பெட்டிச் செய்தி தமிழ்த் தட்டச்சு செய்வதன் மூலம் எழுதுதல் திறனில் சிறப்பாகப் பயிற்சி பெற முடியும் |
3.4 எழுதுதல் திறன்
எழுதுதல் திறன்
மொழிப் பயிற்சியில் படிப்பதற்கு அடுத்த நிலையில் கற்பிக்கப் பெற வேண்டிய ஒன்று எழுத்துப்பயிற்சியாகும். நேரில் இருப்பவர்களுக்குப் பேசுவதன் மூலம் எண்ணங்களை வெளியிடுகின்றோம். நேரில் இல்லாதவர்களுக்கு எழுத்து மூலமாக எண்ணங்களைத் தெரிவிக்கின்றோம். மடல்கள் வரையவும், நூல்கள் இயற்றவும் அறிஞர் பெருமக்களின் எண்ணங்களையும் ஆய்வுரைகளையும் வெளியிடவும் உதவியாய் இருப்பது எழுத்து ஆகும்.
ஒரு மொழியிலுள்ள ஒலிகளை வரிவடிவங்களாக அமைப்பது எழுத்தாகும். வரிவடிவ எழுத்துகளை எழுதிக் காட்டச் செய்தலே எழுத்துப் பயிற்சியாகும்.
எழுதுதல் என்பது எக்காலத்திலும் நிலைத்திருக்கும், இடம் கடந்தும் காலம் கடந்தும் தொடர்பு கொள்ள முடியும், இதுவே எழுதுதல் திறனின் முக்கிய நோக்கமாகும்.
மாணவர்கள் செறிவுடனும் அழகுடனும் விரைவுடனும் எழுதக் கற்றுக் கொண்ட பிறகு தக்க பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
குழந்தைகள் எதைப் பார்த்தாலும் அதன்படியே பார்த்து எழுத விரும்புகின்றனர். இவ்விருப்பத்தை ஆசிரியர்கள் வளரச் செய்து பயன்படும் முறைகளில் கொண்டு செல்லுதல் வேண்டும். முதலில் பெயர்கள் எழுதிய படங்களைக் குழந்தைகளுக்குக் காட்டி வரையச் செய்யலாம்.
- கையெழுத்து திருத்தமாய் அமையப் பயற்சி தரலாம்.
- விரைந்து எழுதுவதற்குப் பயிற்சி தரலாம்.
- உற்று நோக்கும் திறன் வளரும்.
- எழுத்துக் கூட்டி எழுதுவதற்கு உதவும்.
- சொல்லிக் கொண்டே எழுதுவதால் நல்ல மொழிப் பயிற்சி வளரும்
கையெழுத்துச் சிறந்து விளங்குவதற்கு வரியொற்றி எழுதுதல் சிறந்த பயிற்சி ஆகும். இருகோடுகள் அல்லது நான்கு கோடுகள் இட்ட குறிப்பேட்டில் எழுதுமாறு செய்தல் வேண்டும். மாணவர்கள் நாள்தோறும் இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நான்கு கோடுகளில் எழுதிப் பழகிய பின்னர் இருகோடுகளில் எழுதிப் பழகலாம். அச்சிட்ட பயிற்சியேடுகளையும் பயன்படுத்தலாம்.
ஆசிரியர் சொல்வதைக் கேட்டு மாணவர்கள் பார்க்காமல் எழுதுவதையே சொல்வதை எழுதுதல் எனப்படும். பார்த்து எழுதுவதைவிடக் கேட்டு எழுதுதலில் சுறுசுறுப்பும் விரைவும் அதிகமாக ஏற்படும். மாணவர்களின் ஆர்வம், எழுதும் வேகம், கேட்டல் திறன் ஆகியவை இதனால் மேம்படும். சொல்வதை எழுதுவதில் ஆசிரியர் சொல்ல மாணவர் கேட்டு எழுதுதல், மாணவர் சொல்ல மாணவர் எழுதுதல், பிறர் சொல்வதைக் கேட்டு எழுதுதல், தொலைக்காட்சி மற்றும் ஒலிநாடாக்களைக் கேட்டு எழுதுதல் ஆகியவை அடங்கும்.
கேட்டு எழுதுவதன் மூலம் எழுதுவதில் வேகம் கூடும், கருத்துணர்ந்து எழுதும் ஆற்றல் மேம்படும், கேட்கும் பொருள் மனதில் நன்கு பதியும், ஒலி வேறுபாடுகளை மாணவர்கள் அறிவர். பிழைகளில்லாமல் எழுதும் பயிற்சி ஏற்படும். செவிப்புலன் உணர்ச்சி தூண்டப்படும், நினைவாற்றல் வளரும்.
எழுதுதல் திறனைப் பெறுவதற்குப் பல வகைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் தசைப்பயிற்சி, விரலால் கிறுக்குதல், எளிய படங்கள் வரைதல், வெட்டி ஒட்டுதல் சிறந்த பயிற்சிகளாகும்.
