3.5 மொழிபெயர்ப்பும் மொழியாக்கமும்
மொழிபெயர்ப்பும் மொழியாக்கமும்
அடிப்படை மொழித்திறன்களில் நன்கு பயிற்சி பெற்றப்பின் மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பும் மொழியாக்கமும் பற்றி புரிய வைப்பது சிறந்த மொழி ஆற்றலை வளர்ப்பதாகும்.
அறிவுப் பெருக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் கருத்துகளும் தோன்றியவாறுள்ளன. ஒரு மொழியினரால் கண்டறியப்பட்ட அல்லது எடுத்துரைக்கபட்டவை அவர் மொழியிலிருந்து (தருமொழியிலிருந்து) இன்னொரு மொழிக்கு (பெறுமொழி) வந்தடைய மொழிபெயர்ப்பு இன்றியமையதாகிறது. எனவே, தருமொழியிலிருந்து பெறுமொழியில் எழுத ஒரு மொழி அறிவு தேவைப்படுவதோடு, அவற்றை மொழிபெயர்த்து எழுதும் முறைகளின் அறிவும் தேவை.
தற்போதுள்ள நிலையில், பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து எழுதும் திறனை மொழிக் கல்வியில் வளர்த்தல் கற்பிப்பு நோக்கங்களுள் ஒன்றாகும். மொழிபெயர்ப்பு முறைகளை அறியும் முன்னர், மொழி பெயர்ப்பு நிலைகள், வகைகள், பொருந்து நிலைகள் ஆகியன பற்றித் தெரிதல் வேண்டும்.
நடைமுறையில் எழுதியதை மொழிபெயர்த்தல், பேசும்போது மொழிபெயர்த்தல் என இருநிலைகள் மொழிபெயர்ப்பில் உள்ளன.
‘மொழிபெயர்ப்பு’ எனும்போது எழுதியதை மொழி பெயர்த்தலே குறிக்கப்படுகிறது. மொழிப் பாடத்திட்டத்தில் எழுதியதை மொழி பெயர்க்கும் திறனை வளர்ப்பதே மொழிப்பாட நோக்கங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஒரு மொழியில் எழுதப்பட்டதைப் பொருள் புரியப் படித்து, அவற்றை இன்னொரு மொழியில் - அதாவது தருமொழியிலிருந்து பெறுமொழியில் எழுதுவதை இது குறிக்கும்.
ஒருவர் பேசும்போது, இடையிடையே அவர் பேசியதை இன்னொரு மொழியில் தருவதும் மொழி பெயர்ப்பின் ஒரு நிலையாகும். இது, முதலில் குறிப்பிட்டதிலிருந்து கடினமான செயலாகும். எழுதியதை மொழிபெயர்க்கும் போது, பொருளையும் மொழியமைப்பையும் மீண்டும் மீண்டும் நோக்கிச் செம்மையாக மொழிபெயர்க்க இயலும்.
மொழிபெயர்ப்பு பொதுவாக செய்தி நீர்மை மொழிபெயர்ப்பு, வாக்கிய நீர்மை மொழிபெயர்ப்பு என இருவகைப்படும்.
தருமொழியிலுள்ள செய்தியை, பெறுமொழியில் செய்திக்கு முதன்மையிடம் கொடுத்து வெளிப்படுத்துவதாகும். கடிதங்கள், அறிக்கைகள் போன்றனவற்றிற்கு இம்மொழிபெயர்ப்புப் பொருந்துவதாகும். இவ்வகை மொழிபெயர்ப்பில் தருமொழியிலுள்ள சொற்கள், சொற்றொடர்கள் வாக்கியங்கள் ஆகியனவற்றிற்கு இணையான சொற்கள் பெறுமொழியிலும் காணப்படும். வாக்கிய அமைப்பு மாற்றங்கள் தவிர பிறவகையான மொழி மாற்றங்கள் இவ்வகை மொழிபெயர்ப்பில் காணப்படாது.
The State shall endeavor to provide, within a period of
Ten years from the commencement of this Constition, for
Free and compulsory education for all children until they
Complete the age of fourteen years.
