3.1 கேட்டல் திறன்
கேட்டல் திறன்
மொழியைக் கற்கும் போக்கில் முதல்படி அடிப்படைத் திறன்களைப் பெறுதல் ஆகும். மொழி தகவல் பரிமாற்ற ஊடகமாக மட்டுமின்றித் தகவல்களுக்குத் தோற்றுவாயாகவும் அமையும். எண்ணங்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியதைத் தம்முள்ளும் பிறருள்ளும் பதிப்பதற்கும் பயனுடையதாகத் திகழ்கிறது. மொழியின் பயன் ஒருவருக்குக் குறைவின்றிக் கிடைக்க, அடிப்படைத் திறன்களைத் தொடக்கத்திலும் உயர்நிலைத் திறன்களை வளர்ச்சி நிலையிலும் பெற வேண்டும்.
மொழியின் அடிப்படைத் திறன்கள், அவை பெறப்படுகின்ற நிலையில் கொள்திறன், வெளியிடு திறன் என இருவகைப்படும்.
கேட்டலும் படித்தலும் கொள் திறன்கள்.
பேசுதலும் எழுதுதலும் வெளியிடு திறன்கள்.
இவை : கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் என நான்காகப் பிரிக்கப்படுகின்றன.
கல்வி ஏற்பாட்டில், தமிழ்மொழிக் கல்வி, தொடக்க நிலை வகுப்பிலிருந்தே இடம் பெறுவதால் இந்நான்கு திறன்களும், தாய்மொழிச் சூழலிலும் நடைமுறை பயன்பாட்டு அடிப்படையிலும் தொடக்கநிலை வகுப்புகளிலிருந்து வளர்க்கப்படுகின்றன.
இந்நான்கு திறன்களையும் வளர்ப்பதற்குக் கல்வியியல் அணுகுமுறைகள் உள்ளன. அவை திறனின் தன்மை, திறன் வளர்க்கும் முறைகள், திறன் வளர்ச்சியைத் தேர்ந்தறியும் முறைகள் ஆகியனவற்றுள் அடங்கும்.
- சொற்களஞ்சியப்பெருக்கம் அடைதல்
- சொற்களஞ்சிய வளர்ச்சி
- சொற்கள் பயன்பாட்டை ஏற்றல்
- நினைவாற்றலை வளர்த்தல்
- எண்ணத்தூண்டலை ஏற்படுத்துதல்
- பொருள் புரிதல்
- தற்கருத்து வெளிப்பாடு
- கற்பனைத்திறன் மேம்பாடு.
- தகவல் தொடர்பு திறன்.
சாதாரணமாகக் கேட்டல், பல்வேறு நிகழ்ச்சிகளைக் கேட்டல் என்பது அவரவர் மனநிலை மற்றும் தேவைக்கேற்ப மாறுபடும். எவ்வகைக் கேட்டல் பெரும்பாலும் நடைபெறுகிறது என்பதைக் காண்போம்.
வெறும் கேட்டலை எளிய நிலை கேட்டல் என்கிறோம். ஏனெனில் எவனொருவன் அருகில் பேச்சு ஒலிகள் எழுகிறதோ அங்கு அனைவரும் கேட்கின்றனர். இதனையே வெறும் கேட்டல் என்கிறோம்.
சான்று : நாம் தெருவில் செல்லும் வழியில் ஏதோ ஒரு மேடைப் பேச்சாளர் பேசுவதைக் கேட்டல்.
உற்றுக்கேட்டல் வெறும் கேட்டலைவிடச் சற்று உயர்ந்த நிலையாகும். ஒருவர் கூறும் கருத்துகளை உற்றுக்கேட்டு அதிலுள்ள செய்திகளைப் புரிந்து கொள்ள முனைவதே உற்றுக்கேட்டல் என்கிறோம்.
செவிமடுத்தல் என்பது மொழிப் பொருள் கொள்ளல் என்பதாகும். கூறுகின்ற கருத்தின் பொருளை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல் ஆகும். இதனையே செவிமடுத்தல் என்கிறோம்.
