக்கிரமத்தில் அமைந்துள்ளன. அவை
- குறியீட்டுவழிக்கற்றல் : பாவ்லோவின் ஆக்கநிலையுறுத்தல் கொள்கைப்படி கற்றலில், தனிநபர் ஒரு குறியீட்டுக்குத் துலங்கலை வெளிப்படுத்துவதைக் கற்றுக் கொள்கிறான்.
- தூண்டல் - துலங்கல் மூலம் கற்றல் : தார்ண்டைக்கின் தூண்டல் துலங்கல் மூலம் கற்றல் சோதனையையும், ஸ்கின்னரின் செயல் தொடர்புடைய துலங்கலையும் இக்கற்றல் முறைக்குச் சான்றுகளாகக் கூறலாம்.
- இணைப்புக் கற்றல் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூண்டல் துலங்கல்களை இணைப்பதன் மூலம் கற்றல் நிகழ்தல்.
- சொற்களின் கூட்டிணைப்பு : சொற்களைப் பொருத்தமாக இணைத்தலைக் கற்றுக் கொள்ளுதல்.
- வேறுபாடறிதல்: ஒரே மாதிரியான பல்வேறு தூண்டல்களைக் கண்டறிந்து, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகையான துலங்கலை வெளிப்படுத்தும் வேறுபாடுகளை அறிதல்.
- கருத்துகள் உருவாவதைக் கற்றல்: தூண்டல் வகைகளுக்கிடையே உள்ள பொதுமைப்பண்புகளை உணர்ந்து, அதனடிப்படையில் பொதுமைக் கருத்துகளைக் கற்றல்.
- விதியைக் கற்றல்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருத்துகளை இணைத்து, விதியைக் கற்கும் பொழுது, கொள்கைகளைக் கற்றலும் நிகழ்கிறது.
- சிக்கலைத் தீர்த்தல் : காரணமறிதல், சிந்தனை, உற்றுநோக்கல், வேறுபடுத்துதல், பொதுமைப்படுத்துதல் போன்ற அறிவுத்திறன்களின் மூலம் சிக்கலைத் தீர்க்கக் கற்றுக்கொள்ளுதல் நிகழ்கிறது.
காக்னே, கற்பித்தலின் நான்கு முக்கியக் கூறுகளையும் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் தன்னுடைய கற்பித்தல் செயலில் இவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார். அவை:
- முன்பு கற்ற பாடப் பொருளை நினைவு கூரத் தூண்டுதல்.
- பொருத்தமான தூண்டலை நேரடியாக அளித்தல்.
- நிர்ணயிக்கப்பட்ட கற்றல் இலக்குகளைச் செயல்படுத்துதல்.
- பின்னூட்டம் பெறுதல்.
ஆசிரியர்களே கற்பித்தல் பொருளின் வடிவமைப்பாளர்கள், மேலாளர்கள் மற்றும் மாணவர்களின் கற்றலை மதிப்பீடு செய்பவர்கள் என்று காக்னே கருதினார். எனவே கற்பித்தல் என்பது ஆசிரியர்களின் திட்டமிடல் மற்றும் கட்டுப்படுத்தலை உள்ளடக்கியது. கற்பவர்களின் தேவைக்கேற்பக் கற்றல் சூழலை ஒழுங்குப்படுத்துவதே கற்பித்தல் எனலாம். கருத்துகள் உருவாவதைக் கற்றல், விதியைக் கற்றல், சிக்கலைத் தீர்த்தல் ஆகியவற்றுக்கே பெரும்பாலான பள்ளிப்பாடங்கள் முக்கியத்துவம் அளிப்பதை ஆராய்ச்சியின் மூலம் அறிந்தார் காக்னே. எனவே கற்றல் செயலிலும் எட்டு நிலைகளை அவர் விவரிக்கிறார். அவை :
- ஊக்குவித்தல்
- புரிந்து கொள்ளுதல்
- முயன்று அடைதல்
- விடாது வைத்திருத்தல்
- நினைவுகூர்தல்
- பொதுமைப்படுத்துதல்
- செயல்திறன்
- பின்னூட்டம்
காக்னே கற்றல் செயல் இயல்பாகவோ அல்லது பின்னூட்டம் பெற்றோ முடிவடைய வேண்டும் என்று கருதினார்.