எனும் பகுதி,
இந்த அரசியல் சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டதிலிருந்து, பத்து ஆண்டுகளுக்குள், பதினான்கு வயது முடியும் வரையில் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க மாநில அரசு முயலும்.
என்பது செய்தி நீர்மை மொழிபெயர்ப்பாகும். தருமொழியிலுள்ள சொற்களுக்கு இணையான சொற்கள் பெறுமொழியிலிருப்பினும் மொழியமைப்புக் கருதி, அவை இடமாற்றம் பெற்று, தருமொழிப் பகுதியில் பொருள் மாற்றமின்றி பெறுமொழிப் பகுதியில் அமைந்துள்ளதை நோக்கலாம்.
தருமொழியிலுள்ள கருத்துகளையும் மொழிகையும் கருத்திற்கொண்டு, பெறுமொழியில் அவற்றை மேற்கொண்டு மொழிபெயர்ப்பதே இலக்கிய நீர்மை மொழிபெயர்ப்பாகும். இவ்வகை மொழிபெயர்ப்பு, உரைநடை, செய்யுள், உரையாடல் போன்ற பல்வேறு இலக்கிய வடிவங்களுக்கு மேற்கொள்ளப்படுவதாகும். இவ்வகை மொழிபெயர்ப்பை மேற்கொள்ள இரு மொழிகளிலும் நிகர்த்த மொழியறிவு தேவை.
('He is a man') என்பதை ‘அவன் இருக்கிறான் ஒரு மனிதனாக’ என மொழிபெயர்ப்பதோ, ‘அவன் ஒரு மனிதனாக இருக்கிறான்’ என மொழிபெயர்ப்பதோ ‘அவன் ஒரு மனிதன்’ என மொழிபெயர்ப்பதோ தவறாகும். ‘அவன் மனிதன்’ என்பதே தமிழ் மொழியமைப்பிற்கிணங்கியதாகும்.
தருமொழி, பெறுமொழி ஆகியன தமக்கெனக் கொண்டுள்ள மொழி அமைப்பு மரபுகள், மொழிபெயர்ப்பில் சிக்கலை ஏற்படுத்துகின்றன.
Where do you stand in your family?
என்பதை, வாக்கிய அளவில் மொழிபெயர்த்தால்,
'நீ உங்கள் குடும்பத்தில் எங்கே நிற்கிறாய்?' என அமையும். ஆனால் தமிழில் இவ்வாக்கியத்தின் பொருள் 'நீ உங்கள் வீட்டில் எத்தனையாவது பிள்ளை?' என்பதாகும்.
மொழிபெயர்ப்பு ஓர் அரிய கலையாகும். மொழிக்கு மொழி அகராதிகள் தயாரிக்கப்படுவதைப் போல மொழிக்கு மொழி, மொழி பெயர்க்கும் முறைகளை வகை தொகை செய்து தரும். மொழி மாற்ற முறைக்கு கையேடுகள் உருவாக்குவது மொழிவளர்ச்சிக்கு ஆற்றும் தொண்டாக அமையும். மொழிபெயர்ப்புக்கலை வளரும் வகையில் பல்வேறு அறிஞர்கள் தத்தம் போக்கிற்கேற்ப கருத்துகளைத் தந்துள்ளனர். அவற்றை நுணுகி ஆய்ந்து, அவற்றை அடிப்படையாகக் கொண்ட பயிற்று முறைகளை வரையறுப்பது, தமிழ்க் கல்வியாளர்கள் எதிர்நோக்கும் பணியாகும்.
மொழி கற்பிப்பதில், மொழிபெயர்ப்பைப் போன்றே மொழியாக்கம் இன்றைய சூழலில் பாடத்திட்டத்தில் மிகுதியும் அழுத்தம் தரப்படவேண்டிய ஒன்றாகும்.
ஒரு மொழியில் புதிய சொற்களை உருவாக்குதல், மொழியாக்கம் அல்லது கலைச் சொல்லாக்கம் எனப்படும் (மொழி - சொல்). இவ்வரையறையிலிருந்து, 'மொழியில் சொற்கள் இல்லையா?' போன்ற வினாக்கள் எழக்கூடும்.
