முகப்பு

2.3 குழந்தையும் மொழித்திறனும்

குழந்தையும் மொழித்திறனும்

குழந்தைகளை நல்லமுறையில் கற்பிக்க வேண்டுமாயின், அவை வளரும் பல்வேறு சூழ்நிலைகளும் அவ்வளர்ச்சிக்கு ஏற்புடையதாக அமைதல் வேண்டும். வளர்ச்சி பற்றிய பொதுவிதிகளை அறிந்து கொண்டால் மட்டும் போதாது. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியையும் தனித்தனியாகவும் கவனித்தல் வேண்டும். கற்கும் குழந்தையை ஆசிரியர் நன்கு புரிந்துகொண்டால் வகுப்பறையில் கற்றல் செயலும் கற்பித்தல் செயலும் செம்மையாக நடைபெறும். ஆசிரியர்கள் நன்கு புரிந்துகொண்டு உடல், உள்ளம், மனவெழுச்சி, சமூகமனப்பான்மை ஆகியவற்றை அறிந்துகொண்டு குழந்தைகளின் மொழித்திறன்களை வளர்ப்பதற்காகத் திட்டமிட்டுச் செயல்படவேண்டும்.

மனிதனது சிறப்புப் பண்புகளில் மிகவும் உயர்நிலைப்பட்டது அவனது மொழித்திறன் எனலாம். மொழி, கருத்து தொடர்புக்கான (communication) கருவியாகவும் சிந்தனையை அண்மைச் சூழ்நிலைக்கு அப்பாலும் செலுத்திப் பயன்பெற உதவுவதாகவும் உள்ளது. மொழித்திறன் வளர்ச்சிக்கு அடிப்படையாக அவனது அறிவாற்றலுடன் சில உடலுறுப்புகளின் (குரல்நாண், நா, நுரையீரல் போல்வன) பண்புகளும் உதவுகின்றன. பல்வேறு வகை ஒலிகளை எழுப்புவதுடன் கேட்கும் ஒலிகளைத் தரம் பிரித்துணர்தலில் (discrimination) மனிதனது பெருமூளை பெற்றுள்ள திறமையும் உதவுகிறது. மனிதனால் கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் வகையில் பெருமளவு செயற்கையாக உருவாக்கப்பட்ட குறியீடுகளின் (symbols) தொகுப்பாக ‘மொழி’ (language) உள்ளது.

மொழிக்கும் சிந்தனைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பேச்சுமொழி வளரவளர அதனுடன் இணைந்து வரிவடிவ எழுத்துமொழியும் வளர்ச்சி பெறுகிறது. துகுறித்து அறிஞர்கள் 3 பண்புகளைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

  1. மொழிச்சொற்கள் இடம் (place), காலம் (time) ஆகியவற்றுக்குக் கட்டுப்படாமல் அவற்றிற்கு அப்பாற்பட்டு இருத்தல் வேண்டும்.
  2. மொழிச்சொற்கள் பொருளுள்ளவையாக விளங்குதல் வேண்டும்.
  3. இதன் சொற்களை இணைத்துப் பல புதிய கருத்துகளை குறிப்பிட உதவும் பண்பினையும் பெற்றிருக்க வேண்டும்.

குழந்தையின் மொழித்திறன் வளர்ச்சி வியக்கத்தக்க ஒன்றாகும். மொழி வளர்ச்சியின் வீதம் (Rate), வேகம் (speed) ஆகியவற்றில் குழந்தைகளிடையே வேற்றுமைகள் காணப்படுகின்றன. மொழித்திறன் வளர்ச்சியில் அடுத்தடுத்த கட்டங்களின் ஒரு கால முறைப்படி (sequence) நிகழ்கின்றன. எனவே, மொழித்திறனின் அடிப்படையாக முதிர்ச்சி பெறுதல் உள்ளது என்பது பொருந்தும். குழந்தை (10-14) மாதங்களில் எளிய சொற்களைப் பேசத் தொடங்குகிறது. இதற்கு முன்னரே, சிறு குழந்தைகள் தங்களது தேவைகளைப் பிறருக்கு (சிறப்பாகத் தாய்க்கு) அறிவிக்கப் பலவித ஒலிகள், சைகைகள், அழுகை போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடும். பேச்சுத்திறன் வளர வளர இவற்றின் பங்கு குறைகிறது. தொடக்கத்தில் சிறு குழந்தை எவ்வாறு மொழிச் சொற்களை கற்கிறது என்பது பற்றி ஸ்கின்னர் என்பார் மூன்று படிநிலைகளைச் சுட்டுகிறார்.