கற்பித்தல் கொள்கை என்பது அறிவை அடைவதற்குரிய விதிகளையும், திறன்களையும், அளவிடுதல் நுட்பங்களையும் விளக்கக் கூடியதாக இருக்க வேண்டுமென்று புருணர் சுட்டியுள்ளார். கற்பித்தல் கொள்கை நான்கு கூறுகளைக் கொண்டிருக்க வேண்டுமென்கிறார். அவை :
- கற்றலுக்கு முன்பே விரும்பும் நிலை : ஒரு குழந்தை பள்ளிக்கு வரும்பொழுது அக்குழந்தை தானே கற்கும்படியான ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய பாடப் பொருள்களையும், அனுபவங்களையும் கற்பித்தல் கொண்டிருக்க வேண்டும்.
- அறிவு அமைப்பு : கற்போரால் உட்கிரகித்துக் கொள்ளும் வகையில் கற்பித்தல் கொள்கைகள் குறிப்பிட்ட வகையில் அமைக்கப்பட வேண்டும்.
- வரிசைக்கிரமம் : பாடப்பொருளை அளிக்க வேண்டிய வரிசைமுறை பற்றிக் கற்பித்தல் கொள்கைகள் குறிப்பிட வேண்டும்.
- வலுவூட்டுதல் : கற்பித்தல் கொள்கை மாணவர்களை அறியாதவற்றிலிருந்து அறிந்தவற்றுக்கு இட்டுச்செல்லும் பொழுது எத்தகைய வலுவூட்டம் அளிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அறிவு வளர்ச்சி நிலையில் புருணர் மூன்று நிலைகளைக் குறிப்பிட்டுள்ளார். அவை:
- செயல்படுநிலை : கற்றல் செயல்களைச் செய்வதன் மூலம் நிகழ்கிறது. இதற்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கற்றுக் கொள்வதைக் கூறலாம்.
- உருவகநிலை : புலன்காட்சி வழி, மனதுக்குள்ளேயே சாயல்களைப் பயன்படுத்திக் கற்றல் நடைபெறுகிறது.
- குறியீட்டு நிலை : செயல்களை மொழியாக மாற்றி, இணைத்துக் கற்கும் நிலையே குறியீட்டு நிலை. ஒருவரின் தற்கருத்து வளர்ச்சி, அவருடைய உலகிலுள்ள பொருள்களின் சாயல்களைப் பொறுத்தது.
நாம் எவ்வாறு அறிவை அளிக்கிறோம், எவ்வாறு கற்பவரை அவருடைய கற்றல் நிலைக்கேற்ப வழிநடத்துகிறோம் என்பதற்கேற்பவே அறிவு வளர்ச்சி இருக்கும் என்பது புருணரின் கோட்பாடாகும்.
ஜீன் பியாஜே என்னும் சுவிட்ஸர்லாந்து உளவியலறிஞர் குழந்தையின் சிந்தனை மற்றும் அறிவு வளர்ச்சி பற்றிப் பொதுமைக்கருத்துகளை அறிவித்துள்ளார். அவரது கருத்துப்படி, குழந்தையின் வயதுக்கேற்ப, பல்வேறு படிநிலைகளில் அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது. இவருடைய அறிவுக்கோட்பாடு அறிவின் எல்லை மூலம் மரபியல் வழி மனிதனின் அறிவு மூலம் எல்லை, பண்புகளை அறியும் பண்புகளை ஆய்வாகக் கொண்டுள்ளது. அறிவு வளர்ச்சியில் உயிரியல் மரபுக் கூறுகளும், சூழலும் கொண்டுள்ள இடைவினை பற்றி இவரது ஆராய்ச்சி அமைந்தது. பியாஜே, அனைத்து அறிவு வளர்ச்சியும் மூன்று செயல்களால் நிகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அவை
- தன்வயப்படுத்துதல் : புதியதாகப் பெறும் தகவல்களை, தான் ஏற்கனவே பெற்றுள்ள அறிவு அமைப்புடன் குழந்தை பொருத்திக் கொள்ளுதல்.
- பொருந்துதல் : புதிய தகவல்களுக்கேற்ப ஏற்கனவே உள்ள அறிவு அமைப்பை மாற்றி, அதனோடு இயைந்து செல்லுதல்.
