முகப்பு

2.1 வளர்ச்சியும் மேம்பாடும்

வளர்ச்சியும் மேம்பாடும்

மனிதனின் வளர்ச்சி மற்ற உயிரினங்களைப் போல் இல்லை. பிறந்தவுடன் ஆடோ, நயோ எழுந்து நடந்துவிடுகின்றன. ஆனால் ஒரு குழந்தை பிறந்தவுடன், எப்போது தவழும், நடக்கும், பேசும் போன்ற எதிர்பார்ப்புகள் பெற்றோருக்கும் பிறந்துவிடும். உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாகக் கட்டமைக்கப்பட்டதாகும். குறிப்பிட்ட காலத்தில்தான் (வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளைச் செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும். இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வயதிற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது. இவ்வளர்ச்சி எல்லையானது குழந்தையின் உடல், உள்ளம், மொழி ஆகியவற்றை ஒருங்கிணைத்த செயல்பாடாகும். இவ்வளர்ச்சி நிலைகள் இவ்வலகில் விளக்கப்பட்டுள்ளன.

ஓர் உயிரியின் உருப்பெருக்கம் அல்லது அளவு அதிகரித்தலை 'வளர்ச்சி' (Growth) என்று கூறுகிறோம். ஒரு குழந்தை வளர்ச்சியடையும் போது அதன் உயரம், எடை, மொத்த கனபரிமாணம் ஆகியவை அதிகரிக்கின்றன. வளர்ச்சி என்பதன் கீழ்வரும் மாற்றங்களைப் புறவயத்தன்மையோடு உற்றுநோக்கவும், அளவிடவும் முடியும். மேம்பாடு(Development) என்பதன் ஓர் உட்கூறு வளர்ச்சியாகும். ’மேம்பாடு’ என்பதன் அளவீட்டுக் கூறு வளர்ச்சியாகும்.

• வளர்ச்சியின் இயல்புகள்
  • ஓர் உயிரியின் உருவ அளவும், எடையும் அதிகரிக்கும்போது வளர்ச்சியடைவதாகக் கருதப்படுகிறது.
  • வளர்ச்சி, அளவீட்டுக்குட்பட்டதால், அது அதிகரிக்கும்போது பெருக்கம் ஏற்படுகிறது.
  • வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருப்பதில்லை; முதிர்ச்சிக்குப்பின் நின்று போகும்.
  • வளர்ச்சியால் முன்னேற்றம் ஏற்படவோ, ஏற்படாமலோ போகலாம்.
  • எடுத்துக்காட்டாக தொடை தசைகள் நன்கு வளர்ந்து வலுப்பட்டால் குழந்தை நடக்கத் தொடங்கும். மாறாகத் தொடை சதையில் கட்டிகள் தோன்றுவதால் எந்தவிதப் பயனுமில்லை.
  • வளர்ச்சி விகிதம் ஒரே சீராக இருப்பதில்லை. குழவிப் பருவத்தில் வளர்ச்சி அதிகமாகவும் பிள்ளைப் பருவத்தில் குறைந்தும் பின்பு குமரப்பருவத்தில் மீண்டும் அதிகரித்தும் காணப்படும்.
  • ஒரு குழந்தையின் வளர்ச்சி, பிற குழந்தைகளின் வளர்ச்சியிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது.
  • உடலின் வெவ்வேறு பாகங்கள் வேவ்வெறு விகிதத்தில் வளர்ச்சி பெறுகின்றன.
• வளர்ச்சியின் படிநிலைகள்
  1. குழவிப்பருவம் (Infant)
  2. பிள்ளைப்பருவம் (Childhood)
  3. குமரப்பருவம் (Adolescence)
  4. முதிர்பருவம் (Adulthood)
  5. நடுநிலைப் பருவம் (Middle age)
  6. தளர்வுறும் பருவம் (Senescence)
  7. கிழப்பருவம் (Old age)

என்பனவாம். இப்பருவங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையில் சில ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலர் 3 முதல் 7 ஆண்டுகளை முன் குழந்தைப் பருவம் என்றும், 7-11 ஆண்டுகளைப் பின் குழந்தைப் பருவம் என்றும் குறிப்பிடுவர்.