கைவிரல்கள் மற்றும் மணிக்கட்டுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும். இதற்காகப் புத்தகங்களை அடுக்கவும், தூக்கி வைக்கவும் செய்யலாம். அப்போது தசைநார்கள் நன்கு வளர்ச்சியடையும்.
தரையில் மணலைப் பரப்பி அதன்மேல் வலது ஆட்காட்டி விரல் கொண்டு அவர்கள் விருப்பம் போல் எழுதுமாறு பயிற்சி செய்தல் வேண்டும்.
பரங்கிக்காய், மரங்கள், ஆரஞ்சு, ஏணி முதலிய படங்களை வரையச் செய்து தசைநார்களை வலுப்பெறச் செய்யலாம்.
அட்டையில் பல உருவங்களை வெட்டி எடுத்துவிட்டு அந்த அட்டையை ஒரு தாளின்மேல் வைத்து வண்ணப்பென்சிலால் உருவத்தை உண்டாக்குதல் வேண்டும். உருவங்களை வரையவும் உருவங்களின் இயல்புகளைப் புரிந்து கொள்ளவும் இப்பயிற்சி உதவும்.
இடமிருந்து வலமாக எழுதப்பெறும் மொழி நம் தமிழ் மொழியாகும். இம்மொழியில் எழுத்துகள் வட்ட வளைவு, சுழி, மேற்கோடு ஆகிய பல அமைப்புகளைக் கொண்டுள்ளன.
படிப்பவர் புரிந்துகொள்ளும் வகையில், எழுத்துகளைத் தனித்தனியாக எழுதுதல் வேண்டும். எழுத்துக்களுக்கு உரிய உருவங்களைச் சிதைக்காமல், கூட்டாமல், குறைக்காமல் சரியான இடைவெளி ஏற்படுத்தி எழுத வேண்டும். மேலும், தேவையான இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுதல் வேண்டும். இக்கூறுகளை நன்கு கவனித்து எழுதினால் எழுத்தில் தெளிவு வரும்.
எழுத்துகள் ஒரே அளவாய், சீராய் இருந்தால் அதுவே ஒரு தனியழகாக இருக்கும். ஒரு வரியில் பெரியதாகவும், மறு வரியில் சிறியதாகவும், சில வரிகளில் இடைப்பட்டதாகவும் எழுதினால் பார்ப்பதற்கே வெறுப்பாகத் தோன்றும். எழுத்துகளின் உருவங்கள் சரியாய் அமைவதோடு மேற்கோடு, சுழி முதலியவையும் ஒரே அளவாய் அமைதல் வேண்டும். எழுத்துக்கு எழுத்து, சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி இடைவெளி விட்டு ஒரே அளவாக எழுத வேண்டும்.
எழுத்துகள் அழகாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டுமென்பதற்காக மிகவும் மெல்ல நிறுத்தி எழுதக்கூடாது. தெளிவாகவும் விரைவாகவும் எழுதி, அழகையும் கூட்ட வேண்டும். ஆசிரியர் ஒரு பகுதியை எழுதச் சொல்லி நிறுத்து என்றதும் நிறுத்தச் செய்து எடுத்துக் கொண்ட கால அளவைக் கணக்கிட்டு மாணவர்களிடம் உள்ள எழுத்து விரைவைக் கணக்கிடலாம். எழுத்து விரைவை அதிகரிக்கச் செய்தல் ஆசிரியரின் கடமையாகும்.
இடைவெளிகள் விட்டு எழுதுகின்றபொழுது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். தேவையற்ற முறையில் சிலவற்றைச் சேர்த்து எழுதுவதையும் கோடுகளை வளைத்தும் நீட்டியும் எழுதுவதையும் தவிர்த்தல் சிறந்தது. புள்ளிகளை வட்டமாகச் சிலர் எழுதுவர். இவ்வாறு எழுதக் கூடாது. முத்து முத்தாய் எழுதினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஒருவரது கையெழுத்தைக் கொண்டே அவரது குணவியல்புகளைக் கூறலாம் என்கிறார்கள்.
சொல்லுக்குச் சொல் இடைவெளி விட்டு எழுதுதல் வேண்டும். பத்தியைத் தொடங்கின்றபொழுது பாதியிலிருந்து தொடங்குதல் வேண்டும். இடைவெளி விட்டு எழுதுகின்ற எழுத்து அழகுடன் விளங்கும். எழுத்துகளின் ஒழுங்கு வரிசையை வீதியின்கண் அமைந்த மாடமாளிகையின் வரிசைக்கு ஒப்புமைகாட்டிப் புலப்படுத்தியிருக்கிறார் தமிழ்ப் புலவர் கச்சியப்ப முனிவர்.
- கையெழுத்து திருத்தமாய் அமைவதற்கு வழி வகுக்கும்
- விரைவாக எழுதுவதற்குப் பயிற்சியாக அமையும்.
- மனத்தை ஒரு நிலைப்படுத்தும் ஆற்றல் வளரும்.
- கருத்து வளம் ஏற்பட வழி வகுக்கும்.
- உற்றுநோக்கும் திறன் வளரும்.