நுட்பமாகக் கேட்டல் கல்விச் சூழலுக்கு உரியது. கற்றலுக்கும், சிந்தனைக்கும் ஏற்றது. நுட்பமாகக் கேட்டல் என்பது ஒரு சொல்லைக் கேட்கும் திறனில் தொடங்கி ஒரு கட்டுரை அல்லது செய்யுள் முழுநிலையைக் கேட்கும் திறனில் பெறும் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சுருங்கக்கூறின்
சொல்- பொருள்- தொடர்- அமைப்பு- முன்னிலை என்ற அடிப்படையில் நடைபெறுகிறது.
நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் கேட்டல் சூழல்களில்
- இயல்பான பேச்சு அல்லது உரையாடுதல்
- கேட்போர் எதிர்ப்பார்ப்பும் நோக்கமும்
- பார்த்தலும் கேட்டலும் இணைதல்
- கேட்கும் போக்கில் துலங்கல்
- பேசுபவரை ஈர்த்தல்
ஆகிய இயல்புகள் அறியப்படுகின்றன.
கடைத்தெரு, மக்கள் கூடும் பொது இடங்கள். பொழுது போக்கு அரங்குகள் நண்பர்கள், உறவினர்கள் உரையாடல் வேளைகள் போன்றவற்றில் இயல்பாகப் பேசுதல் அல்லது உரையாடுதலைக் கேட்கலாம். இவற்றிலும் இவை போண்று அமைக்கப்படும் (நாடகம், திரைப்படம் போன்றவற்றில்) செயற்கைச் சூழல்களிலும் இயல்பாகப் பேசுதலைக் கேட்கலாம். இவற்றில் குறைசொல் ஒலிப்பு, ஒலிப்பு பிறழ்ச்சி. பேச்சு வழக்குச் சொற்கள், வெற்றொலிகள், நிரப்புத் தொடர்கள் மீண்டுரைக்கப் போக்கு ஆகியன காணப்படுகின்றன.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் இயல்பாகப் பேசும்போது பெரும்பாலான சொற்களை முழுமையாக ஒலிப்பதில்லை. அவன் வந்தான் என சொல்லும் போது அவன் வந்தான் ஆகிய இரு சொற்களிலும் உள்ள ன் தெளிவாக ஒலிக்கப் பெறுவதில்லை. பேசும்திறன் வளர்ச்சிக்கு இத்தகைய தெளிவற்ற ஒலிப்புக் குறைபாடு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நடைமுறையில், தாய்மொழியாகத் தமிழைப் பேசுபவர்களிடம் கூட பிழைபட்ட ஒலிப்பினைக் காணமுடிகிறது. ல. ள ஆகியனவும் ழ, ள ஆகியனவும் ன, ண ஆகியனவும் ஒன்றுக்கொன்று மாறுபட்டு ஒலிக்கப்படுகின்றன. மாறுபட்ட ஒலிப்பைக் கேட்டலால் அது பிழைபட மனத்தில் பதிகிறது. வட்டார நிலையிலும் பிழைபட்ட ஒலிப்புகள் காணப்படுகின்றன. வாழைப் பழம் என்பதை வாயப் பயம் என ஒலிப்பதும் வியாழக்கிழமை என்பதை வியாசக்கிளமை என ஒலிப்பதும் வட்டார நிலையில் பிழைபட்ட ஒலிப்புக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
நடைமுறைப் பேச்சில், இலக்கிய வழக்கில் இல்லாத சொற்களைக் கேட்க முடிகிறது. உறவுப் பெயர்கள், உணவுப் பெயர்கள் போன்றன பேச்சு வழக்கிலேயே பெரும்பாலும் இடம் பெறும் சொற்களாகும். மேலும் பாலுணர்வுச்சொற்கள், பொருள் குறிப்புச் சொற்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன.