பிறப்பு முதல் ஐந்தாண்டு முடிவுறும் வரையிலான வளர்ச்சிப்பருவம் குழவிப்பருவமாகும். இப்பருவம் பிறவற்றிற்கு அடித்தளமாக அமைகிறது. ஐந்துக்கு மேல் (5+) சுமார் பன்னிரண்டு வயது வரைப் பிள்ளைப்பருவம் நீடிக்கிறது. தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள் இப்பருவத்தினராவர். சில மனவியலறிஞர்கள் குழவிப்பருவம் 3 வயதுடன் முடிவடைகிறதெனக் கருதி, 3 முதல் 6 வயது வரையிலான வளர்ச்சி ஆண்டுகளை முன் பிள்ளைப் பருவமென்றும், 6 முதல் 12 வயது வரை பின் பிள்ளைப்பருவமென்றும் குறிப்பிடுகின்றனர்.

பிள்ளைப் பருவத்திற்கும் முதிர் பருவத்திற்குமிடையே (12+ முதல் சுமார் 18/20 வயதுவரை) உள்ளது குமரப்பருவம் ஆகும். இப்பருவத்தின் இறுதியில் ஒருவன் உடல், மற்றும் மன முதிர்ச்சி பெற்று முதிர் பருவத்தில் அடியெடுத்து வைக்கிறான். முதிர் பருவம் 20 ஆண்டில் பொதுவாகத் தொடங்கி 35 ஆண்டு வரை நீடிக்கிறது. இப்பருவத்தில் நம் உடலும் மனமும் முழுத்திறமையுடன் செயற்படும். 35 முதல் 65 ஆண்டு வரையிலான நடுநிலைப் பருவத்தில் வாழ்க்கையின் முழுமையான முன்னேற்றத்தை ஒருவன் சாதாரணமாக அடைகிறான். இதன் பின்னர், சுமார் 70 ஆண்டுகள் வரை மனிதனது உடற்சக்தியும் ஓரளவு மனத்திறன்களும் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கி, கிழப்பருவத்தை எட்டும். இது இறத்தலுடன் முடிவடைகின்றது.

பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்குப் பொருத்தமான கல்வி நிலைகள் பற்றி இங்குக் குறிப்பிடுதல் பயனுள்ளது.

வ. எண். வளர்ச்சிப் பருவம் கல்வி நிலை
1. குழவிப்பருவம் (பிறப்பு 3 வயது வரை) பெற்றோரைச் சார்ந்து குடும்பத்தில் பல பயனுள்ள அனுபவங்களைப் பெறும் நிலை
2. முற்பிள்ளைப் பருவம் (3 -,5+ வரை ) மழலையர் பள்ளி, மாண்டிசோரிப் பள்ளி, கிண்டர்கார்டன் பள்ளி, முன் ஆதாரப் பள்ளி, பால்வாடிப் பள்ளி
3. பிள்ளைப் பருவம் (5 + 12/14 வரை) தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் தொடக்க வகுப்புகள் 1 முதல் 8 வரை
4. குமரப் பருவம் (12 + 18/20 வரை) உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி
5. குமரப் பருவ இறுதியாண்டுகள் முதிர் பருவத் தொடக்க ஆண்டுகள் (18 - 21) கல்லூரிக் கல்வி
6. முதிர்ப்பருவம் / நடுநிலைப் பருவம் முறைசாராக் கல்வி, திறந்தவெளிக் கல்வி போன்றன.

இன்று வாழ் நாள் முழுவதும் கல்வி என்னும் கருத்து கல்வியாளர்களால் வலியுறுத்தப்படுகிறது.

இப்பல்வேறு வளர்ச்சிப் பருவங்களுள் முதல் மூன்று அல்லது நான்கு பருவங்கள் பற்றி ஆசிரியர்கள் விவரமாக அறிந்து கொள்வது அவசியமாகும். இவை பற்றிச் சிறிது கவனம் செலுத்துவோம்.