தமிழ் மக்களின் உணவுப் பழக்கங்களால், ஆப்பம், இட்லி, தோசை போன்ற சொற்கள் தமிழில் தோன்றின. ஆங்கிலத்தில் cake, bread போன்ற சொற்கள் உள்ளன. தமிழில் இல்லை. இவ்வாறே, நிலவிவரும் கருத்துகளுக்கேற்பவும், தோன்றும் கருத்துகளுக்கு ஏற்பவும் அவ்வப்போது மொழியில் புதிய சொற்கள் உருவாகின்றன. சொற்கள் இயல்பாகவே உருவாகவும் கூடும்.
புதிய சொற்களை உருவாக்குவது, மொழியறிவு சார்ந்த உயர் திறனாகும். இத்திறன், மொழிப்புலமை, துறையறிவு ஆகிய இரண்டும் இணைந்து பெறப்படுவதாகும்.
மொழியாக்கத் திறனைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, மொழியாக்க முறைகள், பண்புகள், கற்பிப்பு முறைகள் ஆகியன பற்றிய தெளிந்த அறிவு தேவை.
தமிழ் மொழியில் காலப்போக்கில் இயல்பாகப் புதிய சொற்கள் தோற்றம் பெரினும், (Screw driver - திருப்புளி) காலத்தேவை நோக்கி அவ்வப்போது, தமிழறிஞர்களாலும், பல்துறை அறிஞர்களாலும் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. சொற்கள் உருவாக்கப்படுவதற்கு முறைகள் வரையறுக்கப் படாமலிருந்தாலும் இந்நாள்வரை ஆக்கப்பட்ட சொற்களிலிருந்து சில பொது வழிமுறைகளைக் காண முடிகிறது. அம்முறைகள் பெரும்பாலும் ஒலி பெயர்ப்பு, மொழி பெயர்ப்பு, கருத்துப் பெயர்ப்பு, பழஞ்சொல் தேர்வு என அமைகின்றன. இவையின்றி பிற முறைகளை வரையறுத்துக் காண்பது மொழி வளர்ச்சி முனைப்புடையோரின் கடனாகும்.
ஒரு மொழியில் ஒரு சொல் எவ்வாறு ஒலிக்கப்படுகிறதோ அவ்வாறே ‘மொழியாக்கம்’ பெற்றுப் பிறமொழியிலும் ஒலிக்கப் பெறுவதே ‘ஒலி பெயர்ப்பு’ ஆகும். Cycle, Car, Tea போன்றன. சைக்கிள், கார், தே(யிலை) எனத் தமிழில் வழங்கப்படுகின்றன. இது ஒலிபெயர்ப்பு முறையின் பாற்படும்.
தமிழில் பெரிதும் மேற்கொள்ளப்பட்டு வரும் மொழி ஆக்க முறை, ‘மொழிபெயர்ப்பு’ முறையாகும். மொழிபெயர்ப்பிற்கு ஆங்கிலமே பெரும்பாலும் தருமொழியாக உள்ளது.
Telephone, Television போன்றன. தொலைபேசி, தொலைக்காட்சி எனத் தருமொழியின் பொருள் மொழிபெயர்ப்பாக அமைகின்றன. இம்முறை ஒலிபெயர்ப்பு முறைக்கு அடுத்த நிலையில் ஆக்க எளிமையுடையதாகும்.
ஒரு மொழியில் உள்ள கலைச் சொற்கள் பிறிது மொழிக்கும் தேவையாகும் போது, அச்சொல் உணர்த்தும் பொருள் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்றவாறு புதிய சொல்லைப் படைத்துக் கொள்ளுதல் 'கருத்துப் பெயர்ப்பு' முறையாகும்.