நடைமுறை வாழ்க்கையில் ஒரு பேச்சைக் கேட்பவர் தனக்குள்ளே முன்னரே ஓரளவு தீர்மானிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கொண்டு கேட்கிறார். அவ்வாறில்லையெனில் கேட்க விரும்புவதில்லை. அரசியல் சூழ்நிலைகளை அறிய விருப்பம் உடையவர் அரசியல் மேடைகளில் பேசுவதைச் செவிமடுக்கிறார். ஓரிடத்தில் சமயச் சொற்பொழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அவ்வழியே சமயத்தில் பற்றில்லாதவர் செல்வாரேயாயின் அச்சொற்பொழிவை கேட்க விரும்புவதில்லை. இவ்வாறாகக் கேட்போர் எதிர்பார்ப்பும் நோக்கமுமே அவரைக் கேட்கத் தூண்டுகின்றன.
கேட்டல் செவி சார்ந்த செயல். எனினும் கேட்பவர் செவிக்கு மட்டுமே வேலை கொடுப்பதில்லை. ஒருவர் பேச்சைக் கேட்கும் போது அப்பேச்சு எங்கிருந்து வருகிறதெனப் பார்த்தவாறே கேட்க விரும்புகிறார். வகுப்பறையில் ஆசிரியர் பேசும்போது பேச்சினைக் கேட்க விரும்பும் மாணவர் அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டால்தான் கேட்டது போன்ற உணர்ச்சியைப் பெறுகிறார். வானொலி கேட்டல், தொலைபேசியில் கேட்டல் போன்ற விதி விலக்கான சூழல்களில் தவிர பிற வேளைகளில் பார்த்தலும் கேட்டலும் இணைந்தே நடைபெறுகின்றன.
எதிர்பார்ப்பு. நோக்கம் ஆகியன கொண்டு கேட்பவர்கள் அவ்வப்போது துலங்கல்களை வெளிப்படுத்துகின்றனர். எல்லாவற்றையும் கேட்ட பின்னர் துலங்கலை வெளிப்படுத்தும் நிலை மிக அரிதாகும். துலங்கல்கள், மெய்ப்பாடுகளாக வெளிப்படும். கரவொலி எழுப்பல். முகமலர்ச்சி காட்டல், புன்முறுவல் பூத்தல் போன்றன கேட்டலில் வெளிப்படும் செய்திகள், கருத்துகள் ஆகியவற்றிற்கு ஏற்பத் தரும் துலங்கல்களாகும். முகஞ் சுழித்தல், கேட்டலிலிருந்து விலகி நிற்றல் நெற்றியைக் கையால் பிசைதல் போன்றன கேட்டலுக்குக் தவிர்ப்புக் காட்டும் துலங்கல்களாகும்.
கேட்டலில மற்றுமொரு நடைமுறை இயல்பு பேசுபவரை ஈர்ப்பதாகும். கேட்போரை நோக்கிப் பேசுவோர் தகவல்களை வெளியிடும் போது கேட்பவரின் ஏற்புத் துலங்கல்கள் பேசுபவரை ஊக்கமூட்டுவனவாக அமையும், கேட்டல் இயக்கநிலையில்லாச் செயலாயினும் இயக்கச் செயலாகிய பேசுதலுக்கு உரமூட்ட வல்லது.
கல்வி பெறுவதற்கு வாயிலாக அமையும் கேட்டல் திறனைப் பல்வேறு கூறுகளாக நோக்க முடியும், கேட்டலின் போது சிலவேளை, பேசப்படுகின்ற பொருளின் தன்மை மட்டும் உணரப்படுகிறது. சிலவேளை பேசியவரின் மொழிகள் மனத்தில் பதிகின்றன. எனவே கேட்டல் திறனையும் உட்திறன்களாகப் பிரித்துக் காணலாம்.
தகவல் தன்மையினை உணர்தல், பேசப்பட்ட மொழிகளை நினைவிற் கொள்ளல். புதிய சொற்களைப் புரிதல். தகவல்களை நுனூகுதல், பேசப்படுவனவற்றில் அமைந்த உணர்ச்சிகளைப் புரிதல், பேசப்படும் மொழிகள் ஒலி அழுத்தங்களுக்கு ஏற்ப பொருள் உணர்தல், பேசப்படவனவற்றில் அமைந்துள்ள பிழைகளை இனங்காணல், கேட்கப்படும் தகவல்கள் உள் வெளித்தொடர்புகளை எடுத்துக்காட்டல் போன்றவை. கற்றல் நோக்கில் அறியப்படுகின்ற கேட்டல் திறன் கூறுகளாகும்.