ஓர் உயிரியின் உருவத்திலோ அல்லது அமைப்பிலோ ஏற்படும் மாற்றங்களையும், அது இயங்கும் விதத்தில் ஏற்படும் மேம்பாடுகளையும் ஒட்டு மொத்தமாகக் குறிப்பதே ‘மேம்பாடு’ ஆகும். உயிரியின் செயல்பாட்டுத் தரத்தைக் குறிப்பதே மேம்பாடு ஆகும். வளர்ச்சி, முதிர்ச்சி, கற்றல் இவற்றின் கூட்டு விளைவால் ஏற்படுவது மேம்பாடு ஆகும்.

• மேம்பாட்டின் இயல்புகள்
  • உயிரியல் முதிர்ச்சி, அனுபவங்கள் ஆகியவற்றின் விளைவாக நிகழும் வரிசைநிலையில் தொடர் மாற்றங்களைக் கொண்டது மேம்பாடு. எனவே மேம்பாட்டிற்குக் குறிப்பிட்ட வரிசைநிலையும், திசையும் உண்டு.
  • முன்னேற்றம் தொடர்ச்சியானது; வயது வந்தவுடன் அல்லது பூப்பெய்தியவுடன் நின்று விடுவதில்லை.
  • உயிரி இயங்குவதில் ஏற்படும் முன்னேற்றம், அது தன்னுடைய சூழ்நிலைக்கு இசைவாகச் செயல்பட துணைபுரிகிறது.
  • உயிரியின் பல்வேறு அமைப்புகளையும், அவற்றின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து மேம்பட்ட இயக்கத்தைக் கொடுப்பதே மேம்பாடு ஆகும்.
  • அறிவுசார் திறன்கள், நாட்டம், ஆர்வம், நுண்ணறிவு ஆளுமை போன்ற கூறுகளில் ஏற்படும் முன்னேற்றத்தில் தனியாள் வேற்றுமைகள் காணப்படுகின்றன.
  • ஒருவரின் பல வளர்ச்சி நிலைகளில் காணப்படும் மேம்பாடு ஒரே சீராக இருப்பதில்லை.
  • வளர்ச்சியில்லாமலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எடுத்துகாட்டாக குள்ளமாக இருப்பவர்கள் கூட உடலியக்கத்தில் வலுவுடன் காணப்படுவர்.
  • மேம்பாடு ஒருவரது சூழ்நிலையால் பெரிதும் தீர்மானிக்கப்படுகிறது.
  • மேம்பாடு, தரத்தோடு தொடர்புடையதால், அதைத் துல்லியமாக அளக்க முடியாது; கணிக்க முடியும்.
  • மேம்பாடு பன்முகத் தன்மை கொண்டது.
  • மேம்பாடு தொடர் நேர்கோடாக அமையாமல், சுருள் வடிவில் அமைகிறது.
• மேம்பாட்டின் பரிமாணங்கள்

மேம்பாட்டின் பரிமாணங்கள் பல நிலைகளில் உள்ளன. அவற்றுள் சில.

குழந்தையின் முழுமையான வளர்ச்சி நிலைகள்

  1. உடல் மற்றும் செயல் வளர்ச்சி
  2. அறிதிறன் வளர்ச்சி
  3. மனவெழுச்சி வளர்ச்சி
  4. சமூக வளர்ச்சி
  5. ஒழுக்க வளர்ச்சி
உடல் மற்றும் செயல் வளர்ச்சி

உடல் வளர்ச்சியில் உடற்கூறு வளர்ச்சி உடலியல் வளர்ச்சி என இரு வகைகளாகக் கூறுவர். உடலியல் வளர்ச்சி என்பது உயரம், எடை, எலும்பின் தன்மை, பார்த்தல், கேட்டல் போன்ற புலன் உறுப்புகளின் வளர்ச்சியினை குறிப்பதாகும். உடலில் இயங்க கூடிய பகுதிகளான இரத்த ஓட்டப்பகுதி, நரம்பு மண்டலம், சுவாச மண்டலம், தசைகளின் தொகுதி போன்றவற்றில் எழும் மாற்றங்கள் உடலியல் வளர்ச்சி எனப்படும். செயல் வளர்ச்சி என்பது குழந்தைகளின் கை கால்கள், உடலின் பல்வேறு தசைகள் போன்றன வலுப்பெற்று இணைந்த வகையில் இவை திட்டமாகவும் வேகமாகவும் செயற்படுதலைக் குறிப்பதாகும். இவற்றை கையாளும் திறன்கள் என்றும் கூறுவர். வேண்டும். அப்போதுதான் பன்மொழிப்புலமையை எளிதில் பெறமுடியும்.