  1. பிறர் எழுப்பும் ஒலியைப் பின்பற்றிச் சிறு குழந்தை அதே மாதிரியான ஒலியினை எழுப்புகிறது. இதற்குப் பெற்றோர்களது பாராட்டினைப் பெறுகிறது.
  2. சிறு குழந்தை இவ்வாறு எழுப்பும் ஒலிகளுக்கு ஏற்ப பொருள்களை இணைத்து அது குறிப்பிடும்போது பாராட்டுதலைப் பெறுகிறது. எனவே, ஒலி - பொருள் தொடர்பு வலுப்பெறுகிறது.
  3. இதன் விளைவாக மொழிச்சொற்களை அவற்றுக்கான பொருள்கள், பண்புகள், செயல்கள் ஆகியவற்றுடன் தொடர்புப்படுத்திப் பேச முற்படுகிறது.

சுமார் 1½ ஆண்டில் 10-15 எளிய சொற்களை குழந்தை கற்றுப் பயன்படுத்துகிறது. அடுத்த 3-4 மாதங்களில் அதன் சொற்களஞ்சியம் (vocabulary) வேகமாக அதிகரிக்கிறது. சுமார் 12 வயதிற்குள் சுமார் 10,000-க்கும் அதிகமான தாய்மொழிச் சொற்களைச் சாதாரணமாகக் கற்றுப் பயன்படுத்தக்கூடும். இதுபோலவே 2-3 வயதில் குழந்தை சிறு வாக்கியங்களை உருவாக்குதல், பண்மைச் சொற்களையும் பதிலிப்பெயர்களையும் பயன்படுத்துதல், இறந்த காலம் பற்றிப் பேசுதல் போன்ற மொழித்திறன்களைக் கற்கிறது. சூழ்நிலை நிகழ்ச்சிகளில் ஆர்வமிகுந்து தொடர்ந்து பேசவும் முற்படுகின்றனர். இதன் விளைவாகச் சொற்களஞ்சிய அளவுப் பெருக்கம், வாக்கியங்களில் நீளம் அதிகரித்தல், தெளிவான உச்சரிப்பு, கேட்டும், படித்தும் புரிந்துகொள்ளும் திறன் வளர்ச்சி, எழுதும் திறன் வளர்ச்சி போல்வன எழுகின்றன. இவற்றுடன் இணைந்து சிந்தனையாற்றல் கற்பனைத்திறன், பொருளறிவு வளர்ச்சி ஆகியன நிகழ்கின்றன. பின்பற்றல், வலுப்படுத்தப் பெறுதல் போல்வன மொழி வளர்ச்சியைத் துரிதப்படுத்துவனவாம். மொழி வளர்ச்சி மேலே குறிப்பிட்ட வகைகளில் சீராக வளர, குழந்தையின் குடும்பச் சூழ்நிலை, மொழி வளர்ச்சிக்கான பல வாய்ப்புகள் அமைதல், மொழி மூலமே குழந்தையுடன் பெற்றோர் உரையாடுதல் போல்வன அடிப்படையாகும்.

பிறந்த குழந்தை உடல் வளர்ச்சி மற்றும் அறிதல் திறன் வளர்ச்சி அடைந்ததும் தனது முதலாவது பிறந்த நாளில் (10-14 மாதங்களில்) அடையாளம் காணக்கூடிய- தெளிவான உச்சரிப்புடன் கூடிய முதல் சொல்லைப் பேசுகின்றது. அம்மா, தாத்தா, அத்தை போன்ற சொற்கள் குழந்தையின் முதல் சொற்களாக இருக்கின்றன. எந்தச் சொல்லாக இருந்தாலும் அதனை ஒலிக்க அம்மா அல்லது மற்றவர்களைப் பின்பற்றுவதால் கற்றுக்கொள்கிறது. அம்மா என்ற சொல்லை ஒலிக்கக் கற்றுக் கொண்டதும் அதனைக் குழந்தை தன் மனத்தில் ஏற்படும் அம்மாவின் உருவத்துடன் தொடர்புபடுத்திக் கொள்கிறது. அம்மா அல்லது காப்பாளருக்குப் பிறகு குழந்தை குடும்பத்தில் உள்ள மற்றவர்களிடமிருந்தும் பல சொற்களைப் பேசக் கற்றுக்கொள்கிறது.