- சமநிலைப்படுத்துதல் : தன் வயப்படுதலுக்கும், பொருந்துதலுக்கும் இடையே அறிவினைச் செயல்படுத்துவதிலே உண்டாகும் சமநிலையே சமநிலைப்படுத்தலாகும். ஒரு குழந்தை ஏற்கனவே தான் உள்ள சூழலுக்கும், புதிய கற்றல் சூழலுக்கும் இடையே தன்னைச் சமநிலைப்படுத்திக் கொள்கிறது. மேலே சொன்ன மூன்று செயல்களாலும், குழந்தை தகவமைப்பைப் பெறுகிறது.
- புலனியக்கநிலை (பிறப்பு முதல் 2 வயது வரை)
- செயலுக்கு முந்தைய நிலை (2 முதல் 7 வயது வரை)
- பருப்பொருள் செயல்படும் நிலை (7 முதல் 12 வயது வரை)
- கருத்தியல் நிலை (12 வயதுக்கு மேல்)
- புலனியக்கநிலை : இந்நிலையில் குழந்தை தனக்கென்று ஓர் உலகத்தை உருவாக்கிக்கொள்கிறது. அதில் அதனுடைய உடல் தேவைகளும், புலன் உணர்வும் குழந்தையின் கற்றலுக்கு வழிவகுக்கிறது. இந்நிலையில் குழந்தை தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்று சிந்திப்பதைவிடப் புலன்களை இயக்கிக் கற்றுக்கொள்கிறது. எட்டு மாதத்திற்குப் பிறகு குழந்தை பொருள்களின் நிலைத்த தன்மை பற்றி அறிகிறது. அடிப்படை நினைவு தோன்ற ஆரம்பித்த உடன் பிறரைப் போலவே தானும் செய்யக் கற்றுக்கொள்கிறது.
- செயலுக்கு முந்தைய நிலை : இந்நிலையில் மொழி வளர்ச்சி உருவாகிறது. பொருட்கள் மற்றும் செயல்கள் பற்றிக் குழந்தை சிந்திக்க ஆரம்பிக்கிறது. இதில் கருத்துக்கு முந்தியநிலை, உள்ளுணர்வு தோன்றும் நிலை என்ற இரண்டு நிலைகள் அடங்கியுள்ளன. அறிவுநிலை வளர்ச்சி என்பது பெரியவர்களைக் கண்டு போலச்செய்வதாலும், குறியீடுகளைப் பயன்படுத்துவதாலும் நிகழும். குழந்தையின் காரணம் கண்டறிதலில் நெகிழ்ச்சியோ, முன்பின் மாற்றமோ இருக்காது. குழந்தை தன்னை மட்டுமே மையமாகக் கொண்டு சிந்தித்துச் செயல்படும். உயிரற்ற பொருட்களுக்கு, உயிருள்ளதாகக் குழந்தை பாவித்துக்கொண்டு, அவற்றோடு பேசுதல், விளையாடுதல் போன்ற செயல்களைச் செய்யும்.
- பருப்பொருள் செயல்படும் நிலை : இந்நிலை 7 வயது முதல் 12 வயத வரை இருக்கும். இந்நிலையில்
குழந்தைகளுக்குக் காரணத்தோடு சிந்தித்தலும், தன்னிலை முனைப்புக் குறைதலும் நிகழும். இந்நிலையின்
முக்கியக்கூறுகள்.
- பகுத்தறிதலும், தொகுத்தறிதலும் நடைபெறும்.
- சிந்திப்பதில் நெகிழ்ச்சி இருக்கும்.
- பொருள்களின் பயனைப் புரிந்துகொள்ளும் திறன் வளரும்.
- வரிசைப்படுத்தலும், வகைப்படுத்தலும் குழந்தையிடம் நிகழும்.
- ஒரு செயலின் முன்பின் மாற்றங்களைக் குழந்தை உணர ஆரம்பிக்கும்.
- கருத்தியல் நிலை : இந்நிலையில் குழந்தை தன் எதிரில் இல்லாத பொருட்களையும், நடக்காத நிகழ்வுகளையும்
பற்றிக் கற்பனையாகச் சிந்திக்கத் தொடங்கும். குழந்தையின் சிந்தனை முறைப்படியும், காரணங்கள் அடிப்படையிலும்
ஓருங்கிணையத் தொடங்கும். இந்நிலையில் பின்வரும் கூறுகள் அமைந்துள்ளன.
- பருப்பொருள் சிந்தனை
- முறைப்படுத்தப்பட்ட தீர்வுகளைக் கொண்டிருத்தல்
- சிக்கலைத்தீர்த்தல்
- அறிவு மாற்றம் பெறுதல்