உடல் வளர்ச்சிக்கும் செயல் வளர்ச்சிக்கும் இடையே நுண்ணிய வேறுபாடுகள் இருந்தபோதிலும், உடல் வளர்ச்சியும் செயல் வளர்ச்சியும் இணைந்தே ஏற்படுவதால், இவை பொதுவாக உடல் வளர்ச்சி என்றே குறிப்பிடப்படுகிறது.

அறிதிறன் வளர்ச்சி

அறிதிறனின் கூறுகளான கற்பனை செய்தல், சிந்தித்தல், ஆராய்ந்தறிதல், புலன்காட்சி, நினைவிலிருத்தல், வேறுபடுத்துதல், பொதுமைப்படுத்துதல், தொடர்புபடுத்தல் ஆகியவற்றில் ஏற்படும் மேம்பாடுகளையும், அதனால் விளையும் பொருளறிவுப் பெருக்கத்தையும் குறிக்கின்றது. பள்ளிகளில் சிறு குழந்தைகளுக்குக் கற்பித்தலில் அவர்களது இயல்பான ஊக்கங்களைத் தூண்டும் வகையில் கள்பித்தல் முறை அமைதல் வேண்டும். விளையாட்டு முறை, கண்டறி முறை, செய்த் கற்றல் முறை, பல தரப்பட்ட காட்சி கேள்வி துணைக் கருவிகளைக் கற்பித்தலில் பயன்படுத்துதல் போன்ற பாட இணைச் செயல்பாடுகள் பள்ளியில் அறிவு வளர்ச்சிக்கு உதவுவனவாகும்.

மனவெழுச்சி வளர்ச்சி

குழந்தை பிறப்பின்போது இருக்கும் பொது மனவெழுச்சியான “பொதுவான பரபரப்பிலிருந்து’, படிப்படியான வளர்ச்சி மூலம் பயம், கோபம், மகிழ்ச்சி, துக்கம், அன்பு, கருணை, அருவருப்பு போன்ற பல்வேறு மனவெழுச்சிகள் அமையப் பெற்று இவற்றை பொருத்தமான நேரத்தில் பொருத்தமான வெஐயில் வெளிப்படுத்தக் கற்று, உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் மனவெழுச்சி முதிர்ச்சிநிலையை அடைதலே மனவெழுச்சி வளர்ச்சி ஆகும்.

உடல் வளர்ச்சியில் உடற்கூறு வளர்ச்சி உடலியல் வளர்ச்சி என இரு வகைகளாகக் கூறுவர்

சமூக வளர்ச்சி

பிறக்கும்போது மிருக இச்சையுடன் காணப்படும் குழந்தை, சமூக நெறிப்படுத்தப்பட்டு, தான் வாழும் சமூகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் பண்பைக் கற்றலையே இது குறிக்கின்றது. சமூகத்தில் பிறருடன் தொடர்பு கொண்டு இணக்கமான முறையில் பழகத் தேவைப்படும் திறன்கள் மெதுவாக வளர்ச்சி பெறுதல் சமூக வளர்ச்சி எனப்படும். சமூக உணர்வினைப் பெற்றுத் திகழ்தல் மற்றும் சமூகச்செயல்களில் பொறுப்புடன் பங்கேற்றல் ஆகியவை சமூக வளர்ச்சியில் அடங்கியுள்ள இரு முக்கிய நிலைகளாகக் கருதப்படுகின்றன.