பேசப்படுகின்றதை இது முழுநிலையில் கேட்டலாகும். இத்தகைய கேட்டலில் கேட்பவர் பேசப்படும் அனைத்துத் தகவல்களையும் கூர்ந்து நோக்குவதில்லை. மேலோட்டமாகக் கேட்கிறார். ஒருவர் சாலை வழியே நடந்து செல்லும்போது, பொது மேடைப் பேச்சைக் கேட்பதாகக் கொள்வோம். மேடையில் பேசுவோர் பயன்படுத்தும் சொற்கள் அல்லது வெளிப்படுத்தும் செய்திகள் போன்றவற்றிலிருந்து பேசுபவர் சார்ந்த அரசியல் கட்சியை அறியமுடிகிறது. அவர் பேசிய கருத்துகளைக் கேட்பவர் உளம் கொள்ளா விட்டாலும் பேசும் பொருள் தன்மையினை மட்டும் உணருகிறார். இது மேலோட்டக் கேட்டல் எனப்படும்.
பேசப்பட்ட மொழிகளை நினைவில் கொள்ளுதல் நினைவாற்றல் திறனை வெளிப்படுத்துகிறது. இந்நிலை கற்பதில் சிறப்பிடம் பெறுகிறது. வரையறைகளை நினைவிற் பதிப்பதற்கும். படிப்பதற்கும், சொற் பொருள் வலுவூட்டத்திற்கும், நினைவாற்றல் திறன் துணைபுரிகிறது.
கேட்டலின் போது பேசுபவரால் பயன்படுத்தப்படும் புதிய சொற்களுக்கு முன் பின் அமைந்த மொழிகளை தொடர்புப்படுத்திப் பொருளறியப்படுகிறது. சொற்களுக்குப் பொருள் அறியும் திறன் கூர்ந்து கேட்டலால் ஏற்படுவதாகும். இது உள்ளோட்டக் கேட்டல் பண்பினைச் சார்ந்ததாகும்.
உள்ளோட்டக் கேட்டலில் தகவல்களை நுணுகுதலும் சாரும். பேசுபவரிடமிருந்து வெளிப்படும் தகவல்களில் பொதிந்துள்ள கருத்துக்களைப் புரிவதோடு அவற்றுள் அமைந்த ஏதுகள், விளைவுகள் ஆகியவற்றை கேட்டல் போக்கில் உணருகின்ற திறன் நுணுகுதலாகும். இத்திறன் கற்றலில் மேனிலைத் திறன்களை வளர்க்கும் வாயிலாகும்.
பேசுபவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளல், கேட்டல் திறக் கூறுகளில் உயர்நிலையினதாகும். இத்திறன் எதிர்நின்று பேசுபவரின் உள்ளப்பாங்கினை அறிவதற்குத் துணைபுரியும். கற்றல் சூழலில் இத்திறன் வளர்க்கப்படுவதற்காக, பொருத்தமான இலக்கிய வடிவங்களை பேச்சுப் பொருளாகக் கொள்ளவேண்டும். நாடகம், திரைப்படம் போன்றன இத்திறனை வளர்ப்பதற்குரிய சிறந்த ஊடகங்களாக அமையும்.
பேச்சு நிலையில் ஒலியழுத்தும், வெளிப்படுத்தப்படும் பொருளுக்கேற்ப அமைகிறது. பொருள் வெளிப்பாட்டில் ஒலியழுத்தம் கருதத்தக்க கூறாகும். கேட்டல் திறனை வளர்க்கும் போது ஒலியழுத்தத்தைப் புரியும் திறனையும் கருதுதல் வேண்டும்.
