தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
---|
|
3.6 தொகுப்புரை
தொகுப்புரை
மொழியின் அமைப்பைப் பொதுவாகக் குழந்தைகள் தாயிடமிருந்தும், பிறர் பேசுவதைக் கேட்டும் கற்றுக்கொள்கிறார்கள். எனவே புதிய செய்திகளை அறிந்து பொருளுணரவும், தற்கருத்து வளர்ச்சிக்கும் கேட்டல் காரணமாகிறது. தமிழ்மொழியைப் பயன்படுத்தும் முறையானது பேச்சுமொழியில் ஒருவகையாகவும் எழுத்துமொழியில் வேறொரு வகையாகவும் கையாளப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பேசுதல் திறனை வளர்க்க வேண்டும். அச்சிலோ, கையெழுத்திலோ உள்ள செய்திகளைக் கண்ணால் பார்த்து வாயால் உச்சரித்து மனத்தால் பொருளுணர்ந்து படிக்கும் திறனையும் வளர்க்க வேண்டும். ஒருவருடைய எண்ணங்களை வெளிப்படுத்தப் பேச்சு துணை நிற்பதுபோல எழுத்தும் துணை நிற்கிறது; எனவே, எழுதுதல் திறனையும் வளர்க்க வேண்டும். கேட்டு, பேசி, படித்து, எழுதித் தாம் கூற வந்த கருத்துகளைப் பிறர் அறியும்படி கூறும் திறனையும் வளர்க்க வேண்டும். கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய அடிப்படைத்திறன்களுடன் இணைத்துச் சிந்தனைத்திறனை வளர்க்க வேண்டும். இத்திறன்களின் அடிப்படையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் இனிமையாகவும், முறையாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.