ஒழுக்க வளர்ச்சி

சமூக அறநெறிகளை அறிந்து அதன்படி ஒட்ட ஒழுகல் ஒழுக்க வளர்ச்சி எனப்படும. சரி, தவறு என்று பிரித்தறியும் திறனைப் பெற்று (ஒழுக்க உணர்வைப் பெற்று), தனக்கென ஒழுக்கக் கோட்பாட்டை அமைத்துக் கொள்வதையே ஒழுக்க வளர்ச்சி குறிப்பிடுகிறது. சமூக வளர்ச்சியும், ஒழுக்க வளர்ச்சியும் இணைந்தவை. சமூக நடத்தை, அறநெறிகளின் அடிப்படையில் அமைந்திருந்தால் அதன் பயனை அதிகரிக்க வல்லது. பல சமூகப் பண்புகள் சிறப்பான ஒழுக்கப் பண்புகளாகவும் உள்ளன. முழுமையான சமூகவியல்பு பெற்றவன் நல்லொழுக்கம் உடையவனாகவும் இருத்தல் வேண்டும். அறப்பண்புகளையும், ஒழுக்க மதிப்புகளையும் கல்வி வலியுறுத்த வேண்டும்.

வாழ்வின் கால அளவு பல படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அப்பிரிப்புகள் வளர்ச்சி, மேம்பாடு பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதற்கு ஏதுவாகப் பிரிக்கப் பட்டனவேயன்றி, தருக்க முறையிலான முறையன்று.

மேம்பாடு தெடர்ச்சியானது. ஒவ்வொருவரின் வாழ்விலும் மேம்பாடு படிநிலைகள் வெவ்வேறு வயதில் வெவ்வெறு விகிதத்தில் காணப்படுகின்றன. ஒவ்வொரு படி நிலையிலும் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். அவற்றிற்கு அவ்வப்போது அடுத்த படிநிலையினை அடையும் முன்னர்த் தீர்வு காணவேண்டும். அவ்வாறு காணப்பட வில்லையாயின் முதிர்ச்சியின்மை, நெறி பிறழ்ச்சி ஆகியன தொடர்பான சிக்கல்கள் எழக்கூடும். வாழ்வின் கால அளவில் அமையும் மேம்பாட்டில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. ஆனால் பொதுவாக உளவியலாளர்கள் பகுத்துக் காட்டியுள்ள மேம்பாட்டுப் பிரிவுகள் கீழுள்ளவாறு அமையும்.

வ. எண். பிரிப்பு காலஅளவு
1. குழவிப் பருவம் கரு உருவானதிலிருந்து பிறப்பு வரை
2. பிறப்பிற்கு முன் கரு உருவானதிலிருந்து பிறப்பு வரை
3. குழந்தைப் பருவம் இரண்டாவது வாரம் முதல் 2 ஆண்டுகள் வரை
4. பிள்ளை முன் பருவம் 2 வயது முதல் 6 வயது வரை
5. பிள்ளை பின் பருவம் 6 வயது முதல் 12 வயது வரை
6. பூப்புப் பருவம் 12 வயது முதல் 13/14 வயது வரை
7. குமரப் பருவம் 13/14 வயது முதல் 18 வயது வரை
8. இளமை முன் பருவம் 18 வயது முதல் 40 வயது வரை
9. நடுப்பருவம் 40 வயது முதல் 60 வயது வரை
10. முதிர் அல்லது தளர்ச்சிப் பருவம் 60 வயது முதல் இறப்பு வரை

வாழ்வுக் காலம் பத்துப் பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பத்துள், பள்ளிக்கூட வயதினைப் பிள்ளை முன்பருவம், பிள்ளைப் பின் பருவம், குமரப் பருவம், ஆகியன பற்றி மட்டும் இங்குக் காணப்படுகிறது. இப்பருவங்களில், உடல், அறிவு, சமூகம், மனவெழுச்சி ஒழுக்கம் ஆகியன சார்ந்த மேம்பாடுகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. மேலும் அறிவு சார் மேம்பாடு தொடர்பாகப் பியாஜே, புரூனர் ஆகியோர் வெளிப்படுத்திய கருத்துகளும் இப்பகுதியில் காணப்படுகின்றன. இனி அப்பருவங்கள் ஒவ்வொன்றிலும் காணப்படும் மேம்பாடு பற்றிக் காண்போம்.