18 மாதங்கள் வரை குழந்தை ஒரு தனியான சொல்லைப் பேசித் தம் கருத்தைத் தெரிவிக்கிறது. அம்மா எனக்குப் பலூன் வேண்டும், அம்மா இங்கே வா, அம்மா எங்கே போன்ற எல்லாவற்றிற்கும் குழந்தை அம்மா என்ற ஒரு சொல்லை மட்டும் பேசுகின்றது. நாமும் குறிப்பால் உணர்ந்து கொள்கிறோம். 18-24 மாதங்களில் குழந்தை சிறு வாக்கியங்களைப் பேசத் தொடங்குகிறது. முதலில் முக்கியமான இரு சொற்களைக் கொண்ட வாக்கியங்களைப் பேசுகிறது. அம்மாவிடம் தண்ணீர் வேண்டும் என்று கேட்பதற்கு அம்மா தண்ணீர் என்று நிறுத்திக்கொள்கிறது. குழந்தைகள் இவ்வாறு மொழி அமைப்பைப் புரிந்துகொண்டு இரண்டுக்கு மேற்பட்ட சொற்களை வாக்கியத்தில் அமைத்துத் தங்கள் இரண்டாவது பிறந்த நாளில் (20-30 மாதங்களில்) பேசுகின்றன.

குழந்தைகள் முன்மழலைப் பள்ளிக்குச் செல்லும்போது அம்மா, அப்பா, பொம்மை, பந்து போன்ற பெயர் சொற்களையும், வா, போ, நட, உட்கார் போன்ற வினைச் சொற்களையும், உள்ளே, வெளியே, பெரியது, சிறியது, இனிப்பு, கசப்பு போன்ற ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்கும் சொற்களையும் கற்றுக்கொண்டு தங்கள் சொற்களஞ்சியத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. அப்போது அவர்களால் நீண்ட சிக்கலான வாக்கியங்களைப் பேச முடிகிறது. 5, 6 ஆண்டுகளில் தொடக்கப்பள்ளிக்குச் செல்லும்போது பல வழிகளிலும் வளர்ந்தவர்களைப் போல மொழியை ஆள முடிகின்றது. இருந்தபோதிலும் குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சிப்பருவம் முழுவதும் வளர்ந்து முதிர்ச்சி பெறுகின்றது. குழந்தைப்பருவத்தில் மொழி வளர்ச்சியைவிட வேறு எந்த மாற்றமும் வேகமாக நிகழ்வதில்லை. உடல் இயக்கங்கள் போலவும், புலக்காட்சியைப் போலவும் மொழி வளர்ச்சி உதடுகள், நாக்கு, இவற்றின் அசைவுகளுக்குக் காரணமான தசைகளின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முதிர்ச்சி மற்றும் அனுபவம் ஆகியவற்றைச் சார்ந்து அமைகின்றது.

குழந்தைகள் பள்ளிக்கு ஓரளவு மொழி வளர்ச்சியைத் தங்கள் குடும்பப் பின்னணியிலிருந்து பெற்று வருகின்றனர். குழந்தையின் மொழியில் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் பேசும் மொழியின் தாக்கம் இருக்கிறது. குடும்பப்பின்னணியைப் பொறுத்துக் குழந்தை பயன்படுத்தும் ஒலிப்பு முறை, வாக்கியத்தில் அழுத்தம் கொடுக்கும் இடம் ஆகியவை வேறுபடுகின்றன. குடும்பப்பின்னணியில் ‘பூவா, ஆம், மம்மு’ போன்ற உணவைக் குறிக்கும் சொற்களைக் குழந்தை தன் தாயிடமிருந்து கற்றுக் கொள்கிறது. இதனைக் குழந்தையின் தாயார் மொழி (Home Language) என்கிறோம். குழந்தைகள் பயன்படுத்தும் சொற்கள் குழந்தைகளின் வட்டார வழக்குகளுக்கு ஏற்றபடி மாறுபடுகிறது. மொழி வளர்ச்சியில் குழந்தைகள் தங்கள் வட்டாரங்களில் வழங்கப்படும் மொழியையே முதலில் கற்றுக்கொள்கின்றனர். அதனால் இந்த மொழியுடன் குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர். பள்ளிப்பருவத்தில் இது சிறிதுசிறிதாக மறைந்து விடுகின்றது.

குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்தும் குழந்தையின் மொழிவளர்ச்சி வேறுபடுகின்றது. எடுத்துக்காட்டாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்குக் குறைவான அனுபவங்களே இருப்பதால் அவர்களின் சொல்லாட்சித் திறன் பொருளாதாரத்தில் முன்னேறிய குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளின் சொல்லாட்சித் திறனைவிடக் குறைவாகவே இருக்கும்.

பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு வகை வகையான பொம்மைகள், ஆடைகள், உணவு வகைகள், வெளி அனுபவங்கள் கிடைக்கின்றன. மேலும் வீட்டில் பல வகையான வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளன. இவற்றைக் காணுவதால் குழந்தைகளின் சொற்களஞ்சியம் விரைவாக வளர்ச்சி அடைகின்றது.

அயலகத்தில் வாழும் குழந்தைகளின் மொழி வளர்ச்சியானது குடும்பத்தையும் அதனோடு தொடர்புடைய சமூகத்தையும் சார்ந்து அமைகிறது. மேலும், அயலகச் சூழ்நிலையில் வாழும் குழந்தைகளின் தாய்மொழியும், பள்ளியில் பயிலும் மொழியும் வேறுவேறாக இருக்கும்போது, தாய்மொழி கற்றலுக்கான முயற்சிகள் இயல்பாகவே அக்குழந்தையின் மொழித்திறன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

சில வட்டாரங்களில் ‘இடதுகை பக்கமாகச் செல்’ என்பதைப் ‘பீச்சாங்கை பக்கமாகச்செல்’ என்றும், வேறு சில வட்டாரங்களில் ‘ஓரட்டுக் கை பக்கமாகச் செல்’ என்றும் வழங்குகின்றனர். சில இடங்களில் ‘தவளையைத்’ ‘தவக்களை’ என்றும் கூறுகின்றனர். இவ்வாறே சொற்களின் உச்சரிப்பிலும் வட்டார அளவில் வேறுபாடு காணப்படுகின்றது. ‘பழம்’ என்பதைச் சில வட்டாரங்களில் ‘பயம்’ என்றும், சில வட்டாரங்களில் ‘பளம்’ என்றும் கூறுகின்றனர். ஆசிரியர்கள் தங்கள் வட்டாரத்தில் குழந்தைகளின் பேச்சுகளை உற்றுநோக்கி அவர்களின் தாயார் மொழியை அறிந்து அவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களில் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

இது போன்று சொற்சூழல் அயலகத்திலும் பன்முறையில் பயன்படுகின்றது. அதைப் பற்றிய தெளிவுகளை மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

தற்காலத்தில் தொலைக்காட்சி பெட்டி ஒரு முதன்மையான தகவல் தொடர்பு சாதனமாக மாறிவிட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து மணிக்கணக்கில் நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். மொழிவளர்ச்சியில் வேகத்தைப் பெற்றிருக்கும் குழந்தை தொலைக்காட்சியில் பேசப்படும் மொழியை எளிதாக உள்வாங்கிக் கொள்கின்றது. மேலும் அதில் வரும் வண்ண வண்ண விளம்பரங்கள், வசனங்கள், பாடல்கள் ஆகியவற்றை ஆர்வத்துடன் உள்வாங்கிக் கொண்டு அதனைப் பேசிக்காட்டுகின்றது. முகநூல், புலனம், யூடியுப், கீச்சகம் முதலான சமூக ஊடகங்களின் வாயிலாகவும் குழந்தைகளின் மொழி வளர்ச்சி அடைகிறது. இவ்வாறு குழந்தையின் மொழி வளர்ச்சிக்குத் தகவல் தொடர்பு ஊடகங்கள் உதவினாலும் எந்த வகையான அல்லது எவ்வளவு சரியான மொழி அமைப்புகள் பேசப்படுகின்றன என்பதும் சிந்தனைக்குரியது.