(எ.கா)
'Bus' என்னும் சொல்லை 'பஸ்' என ஒலி பெயர்ப்பாக ஏற்பின் 'ஸ்' எனும் வடமொழி ஒலியைக் கொள்ள வேண்டுவதாகிறது. இதைத் தவிர்த்து ‘பசு’ என மாற்றின் பொருள் மாற்றம் ஏற்படுகிறது. எனவே, இச்சொல் 'பேருந்து' என, அச்சொல் குறிக்கும் பொருளின் தன்மையை வெளிப்படுத்தும் சொல்லாக ‘மொழியாக்கம்’ பெற்றுள்ளது.
மொழியாக்கத்தின் பண்புகளான அளவு, இனிமை, சீர்மை, தெளிவுடைமை பற்றி விளக்கப்படுகின்றன.
புதிய சொற்களின் நிலைப்புத் தன்மைக்கு அதன் ‘அளவு’ இன்றியமையாததோர் ஏதாகும். ஓரசை, ஈரசை, மூவசை என அசையை அடிப்படையாகக் கொண்டு அளவு குறிக்கப்படுகின்றது. சொல்லின் அளவும் நிலைப்புத் தன்மையும் எதிர் விகிதத்தில் அமையும்.
‘இனிமை’ என்பது ஒலிப்பின் இனிமையைக் குறிப்பதாகும். தமிழ் இலக்கணங்கள் வரையறுத்துத் தந்த மொழி முதல், இடை, கடை எழுத்துகள் மொழியின் எளிமையைக் காப்பதற்கென்றே அமைந்துள்ளவெனன் கொள்ளலாம். இலக்கண நூற்கள் தரும் அவ்விதிகளை மீறாதவாறு உருவாக்கப்படும் சொற்கள் ஒலிப்பு இனிமை கொண்டதாகவே அமையும்.
சொல் 'எளிமை'க்காக கருதப்பட வேண்டிய மற்றுமோர் சிறப்புக் கூறு.
'சீர்மை' என்பது ஒழுங்கு நிலையைக் குறிக்கும். தமிழ்ச் சொற்களில் விகுதிகள் சில ஒழுங்கு முறைக்கு உட்பட்டே அமைவதைக் காணலாம். தொழில் பெயர்கள் ‘அல்’ விகுதியிலும் பண்புப் பெயர்கள் ‘மை’ விகுதியிலும் பெரும்பாலும் அமைந்திருப்பதைக் காணலாம். சொல்லாக்கத்திலும் இவ்வாறாக ஒழுங்கு முறைகளை வரையறுத்துக் கொண்டு சீர்மைப் பண்பை மேற்கொள்ளல் வேண்டும்.
‘சொல்லாக்கம்’ மேற்கொள்ளும் போது, புதிய சொற்களின் பொருள் தன்மைக்கு ஏற்ப, சொற்களில் விகுதிகள் ‘சீர்மை’யோடு அமைதல் வேண்டும்.
சொல்லாக்கச் சீர்மை, பொருள் தன்மைக்கு எற்ப அமைவது போல, பாடப் பொருளுக்கு ஏற்பவும் அமைதல் வேண்டும். இச்சீர்மை விகுதிகள், முதல்நிலை, ஒலிப்பு ஆகியனவற்றின் அடிப்படையில் அமையலாம். எடுத்துக்காட்டாக, Mean, Median, Mode ஆகிய மையப் போக்கு அளவைகள் நடுவு, அகடு, முகடு என ஒலிச்சீர்மை பெற்றுள்ளன. வகை தொகை நெறி சார்ந்த அறிவுக்களக் கூறுகளான Knowledge, Understanding, application, skill என்பன 'அறிதல்', 'புரிதல்', 'பயன்படுத்துதல்', என அல் விகுதிகளின் சீர்மை கொண்டுள்ளன.
உருவாக்கப்படும் புதிய சொல், பொருள் மயக்கம் தராமலும், மொழிப்பயன்பாட்டின் அனைத்துச் சூழலிலும் பொருந்துமாறும், சொல் குறிக்கும் பொருளை உள்ளடக்கியதாகவும் அமைதல் வேண்டும். இத்தகைய கூறுகளே ‘தெளிவுடைமை’ எனக் கொள்ளப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, 'Confidential' எனும் சொல்லை நோக்குவோம். இச்சொல் 'மந்தணம்' எனப் பெயர்க்கப்பட்டு, புதிய அலுவலக ஆட்சிச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.