• பிள்ளை முன் பருவம்

பிள்ளை முன்பருவத்தில் பல் வகைப்பட்ட மேம்பாடுகளின் தன்மைகள் தொகுப்பு: அட்டவணை - 1

உடல் திறன் (செயல்திறன் மேம்பாடு) அறிதிறன் மேம்பாடு மனவெழுச்சி மேம்பாடு சமூக மேம்பாடு ஒழுக்க மேம்பாடு
வளர்ச்சி குறைவான விகிதத்தில் ஏற்படுகிறது. சூழ்நிலைகளை அறியும் ஆர்வம், புதிய பட்டறிவை எதிர்கொள்ளும் விருப்பம் ஆகியன காணப்படுகின்றன. புலம்படு பொருள் சார்ந்து மனவெழுச்சிகளை வெளிப்படுத்தும் திறன். சுயச்சார்பு உணர்வு மேம்படுகிறது. தான் செய்த செயல்களின் விளைவுகளிலிருந்து அளவை சரி, தவறு என முடிவுக்கு வருதல்.
பிற பருவங்களை நோக்க வளர்ச்சியில் சீரான தன்மை காணப்படுகிறது. உடல், சமூக நடைமுறை சார்ந்த பொருண்மைகளைப் புரிதல். மனவெழுச்சிகள் தற்காலிகமானவை. வீட்டிலிருந்து அதற்கு அப்பாற்பட்ட சமூகச் சூழல்கள் விரிவடைகின்றன. பிறரைத் தன்பால் ஈர்க்க வேண்டும் எனும் விருப்பு, கீழ்ப்படியாமை, வழியாக வருவது.
நடு உடல் (Trammel) பெரியவர்களைப் போன்றே விகித அளவில் வளர்கிறது. பருமன், அளவு, நிறம், நேரம், தொலைவு, ஆகியன பற்றிய அறிவு ஏற்படுகிறது. மனவெழுச்சிகளை மறைப்பதற்கு இயலாத பருவம் இரு பாலினக் குழந்தைகளும் சேர்த்து விளையாடுவர். மிகவும் செல்லத்தோடு வளர்க்கப்படும்போது தன் நலம் மிக்க நிலையிலும், எதிர்ப்புத் தன்மையுடனும், அடுத்தவர் உரிமைகளை மதியாதவாறும் இருப்பர்.
ஏறுதல், குதித்தல், எறிதல், பந்தைப் பிடித்தல் முதலிய செயல்திறன் மேம்பாடுகள் ஏற்படுகின்றன. நினைவாற்றல் பெறுகிறது. இப்பருவத்தில் குருட்டு மனப்பாடத்திறன் ஏற்படுகிறது. இப்பருவத்தில் அறியப்படும் பொதுவான மனவெழுச்சிகள்: சினம், அச்சம், பொறாமை, ஆர்வம் (Curiosity), வெறுப்பு, மகிழ்ச்சி, மற்றும் பாசம். குழு விளையாட்டு, செயல்பாடுகளில் விருப்பம் கொள்வர். கண்டிப்பாக வளர்க்கப்படுவோர், மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருப்பர். இந்நிலை பெற்றோரிடம் தான்; மற்றவரிடம் எதிர்ப்புணர்வோடு இருப்பர்.
தசைகளின் மேம்பாடு விரைவான வேகத்தில் ஏற்படுகிறது. படைப்பாற்றல் திறன் ஏற்படத் தொடங்குகிறது. தன்னடக்க மனப்பான்மை பெற்றுப் பிற பிள்ளைகளோடு பழகுதல். நண்பர்களோடு ஒத்துழைத்தல், கூட்டுணர்வு முறையில் செயல்படுத்தல், ஒரே தன்மையான பண்புகள் கொண்டாரோடு சேர்தல்.
தானே உண்ணுதல், தானே உடையணிதல், குளித்தல், பல்துலக்கல், விளையாடுதல், பொம்மைகள் கொண்டு விளையாடுதல் முதலிய செயல்திறன்கள் ஏற்படுகின்றன. அறிவு சார்ந்த செயல்பாடுகளில் நீண்ட நேரம் ஈடுபட முடிகிறது. தங்களின் செயல்பாடுகளுக்குச் சமூக இசைவினை எதிர்பார்த்தல். தேவதைக் கதைகள், விலங்குகள் பற்றிய கதைகள் முதலியனவற்றை விரும்புதல்.
பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் நிலைக்கத் தொடங்குகின்றன. சூழ்நிலை பற்றிய வினாக்களைக் கேட்கத் தொடங்குகிறது. விளையாட்டு வழி சமூக உறவை ஏற்படுத்துதல்.
குறியீடுகள், மொழித் திறன், வரைதல், சிக்கல் தீர்வு தொடர்புகளைப் புரிந்து தீர்வு காணல் முதலிய திறன்கள்.
பொருண்மைகளைப் புரிந்து கொள்ளும் திறன் இப்பருவத்தில் நிகழும் சிறப்பு.