ஒலியழுத்தத்தைப் புரியும் திறன் இயல்பான பேச்சினை ஏற்பதற்குப் பெரிதும் பயனுடையதாகும். எனவே கேட்டல் திறனை வளர்க்கும் போது, வழங்கப்படும் பழகு செயல்களில் ஒலியழுத்தக் கூறுகள் அடங்கிய கற்றல் பகுதிகள் வழங்கப்பட வேண்டும்.
உன்னிப்பாகக் கேட்கப்படுவதையும் பேசப்படும் பொருள் மொழி, போன்றன கேட்பவர் அறிவுதிறத்துள் மொழி திறத்துள் அமைவதையும் உறுதிப்படுத்துவது பிழைசுட்டல் திறனாகும். பேசப்படும் பகுதியில் சொல், தொடர், நிகழ்வுப் பிழைகளைச் சுட்டுமாறான பழகு செயல், கூர்ந்து கேட்டலுக்குரிய வாயிலாக அமையும்.
கற்பிப்பு நோக்கங்களின் உயர் நிலை ஏலுமைகளான, பகுத்தல், தொகுத்தல், மதிப்பிடல் ஆகிய ஏலுமைகள் கேட்டல் பொருளின் தொடர்புகளை எடுத்துக் காட்டுவதால் வெளிப்படும். தொடர்புகள் கேட்டல் பகுதிக்குள்ளும் அமையலாம். கேட்டல் பகுதி சார்ந்து அதற்கு வெளியேயும் அமையலாம். தொடர்புகளை எடுத்துக் காட்டத் தக்க பழகு செயல்கள் மொழி சார்பாகவும். தகவல்கள் சார்பாகவும் வடிவமைக்கப்பட வேண்டும்.
தற்போதைய பாடத்திட்டத்தில் கீழ்க்காணும் மொழி (இலக்கியம்) வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
1. பாடல் 2. கதை 3, இருவர் உரையாடல் 4. இருவருக்கும் மேற்பட்டோர் உரையாடல் 5, செய்திகள் 6, விளக்கங்கள் (வருணனை) 7. கட்டளைகள் (ஏவல்தொடர்) 8. விடுகதைகள் - புதிர்கள் 9. வசனங்கள் 10. நாடகம் 11. வேண்டுகோள் (வியங்கோள்)
இவைபோன்ற இலக்கிய வடிவங்களை அதன் கடின நிலைக்கேற்ப உரிய வகுப்புகளுக்குத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். இவை கேட்டல் திறனை வளர்க்கும் வாயில்களாகும். இவற்றைப் பேச்சு ஊடகத்தால் வெளிப்படுத்திக் கேட்டல் திறனை வளர்க்கும் வாயில் களங்களாக்கலாம்.
கேட்டலின் தன்மைகளைக் கருத்திற் கொண்டு பல வகைப்பட்ட செயல்பாடுகளை ஆசிரியர்களே உருவாக்கிக் கொள்ளலாம். சிலவகைச் செயல்பாடுகள் கீழே தரப்படுகின்றன. அவற்றிற்கான எடுத்துக்காட்டுகள் அடுத்து வரும் பகுதியில் தரப்படுகின்றன.