மொழிபெயர்ப்பைப் போன்றே மொழியாக்கமும் ஓர் அரிய கலையாகும். இக்கலைத் திறனை வளர்க்க இன்றைய பாடத் திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. பெரும்பாலான ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் தமிழ் கற்பிப்பு முறைகளும் மொழியாக்கதிறன் வளர்க்கும் தன்மையில் இல்லை. உயர்நிலைத் திறனாக இத்திறன் வளரும் அடிப்படை மொழியறிவை ஊட்டுதல் தமிழாசிரியர்களின் கடனாகும். இந்நாள் வரை, இத்திறன் வளர்க்கும் வரையறுத்த கற்பிப்பு முறைகள் இல்லாவிடினும், மாணவர்களுக்குச் சொல்லமைப்பு அறிவூட்டுவதாலும். அகராதி, நிகண்டு, சொற்களஞ்சியம் ஆகியவற்றை கையாளும் திறனை வளர்ப்பதாலும் மாணவர்களைச் சொல்லடைவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தியும் மொழியாக்கத் திறனை வளர்க்கலாம்.
மொழியாக்கத் திறன் வளர, மொழியின் சொல்லமைப்பு பற்றிய தெளிவான அறிவுதேவை. நன்னூலில், சொற்களின் அமைப்புகள் பற்றித் தெளிவான கருத்துகள் உள்ளன. பெயரியல், வினையியல் போன்ற பகுதிகளில் சொற்களின் பகுதிகள் விகுதிகள் போன்றன வரையறைப் படுத்திக் கூறப்பட்டுள்ளன.
தமிழிலுள்ள செய்யுள் இலக்கியங்கள் சொற் கருவூலமாகத் திகழ்கின்றன. துறைப்புலம் போகிய புலவர் பெருமக்கள் இலக்கியங்களைக் கவினுறப் படைத்துள்ளனர். அப்படைப்புகளில் புலவர்கள் மேற்கொண்டுள்ள சொல்லாட்சிகள், சொல்லமைப்பு உத்திகள் அனைத்தும் மொழியாக்கத் திறனுக்கு வழிகாட்டுவனவாகும்.
எடுத்துக்காட்டாக,
‘வானமே எனக்கு வந்துவந் தோங்கும்
மார்க்கமே மருளர்தாம் அறியா’
எனும் பாடலை நோக்குவோம். இப்பாடலடியில் ‘மருளர்’ எனும் சொல் ‘மருள்’ எனும் சொல்லடியாய் பிறந்தது என்பதையும் ‘அர்’ எனும் விகுதி பெற்று மருளுகின்ற தன்மை உடையவரைக் குறிப்பதையும் மாணவர் அறியச் செய்தல் வேண்டும்.
மாணவர்களின் சொற்களஞ்சிய அறிவு, வெறும் சொற்தொகுதிகளாக மட்டும் அமையாமல், சொல்லின் பகுதி, விகுதி போன்ற உறுப்புகளைப் பற்றிய தன்மைகளையும் கொண்டிருந்தால் புதிய சொற்களை முறையாக உருவாக்கும் திறன் அவர்களிடையே வளரும்.
தற்போதைய பாடத்திட்டத்தில், அகராதியைப் பயன்படுத்தும் திறனை வளர்த்தல் என்பது நோக்கங்களுள் ஒன்றாகக் குறிக்கப்படினும், மேல்வகுப்புகளில் இத்திறனை வளர்க்கும் வகையில் பாடநூல்கள் தயாரிக்கப்படவில்லை. அகர முதலாக, சொற்கள் நிரல்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அகராதியைப் பயன்படுத்தும் பழக்கமிருப்பின், ஒரு சொல்லைக் கற்கும் போது, அதோடு சொல்லமைப்பாலும் பொருளமைப்பாலும் தொடர்புடைய பல சொற்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.