வ. எண். வளர்ச்சி மேம்பாடு
1. வளர்ச்சி என்பது உடல் உறுப்புகளின் பெருக்கத்தால் ஏற்படுகிறது. எனவே அதை மிகத் துல்லியமாக அளந்துவிடலாம். மேம்பாடானது ஓர் உயிரியின் அமைப்பிலும், செயற்பாட்டிலும் தோன்றும் மாற்றங்களால் ஏற்படுவது.
2. வளர்ச்சி என்பது புறவயாத்தன்மை கொண்டது. எனவே, உற்றுநோக்கலின் மூலமாக அதனைக் கண்டறிந்துவிடலாம். மேம்பாடு என்பது அதன் தரத்தோடு இணைந்ததால் அவற்றைத் துல்லியமாக அளவடுதல் என்பது இயலாது. மனிதனின் நடத்தைக் கோளங்களை தொடர்ந்து கவனிப்பதின் மூலமாக முன்னேற்றத்தைக் கண்டறிய முடியும்.
3. வளர்ச்சி என்பது வாழ்நாள் முழுவதுமான தொடர் செயல்பாடு அல்ல. மனிதன் பருவ முதிர்ச்சி அடைந்தவுடன் வளர்ச்சியானது நின்றுவிடும். மேம்பாடு என்பது ஒரு மனிதன் அவன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ஏற்படக் கூடிய ஒன்று.
4. வளர்ச்சி என்பது மேம்பாட்டின் ஓர் உட்கூறு ஆகும். மேம்பாடு பலவகையான தன்மைகளைக் கொண்டது. சிக்கல் மிகுந்தது.
5. மனிதனின் உடலில் உள்ள அனைத்துப் பாகங்களிலும் வளர்ச்சி ஏற்படுகிறது. அனைத்து உயிரினங்களின் தொடர் இயக்கத்தால் ஏற்படும் ஒட்டுமொத்த மாறுபாடே மேம்பாடு எனப்படும்.
6. வளர்ச்சி எப்பொழுதும் ஒரே திசையில் அமைவதன்று. மேம்பாடானது ஒரு வரிசைமுறையில் திசையுடன்கூடிய மாற்றத்தைக் கொண்டது.
7. வாழ்க்கையின் எல்லாப் பருவங்களிலும் வளர்ச்சி விகிதமானது ஒரே சீரான முறையில் அமைவதில்லை. மேம்பாட்டின் விகிதமும் வாழ்க்கையின் அனைத்துப் பருவங்களிலும் ஒரே சீரான முறையில் அமைவது இல்லை.
8. தனியாள் வேற்றுமையானது வளர்ச்சியில் காணப்படும். உடல், அறிவு, ஒழுக்கம், சமூக உணர்வு, மன எழுச்சி போன்ற பல்வகை முன்னேற்றங்கள் குழந்தைகளின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும்.
9. வளர்ச்சி என்பது மரபினால் மட்டுமே பெரிதும் தீர்மானிக்கப்படுகிறது. மேம்பாட்டினைது தீர்மானிப்பதில் கல்வி அறிவும் அனுபவங்களுமே முக்கியப் பங்கு பெறுகின்றன.
10. முன்னேற்றத்திற்கு வளர்ச்சியானது ஒரு வழிகோலாக இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். ஒரு குறிப்பிட்ட வகையிலான மேம்பாடானது பிற மேம்பாடுகளின் பிற சூழல்களில் ஏற்படும் மேம்பாடுகளுக்கு துணை நிற்கிறது. அனைத்து மேம்பாடுகளும் ஒருங்கிணைந்து காணப்படுகின்றன.