குழந்தைகளுக்குக் கதை சொல்லுதல், அவர்களை ஒவ்வொருவாரகப் பாடச் செய்து பிற குழந்தைகளைக் கேட்கச் சொல்லுதல், ஒளிப்பதிவு நாடா போன்றவற்றைப் பார்க்கச் சொல்லுதல் போன்றன தொடக்கநிலைக் கேட்டல் செயலை ஊக்குவிப்பனவாகும். இவை போன்ற செயல்களில் குழந்தைகளின் கேட்டல் ஆர்வத்தினை அவர்கள் வெளிப்படுத்தும் முகக் குறிப்புகள், மெய்யசைவுகள், ஆகியனவற்றிலிருந்து அறியலாம். இத்தகைய செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தும் போது அவர்களிடம் வினாக்களைக் கேட்டு அவர்களைச் சலிப்படையச் செய்தல் கூடாது. மொழி சாராக் குறிப்புகளை அவர்கள் வெளிப்படுத்துவதைக் கொண்டு கேட்டல் ஆர்வத்தினை அறியலாம். நெடுநேரம் கேட்டலில் ஈடுபடச் செய்யும் பழகு செயல்களே இவை. தொடக்க நிலையில் இவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
சிறிய அளவிலான துலங்களைத் தரத்தக்க பழகு செயல்களிலிருந்து கேட்டல் திறனை வளர்க்க முடியும். அவை கட்டளைகளுக்கேற்ப செயல்படுதல் பொருள்களைக் குறித்துக் காட்டல், தவறுகளைச் சுட்டுதல், சரியா தவறா என கூறுதல், முறைப்படக் கோடிட்ட இடங்களை நிரப்புதல், வரையறைகளிலிருந்து சொற்களை அல்லது நிகழ்ச்சிகளை ஊகித்தல் (விடுகதை) போன்றன அவை.
கேட்டல் திறனை வளர்க்கவும், தேர்ந்தறியவும் நெடுந்துலங்கலைத் தரத்தக்க செயல்பாடுகளும் உள்ளன. அவை வினா-விடை, குறிப்பு எழுதுதல், சுருக்கி வரைதல், தொடர் கோடுகளை நிரப்பல் போன்றன. இவை உயர்நிலை, மேல் நிலை வகுப்புகளுக்குப் பொருத்தமுடைய செயல்பாடுகளாகும்.
சிக்கல் தீர்த்தல், நுணுகுதல் தன்மையான வினாக்களுக்கு விடையளித்தல் போன்றன விரிவுத் துலங்கல் சார்ந்த பகுழ செயல்பாடுகள். இவற்றின் வழியாகவும் கேட்டல் திறனை வளர்க்கலாம், தேர்ந்தறியலாம். இச் செயல்பாடுகள் மேனிலை வகுப்புகளுக்கு உரியவை.
கேட்டல் திறனில் முறையான பயிற்சி கொடுக்க ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
பேசுபவருடைய மொழி வகுப்பு நிலைக்கேற்ப அமைதல் வேண்டும். இல்லையெனில் மாணவர்கள் சொற்களின் ஒலியை மட்டும் கேட்பர். அவர்களால் பொருள் உணர்ந்து கொள்ள முடியாது. எனவே அதற்கேற்ற வகையில் எளிய மொழியில் பேசுதல் வேண்டும்.
ஆசியர் பாடம் நடத்தும்போது மாணவர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனரா? என அறிந்து பேசுதல் வேண்டும். எனவே அதற்கேற்ற வகையில் இடையிடையே மாணவர்களிடம் வினா கேட்க வேண்டும். அவர்கள் விடையளிப்பதன் மூலம் அவர்கள் கேட்டு வருவதை அறியமுடியும்.
ஆசிரியர் கூறுவதைச் சில மாணவர்கள் அரைகுறையாகக் கேட்பர். அதற்கு ஏற்றாற்போல் ஆசிரியர் முன்னதாகவே நான் கூறும் செய்தியை முழுமையும் கேட்டு அதன்பின்னர் ஐயங்களைக் கேளுங்கள் எனக் கூறுதல் வேண்டும்.
ஆசிரியர் மாணவர் உறவுநிலை சரியானதாக அமைதல் வேண்டும். மாணவர் வெறுப்பு மனப்பான்மையுடன் இருந்தால் ஆசிரியர் எத்துணை சுவையாகக் கூறினாலும் கேட்கமாட்டார்கள். எனவே சிறந்த கேட்டல் நிகழ வேண்டுமாயின் ஆசிரியர் மாணவர் உறவுநிலை சரியாக அமைந்திருத்தல் வேண்டும்.
ஆசிரியர் பேச்சைக் கேட்டு மாணவர் மையக்கருத்தையும் படிப்படியான வளர்ச்சியையும் அறிந்து கொள்ளும்வண்ணம் ஆசிரியர் நன்கு தயாரித்து முறையாகப் பேசுதல் வேண்டும். அப்பொழுதுதான் மாணவர் மையக்கருத்தையும், அதனை விளக்கக் கூறும் எடுத்துக்காட்டுக்களையும் நன்கு அறிவார்கள்.
தொடக்கநிலை வகுப்புகளில் மாணவர்களது குடும்பம், ஊர் முதலான தலைப்புகளில் அவர்களுக்குள்ளே பேசிக் கேட்கச் செய்தல்வேண்டும். நடுநிலை வகுப்புகளில் பொதுத்தலைப்புகளைப் பற்றிப் பேசிக் கேட்கச் செய்யலாம். பின்னர்க் கதைகளைக் கூறி அவற்றிலிருந்து சில வினாக்களைக் கேட்கலாம்.
உரைநடைப்பாடத்தைப் படித்து மாணவர்களைக் கேட்கச் செய்தல் வேண்டும். நடுநிலைப் பள்ளிகளில் பாடநூல்களைப் பயன்படுத்துவதோடு நூல் நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட பொதுநூல்களிலிருந்தும் ஒரு பகுதியைப் படித்து அவர்களைக் கேட்கச் செய்யலாம்.
ஒருவர் பேச்சை நேரில் கேட்பதைவிட வானொலிப் பேச்சைக் கேட்பது சற்றுச் சிக்கல் நிறைந்ததாகும். வானொலிப் பேச்சு ஒரு பொதுவான வேகத்தில் அமையும். இடையில் நிறுத்தமின்றிச் செல்லும். எனவே வானொலி கேட்டல் திறனுக்கு அதிக கவனிப்புத் திறன் தேவை. அதனால் முன்னதாகவே மாணவர்கள் எதைப் பற்றிக் கேட்க இருக்கின்றனரோ, அந்தச் செய்திகளைக் குறித்துக் கொள்ளவேண்டும். வானொலிப் பாடல் முடிந்தவுடன் சிறுசிறு வினாக்கள் கேட்கப்படும் என்பதனை மாணவர்களுக்கு முன்கூட்டியே கூற வேண்டும். அப்போதுதான் வானொலி கேட்டலை ஊன்றிக் கேட்பார்கள்.
கல்வி உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான துணைக்கருவியே ஒலிப்புத்தகம். ஒரு நூலை ஒலிப்புத்தமாகப் பதிவுசெய்துவிட்டால் அதனை நம் விருப்பப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டுக் கேட்கலாம். இப்புத்தகத்தில் ஒலியின் அதிர்வுகள் பதிவு செய்யப்படுகின்றன. வேண்டாத ஒலிகளை அழித்து விட்டுப் புதிய ஒலிகளைப் பதிவு செய்யலாம்.
மாணவர்களுக்குத் தேவையான குறிப்பிட்ட பகுதியை மட்டும் கற்றுத் தருவதற்கான ஒலிப்பதிவு நாடாக்கள் தயாரிக்கப்பட்டன. மாணவர்களின் இயல்புக்கு ஏற்றவாறு மொழி நடையை ஆசிரியர் பயன்படுத்த வேண்டும். ஒலிப்புத்தகத்தைக் கொண்டு பாடம் நடத்தும்போது ஆசிரியர் பேசிக்கொண்டு இருக்காமல் மாணவரோடு சேர்ந்து உரையாட வேண்டும், (பாடல்), பாடப்பொருளைத் தெளிவாக விளக்க வேண்டும். நல்ல குரல் வளம், குரலில் ஏற்ற இறக்கம், குரல் அழுத்தம் முதலான உத்திகளால் மாணவர்களுக்குக் கற்றல் அனுபவத்தை அளிக்கும் வகையில் ஒலிப்புத்தகம் அமைய வேண்டும்.
- சிந்திக்கும் திறன் பெருகும்.
- தன்னம்பிக்கை வளரும்.
- தாழ்வு மனப்பான்மை குறையும்.
- கேட்கும் திறனால் மொழியாற்றல் பெருகும்.
- நினைவாற்றல் அதிகரித்து ஆக்கத்திறன் பெருகும்.